பழனிக்கு பாதயாத்திரை புறப்பட்ட முருக பக்தர்கள்

குமாரபாளையம் உடையார்பேட்டை ராஜவிநாயகர் கோவிலில், இருந்து முருக பக்தர்கள் பாதயாத்திரை புறப்பட்டனர்.
தைப்பொங்கல் பண்டிகையையொட்டி குமாரபாளையம் மற்றும் சுற்றுப்புற பகுதியில் விசைத்தறி கூடங்கள் ஒரு வாரத்திற்கு விடுமுறை விடுவது வழக்கம். இந்த விடுமுறையை பயனுள்ள வகையில் கழிக்க, பழனிக்கு பாதயாத்திரை செல்வார்கள். நேற்று குமாரபாளையம் உடையார்பேட்டை ராஜவிநாயகர் கோவிலில் இருந்து முருக பக்தர்கள் பெரும்பாலானோர் பாதயாத்திரை தொடங்கினர். இதே போல் கருமாரியம்மன் கோவில், காளியம்மன் கோவில், முனியப்பன் கோவில், திருவள்ளுவர் நகர் மங்களாம்பிகை, மகேஸ்வரர் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் இருந்து பழனிக்கு, பாதயாத்திரை துவங்கினர். இவர்கள் சிறப்பு வழிபாடு நடத்தி, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினா்.
இதுபற்றி முருக பக்தர்கள் கூறியதாவது;
பழனி ஒரு புண்ணிய பூமி. சித்தர்கள் வாழ்ந்திருந்த இடம். அதன் மீதுதான் அழகும் இளமையும் கொண்ட 'தண்டாயுதபாணி' என்ற முருகனை மலை உச்சி மீது இருந்த பதினெட்டு சித்தர்களில் ஒருவரான 'போகர்' என்ற சித்தர் பிரதிஷ்டை செய்துள்ளார். 'போகர்' அற்புதமான சித்தர். 'இலாயிரம்' மற்றும் 'போகர் பன்னிராயிரம்' என்ற இலக்கியத்தை படைத்தவர். இன்றைக்கும் கூட யாருமே அறிந்திராத வகையில் உள்ள ஒன்பது நவபாஷம் என்ற கடுமையான விஷங்களைக் கொண்டு அந்த சிலையை செய்துள்ளார். உலகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கில் மக்கள் வந்து அங்கு வணங்கும் வகையில், அந்த சிலை தெய்வீகத் தன்மையைப் பெற்று உள்ளது. அந்த சிலையை வந்து வணங்குவது புராணப் பழக்கங்களில் ஒன்று.
'திருமுருகாற்றுப் படை'யில் 'மகாலஷ்மி', 'காமதேனு', 'இந்திரன்' போன்றவர்கள் 'அவினான்குடி' என்ற பழனிக்குச் சென்று வழிபட்டதாகக் கூறப்பட்டு உள்ளது. அந்த தெய்வ பழக்க முறையை தொடர்ந்தே மக்கள் இந்த மலை மீதான ஆலயத்திற்கு சென்று இந்தப் பிறவியில் வளம் பெற்று வாழவும் அடுத்த பிறவியின் இரகசியங்களை அறிந்து கொள்ளவும் செல்கின்றனர். 'அருணகிரிநாதர்' என்ற துறவி 'இகப்பரசுபாக்கியம் அருள்வாயா' எனப் பாடுகிறார்.முருகனைப் பல வழிகளிலும் வழிபடலாம் என்றாலும் பக்தி மார்க்க வழிபாடே சிறந்த மார்க்கம். பாத யாத்திரை என்ற நடைப் பயணம் அதில் ஒரு மார்க்கம். கடவுளின் அருளைப் பெறுவதற்காகவே உண்மையில் பாத யாத்திரை செய்கின்றனர். மனிதர்களுக்கு வாழ்க்கையில் பல பிரச்சனைகள் உள்ளன. அவரை வணங்குவதின் மூலம் தங்களுக்கு ஏற்பட்டுள்ள கஷ்டங்களை அவர் களைந்து விடுவார் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் கலியுக வரதன் என்ற அவரை வணங்குகின்றனர்.
முருகர் பக்த பாத யாத்திரைக் குழு போன்றவை தமிழகம் முழுவதிலும் நகர புறங்களிலும், கிராமங்களிலும் உள்ளன. செட்டி நாடு, தேவக்கோட்டை மற்றும் காரைக்குடி பகுதிகளில் இருந்து வருடா வருடம் பெரும் எண்ணிக்கையில் பாத யாத்திரை செய்கின்றனர்.
தை பூசம் அல்லது பங்குனி உத்திரத் தருவிழாவின் பொழுது தை மாதம் அல்லது பங்குனியில், இந்த பாத யாத்திரையை செய்கின்றனர். ஒரு குறிப்பிட்ட இடத்தில் அனைவரும் வந்து சேர்ந்த பின் முருகன் தோத்திரப் பாடல்களைப் பாடிக் கொண்டும், அரோகரா, அரோகரா, வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா, ஞான தண்டாயுதப்பாணிக்கு அரோகரா,என்று கோஷங்களை எழுப்புகிறார்கள். அதற்குப் பிறகு அந்தப் பகுதியில் உள்ள நதிகளில் இருந்து எடுத்து வரப்பட்ட தண்ணீர் குடத்தை அவர்களின் தலை மீது புரோகிதர் வைக்கின்றார். அதைத் தீர்த்தக் காவடி என்று கூறுகின்றனர். பாத யாத்ரீகர்களின் குழு முருகனின் பாடல்களைப் பாடியவாறே நடக்கத் துவங்குகின்றனர். நாள் ஒன்றுக்கு 25-30 கிலோ மீட்டர் தொலைவிற்கு நடக்கின்றனர். அநேகமாக தைப் பூசம் அல்லது பங்குனி உத்திரத்தில் பழனியை சென்று அடையும் வகையில், நடந்து பழனி மலை அடிவாரத்தில் தங்குகின்றனர். அங்குள்ள ஷண்முக நதியில் குளித்தப் பின் மலையில் உள்ள முருகனை தரிசித்து அந்த புனித தண்ணீரை காணிக்கையாக தண்டாயுதபாணிக்கு செலுத்திய பின் அறியாமையை அகற்றும் அவருடைய அருள் கிடைக்க வேண்டுகின்றனர்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu