இந்திய வானிலை ஆய்வு மையம் மீது தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா குற்றச்சாட்டு

இந்திய வானிலை ஆய்வு மையம் மீது தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா குற்றச்சாட்டு

தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா.

இந்திய வானிலை ஆய்வு மையம் மீது தமிழக அரசின் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா குற்றச்சாட்டி பேட்டி அளித்துள்ளார்.

வங்க கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் மாவட்டங்களில் குறிப்பாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய நான்கு மாவட்டங்களில் பேய் மழை கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக நெல்லை ரயில் நிலையம் பஸ் நிலையம் ஆகியவை தண்ணீரில் மூழ்கின. தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் தண்ணீர் புகுந்தது.

மேலும் தூத்துக்குடி நகரின் பல தாழ்வான பகுதிகளிலும் மழை நீர் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடியதால் மக்கள் தங்களது இயல்பு வாழ்க்கையை இழந்தனர். திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலுக்குள் தண்ணீர் புகுந்தது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் திருச்செந்தூர் போக்குவரத்து வசதி இன்றி தனி தீவு போல் காட்சி அளித்தது. மேலும் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் மின் துண்டிப்பால் செல்போன் சேவையும் பாதிக்கப்பட்டது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தமிழக அமைச்சர்கள் முகாமிட்டு மீட்பு பணிகளை செய்து வருகிறார்கள். எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியும் அங்கு சென்று நிவாரண உதவிகளை வழங்கி உள்ளார்.

இந்த நிலையில்இந்திய வானிலை ஆய்வு மையம் பெரு மழை பெய்யும் என கணித்து கூறவில்லை என்றும், வானிலை ஆய்வு மையம் கணிப்பு சரியாக இருந்தால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் சரியாக இருக்கும் என்றும் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா கூறி உள்ளார்.

நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் பெருமழை பெய்தது. இதில் நெல்லை, தூத்துக்குடியில் பல இடங்களில் மிகப்பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டது. வெள்ளம் பாதித்த பகுதிகளில் தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில், தென் மாவட்ட மழை வெள்ள பாதிப்பு குறித்து தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் 30 மணி நேரத்தில் 116 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது. 9 ஹெலிகாப்டர்கள் மீட்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. ஹெலிகாப்டர்கள் மூலமாக உணவும் வினியோகிக்கப்பட்டு வருகிறது. இதேபோல் தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று 30 ஆயிரம் லிட்டர் பால் சப்ளை செய்யப்பட்டுள்ளது. இன்னும் ஓரிரு நாளில் பால் சப்ளை நார்மல் ஆகிவிடும். 323 படகுகள் மூலமாகவும் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

நெல்லை, தூத்துக்குடியில் நிறைய பகுதிகளில் மின் வினியோகம் இல்லை. மின்மாற்றிகள், மின்கம்பங்கள் பழுதாகியிருப்பதால் உடனடியாக மின்சாரம் வழங்க முடியவில்லை. உடனடியாக மின்சாரம் வழங்கினால் மழையினால் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. இந்திய வானிலை ஆய்வு மையம் பெரு மழை பெய்யும் என கணித்து கூறவில்லை. வானிலை ஆய்வு மையம் கணிப்பு சரியாக இருந்திருந்தால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையையும் சரியாக எடுதிருக்க முடியும்.

பெருமழையால் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர். வீடு இடிந்து 3 பேர், மின்சாரம் தாக்கி 2 பேர் என மொத்தம் 10 பேர் உயிரிழந்துள்ளனர். இதேபோல் 27 மாடுகள், 297 ஆடுகள் ஆயிரக்கணக்கான கோழிகள் உயிரிழந்துள்ளன. ஸ்ரீவைகுண்டத்தை சுற்றியுள்ள சாலைகள் அனைத்தும் சேதமடைந்துள்ளன. விமானப்படை, கடற்படை, கப்பல்படை மூலம் மீட்பு பணிகள் நடந்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

மத்திய அரசின் மீது முதல்வர் ஸ்டாலின் தொடர்ந்து புகார் கூறி வந்த நிலையில் தற்போது தமிழக அரசின் தலைமை செயலாளரும் மத்திய அரசின் இந்திய வானிலை ஆய்வு மையம் மீது குற்றம் சாட்டி பேட்டி அளித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Tags

Next Story