தமிழக பத்திரப்பதிவு அலுவலகங்களில் ஒரே நாளில் கிடைத்த ரூ.192 கோடி வருவாய்

தமிழக பத்திரப்பதிவு அலுவலகங்களில் ஒரே நாளில் கிடைத்த ரூ.192 கோடி வருவாய்
தமிழக பத்திரப்பதிவு துறை அலுவலகங்களில் ஒரே நாளில் ரூ.192 கோடி வருவாய் கிடைத்து உள்ளது.

டிசம்பர் 14ம் தேதியான நேற்று ஒரே நாளில் மட்டும் தமிழக பத்திரப்பதிவு துறைக்கு 192 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாகவும், இந்த நிதியாண்டில் ஒரு நாளில் இவ்வளவு கோடி பதிவு துறைக்கு வந்தது இதுதான் முதல்முறை என வணிக வரித்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் பதிவுத் துறை முழுமையாக கணினிமயமாக்கப்பட்டு, ஸ்டார் 2.0 மென்பொருள் வாயிலாக, இணையதளத்தில் பத்திரப்பதிவுகள் நடந்து வருகின்றன. பத்திரம் பதிய விரும்புவோர், பத்திரத்தை எழுதி கொடுப்போர், பதிவு செய்ய வேண்டிய ஆவணங்கள் அனைத்தையும் முன்னதாகவே அதற்குரிய வெப்சைட்களில் பதிவு செய்யலாம். பத்திரப்பதிவுக்கான ஆவணங்களை பொதுமக்கள் தாங்களாகவே தயாரிக்கும் வசதியும், பத்திரப்பதிவு முடிந்ததுமே பட்டா மாற்றம் செய்யும் வசதியும் அமலில் இருக்கிறது.

பத்திரங்களை ஆன்லைனில் ஏற்றிய பின்னர் பத்திரங்களின் அடிப்படை சரிபார்க்கப்படும். அதன்பின்னர் விண்ணப்பதாரர் கேட்கும் நாள் மற்றும் சார்பதிவாளர்கள் பணிபுரியும் நாட்கள் ஆகியவற்றின் பணி அடிப்படையில் நேரம் ஒதுக்கப்பட்டு, பத்திரப் பதிவுக்கான டோக்கன்கள் வழங்கப்படுகிறது. மேலும் டோக்கன் பெற்று, குறிப்பிட்ட நேரத்தில் சென்று பத்திரப்பதிவு மேற்கொண்டு, அந்த பத்திரத்தையும் அன்றே பெறும் வசதியும் வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி தமிழகத்தில் சார் - பதிவாளர் அலுவலகங்களில், திங்கள் முதல் வெள்ளி வரை வேலை நாட்களில், 100 முதல் 1500 வரை டோக்கன்கள் வழங்கப்படும். அதிலும், குறிப்பிட்ட சில நாட்களில், அதிக பத்திரங்கள் பதிவாக வாய்ப்புள்ள சமயத்தில், இந்த எண்ணிக்கை கொஞ்சம் கூடுதலாகவும் இருக்கும். குறிப்பாக சுப முகூர்த்த நாட்களில் மக்கள் அதிகம் பேர் பத்திரப்பதிவு செய்ய ஆர்வம் காட்டுவார்கள். உதாரணமாக ஆடிப்பெருக்கு, புத்தாண்டு, தை பூசம், அமாவாசை வளர்பிறை சுபமுகூர்த்த நாட்களில் அதிகம் பேர் பத்திரப்பதிவு செய்ய விரும்புவார்கள். அப்படியான நாட்களில் கூடுதல் டோக்கன்கள் வழங்கப்படுகிறது.

அதேநேரம் புத்தாண்டு, தைபூசம், நிறைந்த முகூர்த்தங்கள் ஞாயிற்று கிழமைகளில் வரும். அப்படியான குறிப்பிட்ட விசேஷ நாட்களில் பத்திரப்பதிவு செய்வதை மக்கள் பெரிதும் விரும்புவார்கள். ஆனால், அந்த நாட்கள் பெரும்பாலும் அரசு விடுமுறை நாட்களாக வருவதால் அப்போது பத்திரப்பதிவு மேற்கொள்ள இயலாத நிலை முன்பு இருந்தது.

இந்நிலையில் இந்நிலையில், பத்திரப்பதிவுத் துறையின் வருவாயைப் பெருக்கும் வகையில், ஏப்ரல் 14-ம் தேதி சித்திரை முதல் நாள், ஆகஸ்ட் 3-ம் தேதி ஆடிப்பெருக்கு மற்றும், 2022 ஜனவரி 18-ம் தேதி தைப்பூசம் உள்ளிட்ட நாட்களில் பத்திரப்பதிவுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அந்த விடுமுறை நாட்களில் மேற்கொள்ளப்படும் பதிவுகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில் பதிவுத்துறையின் சார்பு அலுவலகங்களில் வழக்கமாக வழங்கப்படும் 100 டோக்கன்களுக்கு பதிலாக பொதுமக்களின் நலன் கருதி சுபமுகூர்த்த தினங்களில் 150 டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று (வியாழக்கிழமை) சுபமுகூர்த்த தினம் என்பதால், பதிவுத்துறையின் அனைத்து சார்பு அலுவலகங்களிலும் 150 டோக்கன்கள் வழங்கப்பட்டது. இதன் காரணமாக டிசம்பர் 14ம் தேதி (நேற்று) ஒரே நாளில் பத்திரப்பதிவு துறைக்கு 192 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.

இதுபற்றி வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "பதிவுத்துறையில் சார் பதிவகங்களில் 14.12.2023 அன்று ஆவணங்களின் பதிவு அதிகமாக எதிர்பார்க்கப்பட்டதால் கூடுதலான டோக்கன்கள் வழங்கப்பட்டன. 14.12.2023 அன்று பதிவு செய்யப்பட்ட 22060 ஆவணங்களின் மூலம் அரசுக்கு வருவாயாக ரூ.192 கோடி வரப்பெற்றுள்ளது. இந்த நிதியாண்டில் பதிவுத்துறையில் ஒரே நாளில் இதுவரை வரப்பெற்ற வருவாயில் நேற்றைய தினம் பெறப்பட்ட வருவாயே மிகஅதிகமானதாகும்" என கூறியுள்ளார்.

நாளை (டிசம்பர் 16) மார்கழி மாதம்தொடங்கும் நிலையில், கார்த்திகையின் கடைசி முகூர்த்த நாளான நேற்று (டிச 14)) பத்திரம் பதிய அதிகமான மக்கள் வந்து இருந்தார்கள் இதனால் தமிழகம் முழுவதுமே பத்திரப்பதிவு அலுவலகங்கள் மக்கள் வெள்ளத்தால் நிறைந்து காணப்பட்டது. மார்கழி முடிந்து இனி தை மாதம் பிறக்கும் போது தான் பத்திரங்கள் பதிவு அதிக அளவில் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story