பனிப்பொழிவு காரணமாக மகசூல் பாதிப்பு : மல்லிகைப் பூ கிலோ ரூ.4,850-ஆக உயா்வு..!
![பனிப்பொழிவு காரணமாக மகசூல் பாதிப்பு : மல்லிகைப் பூ கிலோ ரூ.4,850-ஆக உயா்வு..! பனிப்பொழிவு காரணமாக மகசூல் பாதிப்பு : மல்லிகைப் பூ கிலோ ரூ.4,850-ஆக உயா்வு..!](https://www.nativenews.in/h-upload/2025/02/08/1976653-dj.webp)
ஈரோடு : கடும் பனிப்பொழிவு காரணமாக மகசூல் பாதிக்கப்பட்டதால் சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் மல்லிகைப் பூ கிலோ ரூ. 3,420-இல் இருந்து ரூ.4,850-ஆக அதிகரித்து விற்பனையானது.
50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் மலர் சாகுபடி
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பவானிசாகர், கொத்தமங்கலம், இக்கரை நெகமம், ராஜன் நகர், புது வடவள்ளி, பகுத்தம்பாளையம், தாண்டம்பாளையம் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் அதிக அளவில் மல்லி, முல்லை, சம்பங்கி உள்ளிட்ட மலர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.
இங்கு விளையும் பூக்கள் சத்தியமங்கலத்தில் விவசாயிகளால் நடத்தப்படும் பூ மார்க்கெட்டுக்கு கொண்டுச் சென்று, அங்கு ஏலம் முறையில் விலை நிர்ணயம் செய்யப்பட்டு கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு நகரங்களுக்கும், கேரளம், கர்நாடகம், ஆந்திரம், மகாராஷ்டிரா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பிவைக்கப்படுகின்றன.
முகூர்த்தம் காரணமாக விலை உயர்ந்து மீண்டும் சரிவு
கடந்த வாரம் முகூர்த்தம் என்பதால் மல்லிகை விலை உயர்ந்து மீண்டும் சரிந்தது. தற்போது, கடும் பனிப்பொழிவு நிலவுவதால் ஏக்கருக்கு 20 கிலோ கிடைத்த மல்லிகைப் பூக்கள், வெள்ளிக்கிழமை ஏக்கருக்கு 2 கிலோ மட்டுமே வரத்து கிடைத்தது.
இதனால் பூக்களின் விலை கடுமையாக உயா்ந்துள்ளது. மல்லிகைப் பூ வியாழக்கிழமை கிலோ 3,420-ஆக இருந்த நிலையில், வெள்ளிக்கிழமை ரூ.4,850-ஆக அதிகரித்து விற்பனையானது. இதேபோல முல்லை ரூ.2,080-க்கும் விற்பனையானது. மல்லிகைப் பூ விலை உயா்ந்து விற்பனையானதால் பூக்களை விற்பனைக்கு கொண்டு வந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu