ஊட்டி நகராட்சி மார்க்கெட் கட்டிடங்களை இடிக்க வியாபாரிகள் எதிர்ப்பு; ஸ்டாலினுக்கு மனு

ஊட்டி நகராட்சி மார்க்கெட் கட்டிடங்களை இடிக்க வியாபாரிகள் எதிர்ப்பு; ஸ்டாலினுக்கு மனு
X

ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் திரண்ட கடை வியாபாரிகள்.

ஊட்டியில் உள்ள நகராட்சி மார்க்கெட் கட்டிடங்களை இடிக்க, அங்குள்ள வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து, தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு மனு அனுப்பினர்.

ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் 1, 327 கடைகள் உள்ளன. ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட பழமையான கட்டிடங்கள் என்பதால், 3 கட்டங்களாக பிரித்து பழைய கடைகளின் கட்டிடங்களை இடித்து அகற்றிவிட்டு புதிய கட்டிடங்கள் கட்ட நகராட்சி நிர்வாகம் தீர்மானித்தது. இதற்காக கலைஞர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 18 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக 192 கடைகளை இடிக்கும் பணி விரைவில் தொடங்க உள்ளது. இதை அறிந்த ஊட்டி மார்க்கெட் வியாபாரிகள் சங்க தலைவர் ராஜா முகமது தலைமையில் ஏராளமான வியாபாரிகள் நேற்று மார்க்கெட் வளாகத்தில் திரண்டனர். தொடர்ந்து மார்க்கெட்டில் உள்ள கடைகளின் கட்டிடங்களை இடிக்க எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும் கட்டிடங்கள் நல்ல நிலையில் உள்ளதால் புதிய கட்டிடங்கள் கட்டும் முடிவை நகராட்சி நிர்வாகம் கைவிட வேண்டும் என வலியுறுத்தினர். இதைத்தொடர்ந்து வியாபாரிகள் ஊட்டி தபால் அலுவலகத்திற்கு சென்றனர். பின்னர் தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தனித்தனியாக தபால் மூலம் மனுக்களை அனுப்பி வைத்தனர்.

அதில் அவர்கள் கூறியுள்ளதாவது,

கடந்த -2016-ம் ஆண்டு நகராட்சி நிர்வாகம் மார்க்கெட்டில் உள்ள கடைகளுக்கு வாடகையை உயர்த்தியது. இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு மிகவும் கஷ்டப்பட்டோம். கொரோனா காலத்தில் வாடகையை கட்ட வேண்டும் என நிர்பந்தம் செய்ததால் சேமித்து வைத்திருந்த தொகையை கொண்டு வாடகையை செலுத்தினோம். தற்போது ஊட்டி மார்க்கெட்டை 3 பகுதிகளாக பிரித்து கடைகளை எடுத்து புதியதாக கட்டிடம் கட்ட போவதாக நகர மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளோம்.

மார்க்கெட்டில் உள்ள 1, 327 கடைகளை எடுத்து விட்டு கீழ்த்தளம் வாகனம் நிறுத்துவதற்கும், மேற்பகுதியில் கடைகள் கட்டப்ப்பட உள்ளதாகவும் தெரிகிறது. ஊட்டி ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நகராட்சி வசம் ஒன்றே முக்கால் ஏக்கர் நிலம் உள்ளது. அங்கு வாகன நிறுத்தம் வசதி செய்யாமல் பழமை வாய்ந்த தினசரி மார்க்கெட்டில் வாகனம் நிறுத்தம் மையம் அமைத்தால் வியாபாரிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும்.

எனவே, தமிழக முதல்-அமைச்சர் பழமை மாறாமல் இருக்கும் ஊட்டி மார்க்கெட்டில் உள்ள கடைகளை இடிக்காமல் புனரமைத்து தர வேண்டும். மேலும் ஓய்வு பெற்ற நீதிபதியை கொண்டு கடைகளை ஆய்வு செய்ய வேண்டும்.

இவ்வாறு மார்க்கெட் வியாபாரிகள் தரப்பில் அந்த மனுக்களில் கூறப்பட்டு உள்ளது.

Next Story