நாளைக்குள் 100 சதவீதம் மின் இணைப்பு வழங்கப்படும்: தலைமை செயலாளர் உறுதி

சென்னையில் நாளைக்குள் நூறு சதவீதம் மின்சாரம் வழங்கப்பட்டு விடும் என தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா கூறினார்.
வங்க கடலில் உருவான மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கடந்த மூன்று மற்றும் நான்காம் தேதிகளில் மழை வெளுத்து வாங்கியது. இதன் காரணமாக சென்னை நகரம் மட்டுமல்லாமல் புறநகர் பகுதிகளும் வெள்ளக்காடானது. போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டதால் சென்னை நகரமே தனித்தீவு போல் காட்சி அளித்தது. வீடுகளை வெள்ளம் சூழ்ந்ததால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் நிறுத்தி வைக்கப்பட்டது.
மின்சாரம் நிறுத்தப்பட்ட பகுதிகளில் மக்கள் தீப்பந்தம் ஏந்தி போராட்டம் நடத்தினார்கள். குறிப்பாக மயிலாப்பூர் லஸ்கார்னர் பகுதியில் கூட போராட்டம் நடைபெற்றது. மேலும் பொது மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களான குடிதண்ணீர், பால் உள்ளிட்டவை கிடைக்கவில்லை என கூறியும் பல இடங்களில் போராட்டம் நடைபெற்றது.
இந்த நிலையில் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சென்னை நகரில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதுவரை வெள்ளத்தில் சிக்கிய 18 ஆயிரத்து 780 பேர் மீட்கப்பட்டு தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 343 இடங்களில் வெள்ள நீரை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 850 பேர் கொண்ட மீட்பு குழுவினர் மக்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளார்கள்.
மின்விநியோகத்தை பொறுத்தவரை 99.5 சதவீத அளவிற்கு மின்சாரம் வழங்கும் பணிகள் முடிவடைந்து விட்டது. நாளைக்குள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து பகுதிகளிலும் 100% மின்சாரம் வழங்கப்பட்டு விடும் என உறுதி அளிக்கிறேன். மேலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நடமாடும் வாகனங்கள் மூலம் காய்கறிகள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. வெள்ளத்தால் சென்னையில் எவ்வளவு சொத்துக்கள் சேதம் அடைந்துள்ளது என்பது முழு அளவில் மழைநீர் வடிந்த பின்னர் தான் கணக்கிடப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu