காணொலி பதிவு கலாச்சாரம்: இனி பிரச்சாரம் இப்படித்தான் தொடர போகிறது

காணொலி பதிவு கலாச்சாரம்: இனி பிரச்சாரம் இப்படித்தான் தொடர போகிறது
X
தமிழக அரசியலில் காணொலி பதிவு கலாச்சாரம் தொடங்கி இருப்பதால் இனி பிரச்சாரமும் இப்படித்தான் தொடரும போல் தெரிகிறது.

தமிழக அரசியலில் தற்போது புதிதாக ஒரு கலாச்சாரம் தொடங்கி இருக்கிறது. அதற்கு பெயர்தான் காணொலி பதிவு பிரச்சாரம். இனி அரசியல் கட்சிகள் இந்த அடிப்படையிலேயே தங்களது கட்சி பிரசாரத்தை கூட தொடங்குவார்களோ என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

தமிழகத்தில் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த காலகட்டத்தில் பல்வேறு கட்டிடங்கள் மற்றும் அரசு திட்டங்கள் வீடியோ கான்பரன்சிங் எனப்படும் காணொலி காட்சியின் மூலமாக திறந்து வைக்கப்பட்டன. குறிப்பாக புதிய கட்டிடங்கள் மற்றும் அரசு நலத்திட்டங்கள் இதன் மூலம் நடைபெற்றது. அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த தற்போதைய முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் இந்த ஆட்சியே ஒரு காணொளி காட்சி தான். இது ஆட்சி அல்ல காணொலி காட்சி தான் என்று விமர்சனம் செய்தார்.

ஆனால் அவர் தற்போது முதலமைச்சராக பதவியில் இருக்கும் போது கூட பல்வேறு திட்ட பணிகளை காணொலி காட்சி மூலமாகவே திறந்து வைக்கிறார். அரசியல் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டு இதனை ஒரு தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியாக தான் பார்க்க வேண்டும்.

இது ஒருபுறம் இருக்க காணொலி காட்சியில் தற்போது புதிய கலாச்சாரம் ஒன்று தொடங்கி இருக்கிறது. அதுதான் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டதற்கு நீதி கேட்கும் வகையில் மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்து ஸ்டாலின் பதிவிட்ட காணொலி பதிவு. அந்த பதிவில் முதலமைச்சர் ஸ்டாலின் எங்களை சீண்டி பார்க்காதீங்க நாங்க திருப்பி அடிச்சா தாங்க மாட்டீங்க.. தொட்டுப்பார்... என்றெல்லாம் கடுமையான தனது கோபத்தை பதிவிட்டு இருந்தார். மேலும் அ.தி.மு.க.வையும் அதன் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியையும் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். அ.தி.மு.க. வை அடிமை கட்சி என்றும் குறிப்பிட்டு இருந்தார்.

இவற்றுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் எதிர்க்கட்சித் தலைவரும் அ.தி.மு.க. பொது செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தானும் ஒரு காணொலி பதிவினை இன்று வெளியிட்டுள்ளார்.

அதில் அ.தி.மு.க. பாரதிய ஜனதா கட்சியின் அடிமை அல்ல. தி.மு.க. தான் அவர்களுடன் கூட்டணி வைத்து அமைச்சரவையில் பங்கு வைத்தவர்கள். அ.தி.மு.க.வின் ஒரு தொண்டனை கூட தொட முடியாது. ஸ்டாலின் பதற்றத்தில் இருக்கிறார். அவர் ஒரு பொம்மை முதல் அமைச்சர் என கடுமையாக பதிலடி கொடுத்துள்ளார்.

இப்படி காணொலி பதிவின் மூலம் தமிழகத்தின் இரு பிரதான கட்சிகளும் கேள்வியும் அதற்கு பதிலும் கொடுத்து உள்ளனர். அரசியல் கட்சிகள் ஒரு காலத்தில் அறிக்கை விட்டுக் கொண்டிருந்தன. பின்னர் டி.வி.யில் தோன்றி நேரடி விளக்கம் அளித்தார்கள். இப்போது அதை எல்லாம் தாண்டி காணொலி பதிவு வருகிறது என்றால் அதற்கு காரணம் என்ன என்றால் பொதுவாக தமிழகத்தில் உள்ள ஊடகங்கள் எல்லாமே ஏதாவது ஒரு கட்சி சார்ந்திருக்கின்றன. அது அச்சு ஊடகமாக இருந்தாலும் சரி, காட்சி ஊடகமாக இருந்தாலும் சரி.

இதன் காரணமாக எந்த ஒரு கட்சியின் செயல்பாடுகளையும் நடவடிக்கையும் முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் இரண்டையும் பார்த்தால் தான் ஒரு தெளிவு கிடைக்கும். அந்த அளவிற்கு அரசியல் கட்சிகளுடன் ஊடகங்களும் பின்னி பிணைந்து விட்டன.

இந்த சூழலில் சோசியல் மீடியா எனப்படும் சமூக வலைத்தளங்கள் தான் பாரபட்சமின்றி செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன. இதன் காரணமாக அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது கருத்துக்கள் இப்போது சமூக ஊடகங்களின் மூலம் மக்களை நேரடியாக சென்றடைய வேண்டும் என்பதற்காக இந்த புதிய யுத்தியை கையாண்டு இருக்கிறார்கள்.

போகிற போக்கை பார்த்தால் இனி சமூக ஊடகங்களின் மூலம் தான் அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரச்சாரம் கூட இருக்குமோ என்ற கேள்வியும் எழுந்து உள்ளது. எது எப்படி இருந்தாலும் சமூக ஊடகங்கள் அச்சு ஊடகங்களையும் காட்சி ஊடகங்களையும் பின்னுக்கு தள்ளிவிட்டு உலக அளவில் முன்னுக்கு வந்து கொண்டிருக்கிறது என்பதே நிதர்சனமான உண்மையாகும்.

Tags

Next Story