குமாரபாளையத்தில் பல தலைமுறை மயான பிரச்சினைக்கு தீர்வு
குமாரபாளையம் அருகே மயான பாதையை ஒப்படைக்கும் விழாவில் முன்னாள் அமைச்சர் தங்கமணி பங்கேற்றார்.
குமாரபாளையம் அருகே தட்டான்குட்டை ஊராட்சி, கல்லங்காட்டுவலசு, வீரப்பம்பாளையம் அருந்ததியர் காலனியில் வசிக்கும் மக்கள், யாராவது இறந்தால், அவரை தகனம் செய்ய சடலத்தை கொண்டு செல்ல வழியில்லாமல், சடலத்தை சுமந்தவாறு வாய்க்கால் நீரில் நடந்தும், கள், செடிகள் மத்தியிலும் கொண்டு செல்லும் நிலை இருந்து வந்தது. மயானம் செல்லும் பாதையில் உள்ள நில உரிமையாளர்கள் மயான வழிக்கு இடம் கொடுக்க முன்வராததே காரணம். 10 ஆண்டுகள் அமைச்சராக தங்கமணி இருந்த போதும் இதற்கு தீர்வு காண முடியவில்லை. தற்போது அந்த வழித்தடத்தின் உரிமையாளர் ஒருவர் இறந்ததால், அவரது மருமகன் பாரிவள்ளல் என்பவரும், இதே வழியில் உள்ள அருவங்காடு ஆறுமுகம் என்பவரும் வழி விட சம்மதம் தெரிவித்தனர். இதற்கான முயற்சியில் முன்னாள் ஊராட்சி தலைவர் செல்லமுத்து ஈடுபட்டார். இதனால் இந்த வழித்தடத்தை பொதுமக்களுக்கு ஒப்படைக்கும் நிகழ்வு, விழாவாக நடைபெற்றது. ஊராட்சி தலைவி புஷ்பா தலைமை வகித்தார். இதில் பங்கேற்று முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசும்போது
இந்த மயான வழித்தட பிரச்சினை தீராத பிரச்சனையாக இருந்தது. இதற்கு முயற்சி எடுத்து வெற்றி பெற செய்த செல்லமுத்து, அவருடன் பாடுபட்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள். இடம் கொடுத்து உதவிய நல்ல உள்ளங்களுக்கு நன்றி. 10 ஆண்டு காலம் சட்டத்தின் ஆட்சி நடத்தினோம். ஒரு திட்டத்தை கூட கொண்டு வராமல் எங்கே பார்த்தாலும் பிராந்தி. தி.மு.க. ஆட்சி சரியில்லை என்று தி.மு.க.வினர் சொல்கிறார்கள் அரசு ஊழியர்கள் எப்போதும் தி.மு.க.விற்கு அதரவாக இருப்பார்கள். அந்த அரசு ஊழியர்களையும் ஏமாற்றி விட்டார்கள். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் நாம் நாற்பது தொகுதியில் வெற்றி பெற போகின்றோம். 400 கோடியில் கிராமப்புற பகுதியில் குடிநீர் வழங்க திட்டம் துவங்கி நாங்கள் 90 சதவீதம் பணியை முடித்து விட்டு சென்றோம் என்றார்.
இதில் மாவட்ட ஊராட்சி கவுன்சிலரும், தெற்கு ஒன்றிய செயலருமான செந்தில், வடக்கு ஒன்றிய செயலர் குமரேசன், காங்கிரஸ் அல்லிமுத்து, ஊராட்சி மன்ற துணை தலைவர் நாகவள்ளி முருகன், வார்டு உறுப்பினர்கள் கோவிந்தராஜ், கதிரேசன், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu