கிருஷ்ணகிரி மாவட்ட வரைவு வாக்குச்சாவடிகளின் பட்டியல் வெளியீடு
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், கிருஷ்ணகிரி மாவட்ட வரைவு வாக்குச்சாவடிகளின் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலரும் ஆட்சியருமான கே.எம்.சரயு இன்று (21.08.2023) அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிட்டார்.
மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது:
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்திரவின்படி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 01.01.2024-ம் தேதியை அடிப்படையாக கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தப் பணிகள் நடைபெற உள்ளன. அதன் ஒரு கட்டமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடிகளில் 1500 வாக்காளர்களுக்கு மேற்பட்ட வாக்குச்சாவடிகளை பிரித்தல், பழுதடைந்த வாக்குச்சாவடி கட்டிடங்களுக்கு பதிலாக புதிய கட்டிடங்களை மாற்றுதல் போன்ற பணிகள் நடைபெற்று வருகின்றது.
அதனடிப்படையில் கிருஷ்ணகிரி மாவட்ட வரைவு வாக்குச்சாவடிகளின் பட்டியலை இன்று (21.08.2023) அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்களின் முன்னிலையில் வெளியிட்டப்பட்டுள்ளது. இப்பட்டியலின்படி 51 ஊத்தங்கரை (தனி) தொகுதியில் 287 வாக்குச்சாவடிகளும், 52 பர்கூர் தொகுதியில் 292 வாக்குச்சாவடிகளும், 53 கிருஷ்ணகிரி தொகுதியில் 308 வாக்குச்சாவடிகளும், 54 வேப்பனஹள்ளி தொகுதியில் 312 வாக்குச்சாவடிகளும், 55 ஓசூர் தொகுதியில் 381 வாக்குச்சாவடிகளும் மற்றும் 56 தளி தொகுதியில் 303 வாக்குச்சாவடிகளும் ஆக மொத்தம் 1883 வாக்குச்சாவடிகள் அமைய உள்ளன. ஒசூர் மற்றும் தளி சட்டமன்ற தொகுதியில் 1500 வாக்காளர்களுக்கு மேற்பட்ட 3 வாக்குச்சாவடிகள் பிரிக்கப்பட்டு பதியதாக 3 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இது போன்று பழுதடைந்த கட்டிடங்களுக்கு பதிலாக ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதியில் இரண்டு வாக்குச்சாவடிகளும், பர்கூர் சட்டமன்ற தொகுதியில் இரண்டு வாக்குச்சாவடிகளும், கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதியில் மூன்று வாக்குச்சாவடிகளும், தளி சட்டமன்ற தொகுதியில் ஒரு வாக்குச்சாவடியும் இடமாற்றம் செய்யப்பட உள்ளன.
மேற்கண்ட வரைவு வாக்குச்சாவடி பட்டியல் தொடர்பாக ஏதேனும் ஆட்சேபணைகள் மற்றும் மேல்முறையீடுகள் இருப்பின் சம்மந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர்களிடமோ அல்லது மாவட்ட தேர்தல் அலுவலகத்திலோ வரும் 28.08.2028 - க்குள் அளிக்கலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான கே.எம்.சரயு தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் சாதனைக்குறள், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கோ.வேடியப்பன், ஓசூர் சார் ஆட்சியர் ஆர்.சரண்யா, துணை ஆட்சியர் (பயிற்சி) தாட்சாயிணி, தனி வட்டாட்சியர் (தேர்தல்) ஜெய்சங்கர், கிருஷ்ணகிரி வட்டாட்சியர் சம்பத் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu