பெங்களூருவில் ஜூலை 17,18 தேதிகளில் எதிர்க்கட்சிகளின் இரண்டாவது கூட்டம்

பெங்களூருவில் ஜூலை 17,18 தேதிகளில் எதிர்க்கட்சிகளின் இரண்டாவது கூட்டம்
X
பாட்னாவில் நடந்த கூட்டத்தில் பங்கேற்ற எதிர்க்கட்சி தலைவர்கள். (கோப்பு படம்)
பெங்களூருவில் ஜூலை 17, 18 தேதிகளில் எதிர்க்கட்சிகளின் இரண்டாவது கூட்டம் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சிகளின் இரண்டாவது ஒருங்கிணைப்பு கூட்டம் பெங்களூருவில் வருகிற 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பா.ஜ.க.வுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஓரணியாக போட்டியிட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக பீகார் முதல்-மந்திரியும், ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவருமான நிதிஷ்குமார் எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்துப் பேசினார்.

இதற்கிடையே, பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் கடந்த 23ம் தேதி எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி, தி.மு.க. சார்பில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், டி.ஆர்.பாலு, தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார், லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்ட தலைவர்கள் என 16 எதிர்க்கட்சி தலைவர்கள் உள்பட 6 மாநில முதல் மந்திரிகள் பங்கேற்றனர்.

இந்த நிலையில், எதிர்க்கட்சிகளின் அடுத்த கூட்டம் ஜூலை 13,14ம் தேதிகளில் பெங்களூருவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.பெங்களூருவில் நடக்கவிருந்த கூட்டம் ரத்து செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. மகராஷ்டிர மாநிலத்தில் சரத்பவார் கட்சியில் ஏற்பட்ட பிளவினால் கூட்டம் தள்ளிப்போகலாம் என கூறப்பட்டு வந்தது.

இந்தநிலையில், பெங்களூருவில் ஜூலை 17, 18 ஆகிய தேதிகளில் எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெறும் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் அறிவித்துள்ளார். இதில் பாட்னாவில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற அனைத்துக்கட்சிகளும் பங்கேற்க வேண்டும் என காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது.

பெங்களூருவில் கூட்டம் நடத்த தி.மு.க. எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்பட்ட நிலையில் காங்கிரஸ் கட்சி தற்போது இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேகதாது விவகாரத்தில் கர்நாடகாவில் நடக்கும் கூட்டத்தை வேறு இடத்திற்கு மாற்ற தி.மு.க. வலியுறுத்தியதாக தகவல் வெளியானது. ஆனால் இந்த கோரிக்கையை காங்கிரஸ் கண்டு கொள்ளவில்லை என தெரிகிறது.

2024 மக்களவை தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக ஜூன் 23-ல் பாட்னாவில் நடைபெற்ற முதல் ஆலோசனை கூட்டத்தின் தொடர்ச்சியாக 2-வது கூட்டத்தில் முக்கிய விஷயங்கள் விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

Tags

Next Story