கோவையில் மீண்டும் பயன்பாட்டுக்கு வந்த ரோபோட்டிக் இயந்திரங்கள்

கோவை மாநகராட்சியின் ஒருங்கிணைக்கப்பட்ட 60 வார்டுகளில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்படும்போது, ‘மேன்ஹோல்’ வழியாக தொழிலாளர்கள் உள்ளே இறங்கி கழிவுகளை சுத்தப்படுத்தும் நிலை உள்ளது.
ஆட்களை பயன்படுத்துவதை தவிர்க்க மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் இயந்திரங்கள் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது. இதற்காக கடந்த 2020-ம் ஆண்டு பொதுத்துறை நிறுவனத்தின் சார்பில் ரூ.2.12 கோடி மதிப்பில் 5 ரோபோட்டிக் இயந்திரங்கள் கொள்முதல் செய்யப்பட்டன. முழுமையாக தானியங்கி முறையில் இயங்கும் இந்த ரோபோக்கள் மேன்ஹோல் வழியாக ஆழமான கழிவுநீர் பாதையில் நேரடியாக நுழைந்து அதை சுத்தம் செய்யும்.
இந்த இயந்திரம் மனிதர்களை விட 10 மடங்கு வேகமானது என்றும், ஒரு நாளில் குறைந்தது 10 மேன்ஹோல்களை சுத்தம் செய்ய முடியும். நேரம் மற்றும் மேன்ஹோல் சுத்தம் செய்யும் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் மனிதர்களை விட அதிக திறமையான சுத்தம் செய்யும் நெகிழ்வுத்தன்மையைக் கொண்டுள்ளது.
இந்த இயந்திரங்கள் தொடக்கத்தில் சில நாட்கள் பயன்படுத்தப்பட்டன. பின்னர், போதிய பயிற்சி இல்லாததால் பயன்படுத்தப்படுவது குறைந்தது. இந்த இயந்திரங்களும் குப்பையோடு குப்பையாக கிடப்பில் போடப்பட்டன. இச்சூழலில், இந்த இயந்திரங்கள் குறித்து அறிந்த தற்போதைய மாநகராட்சி ஆணையர் மா.சிவகுரு பிரபாகரன் அந்த இயந்திரங்களை மீண்டும் சரி செய்து பயன்படுத்த முடிவு செய்தார்.
இதையடுத்து, 5 ரோபோட்டிக் இயந்திரங்களும் சீரமைக்கப்பட்டன. மேலும், இயந்திரங்களை பயன்படுத்தும் முறை குறித்து ஊழியர்களுக்கு பயிற்சியும் அளிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக பாதாள சாக்கடை அடைப்புகளை சரி செய்வதற்கான ரோபோட்டிக் இயந்திரங்கள் கோவை மாநகரில் கடந்த சில நாட்களாக பயன்பாட்டில் உள்ளன. இயந்திரங்களை தொடர்ச்சியாக பயன்படுத்த அதிகாரிகளுக்கு ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu