ஸ்ரீரங்கம் கோயிலில் பக்தர்கள் மீது தாக்குதல்: இந்து அமைப்புகள் போராட்டம்

ஸ்ரீரங்கம் கோயிலில் பக்தர்கள் மீது தாக்குதல்: இந்து அமைப்புகள் போராட்டம்
பக்தர்களை தாக்கியவர்களை கைது செய்யக்கோரி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் ரங்கா, ரங்கா கோபுரம் அருகில் இந்து அமைப்பினர் மறியல் போராட்டம் நடத்தினர்.
ஸ்ரீரங்கம் கோயிலில் பக்தர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யக்கோரி இந்து அமைப்புகள் மறியல் போராட்டம் நடத்தினர்.

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஐயப்ப பக்தர்கள் தாக்கப்பட்டது தொடர்பாக இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பூலோக வைகுண்டம் என்றும் 108 வைணவ தளங்களில் முதன்மையானது என்றும் போற்றப்படுவது திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் ஆகும். இந்த கோயிலில் வருடத்தின் 365 நாட்களும் திருவிழா தான் என்றாலும் மார்கழி மாதம் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி பெரு விழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.

இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி பெருவிழா இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. வைகுண்ட ஏகாதசி பெருவிழாவில் தமிழகத்தில் இருந்து மட்டுமின்றி அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகம், ஆந்திரா, மற்றும் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் ஏராளமானவர்கள் வந்து சாமி தரிசனம் செய்வார்கள். மேலும் சொர்க்கவாசல் திறப்பு நடைபெறும் நாளான டிசம்பர் 23ஆம் தேதி மட்டும் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள்.

இந்த நிலையில் தற்போது வைகுண்ட ஏகாதசி பெருவிழா தொடங்கி உள்ளதால் பக்தர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மொத்தம் 21 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது .

இந்த நிலையில் இன்று ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் ஏராளமானவர்கள் ஒரு குழுவாக சுவாமி தரிசனம் செய்ய வந்தனர். அவர்கள் வரிசையில் நின்ற போது கோவிந்தா கோவிந்தா என அதிக சத்தத்துடன் ஒலி எழுப்பி மற்ற பக்தர்களுக்கு இடையூறு செய்ததாக தெரிகிறது. இதனை கோவில் பணியாளர்களும் மற்ற பக்தர்களும் தட்டி கேட்டனர். இதனை அவர்கள் கொண்டு கொள்ளவில்லை.


இதன் காரணமாக கோவில் மூலஸ்தானம் அருகில் சென்று கொண்டிருந்த அவர்களை கோவில் பணியாளர்கள் தாக்கியுள்ளனர். இதில் ஒரு பக்தருக்கு ரத்தக்காயம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதால் காயமடைந்த ஆந்திர ஐயப்ப பக்தர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.

ஆனால் கோவில் வளாகத்தில் பக்தர்கள் தாக்கப்பட்ட செய்தி காட்டுத்தீபோல் பரவியது. இதனைத் தொடர்ந்து இந்து அமைப்புகள் மற்றும் பாரதிய ஜனதா கட்சியினர் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலின் ரங்கா ரங்கா கோபுரம் அருகே அமர்ந்து சாலை மறியல் போராட்டம் நடத்தினார்கள்.

அவர்கள் ஐயப்ப பக்தர்களை தாக்கிய கோவில் பணியாளர்களை உடனடியாக போலீசார் கைது செய்ய வேண்டும், பக்தர்களை தாக்க உத்தரவிட்ட அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்துக்கு வர வேண்டும், காசு கொடுத்து வழிபடுவதற்கு கடவுள் என்ன காட்சி பொருளா? இந்துக்களை அழிக்க நினைக்காதே என்பது உள்ளிட்ட பல்வேறு கோஷங்களை எழுப்பினார்கள். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தற்போது ஐயப்ப சீசன் என்பதால் சபரிமலைக்கு மாலை அணிந்து செல்லும் பக்தர்கள் ஐயப்ப தரிசனம் முடிந்து திரும்பும்போது தமிழகத்தில் உள்ள முக்கிய கோயில்கள் அனைத்திற்கும் செல்வது உண்டு. அதுவும் வெளிமாநில பக்தர்கள் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வராமல் செல்வது இல்லை. அந்த வகையில் தான் ஆந்திர மாநில ஐயப்ப பக்தர்களும் வந்த போது தான் இந்த சம்பவம் நடந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story