மதுரை எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநாட்டில் பங்கேற்க அ.தி.மு.க.விற்கு அழைப்பு

மதுரை எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநாட்டில் பங்கேற்க அ.தி.மு.க.விற்கு அழைப்பு

எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநில மாநாடு அழைப்பிதழ் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கப்பட்டது.

மதுரையில் எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநாட்டில் பங்கேற்க அ.தி.மு.க.விற்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டு உள்ளது.

பா.ஜ.க. கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. வெளியேறியதை தொடர்ந்து அக்கட்சியுடன் எஸ்.டி.பி.ஐ. நெருக்கம் காட்டி வரும் நிலையில், அக்கட்சியின் 'வெல்லட்டும் மதச்சார்பின்மை' மாநாட்டுக்கு எடப்பாடி பழனிசாமியை சிறப்பு விருந்தினராக அழைத்து இருக்கிறது.

ஜனவரி 7 ஆம் தேதி எஸ்.டி.பி.ஐ. கட்சி மதுரையில் 'வெல்லட்டும் மதச்சார்பின்மை' என்ற மதச்சார்பின்மை பாதுகாப்பு மாநாட்டை நடத்துகிறது. இந்த மாநாட்டுக்கான ஏற்பாடுகள் மதுரையில் நடைபெற்று வரும் நிலையில், தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளை சேர்ந்த கட்சித் தொண்டர்கள், ஆதரவாளர்களை திரட்டுவதற்கு எஸ்.டி.பி.ஐ. முடிவு செய்து இருக்கிறது. இதற்கு அரசியல் கட்சித் தலைவர்களுக்கு அக்கட்சி அழைப்பு விடுத்து வருகிறது.

இந்த நிலையில் எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநிலத் தலைவர் நெல்லை முபாரக், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து 'வெல்லட்டும் மதச்சார்பின்மை' மாநாட்டுக்கு அழைப்பு விடுத்தார். அப்போது அவர் அளித்த அழைப்பிதழில் நாடாளுமன்ற புகைப்படம் மற்றும் நெல்லை முபாரக் புகைப்படத்துடன் எடப்பாடி பழனிசாமியின் படமும் அச்சிடப்பட்டு இருந்தது. இதுகுறித்து அக்கட்சி வெளியிட்ட செய்தியில், "மதுரையில் ஜனவரி 07, 2024 அன்று நடைபெறவிருக்கும் எஸ்.டி.பி.ஐ.கட்சியின் 'வெல்லட்டும் மதச்சார்பின்மை' - மாபெரும் மதச்சார்பின்மை பாதுகாப்பு மாநாட்டு அழைப்பிதழை, எஸ்.டி.பி.ஐ .கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் , தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர், முன்னாள் தமிழக முதல்வர், அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்களை நேரில் சந்தித்து வழங்கினார். மாநாட்டு அழைப்பிதழை இன்முகத்துடன் பெற்றுக் கொண்டார். இந்நிகழ்வில், முன்னாள் அமைச்சர் வேலுமணி உடனிருந்தார். மேலும், எஸ்டிபிஐ கட்சியின் மாநில துணைத்தலைவர் அப்துல் ஹமீது, மாநில பொதுச்செயலாளர் நஸ்ருதீன், மாநில செயலாளர் ஏ.கே.கரீம் மற்றும் எஸ்டிபிஐ கட்சியின் தென் சென்னை வடக்கு மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்." என்று குறிப்பிட்டு இருந்தது.

மாநாட்டு அழைப்பிதழில் நாடாளுமன்ற புகைப்படத்துடன் நெல்லை முபாரக் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் படமும் அச்சிடப்பட்டு இருப்பது எதிர்வரும் 2024 மக்களவைத் தேர்தல் கூட்டணிக்கான சிக்னலா என்ற கேள்வி எழுந்து இருக்கிறது. மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என்று எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக அறிவித்து கூட்டணியை முறித்துக்கொண்ட நிலையில் இஸ்லாமியர்களின் தொடர் கோரிக்கைகளை அ.தி.மு.க.வும் எழுப்பத் தொடங்கி உள்ளது.

பொது சிவில் சட்டத்துக்கு எதிர்ப்பு, இஸ்லாமிய ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்யக்கோரி தீர்மானம் கொண்டு வந்தது போன்ற நகர்வுகளை அ.தி.மு.க. மேற்கொண்டது. இதனை தொடர்ந்து எஸ்.டி.பி.ஐ. கட்சியும் அ.தி.மு.க.வுடன் தொடர்ந்து நெருக்கம் காட்ட தொடங்கி இருக்கிறது. சிறைவாசிகள் விடுதலை தொடர்பான தீர்மானத்துக்கு பின்னர் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை எஸ்.டி.பி.ஐ .தலைவர்கள் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். அப்போதே அ.தி.மு.க. பக்கம் எஸ்.டி.பி.ஐ. நகர்வதாக பேச்சு எழுந்தது.

இந்த நிலையில் கடந்த வாரம் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் அகில இந்திய செயற்குழு கூட்டம் மைசூருவில் நடைபெற்றபோது, "சிறிய அல்லது பெரிய கட்சிகளை உள்ளடக்கிய பரந்த அடிப்படையிலான கூட்டணி ஒன்றுபட வேண்டும்." என்று தீர்மானம் நிறைவேற்றியது. அப்போது திமுக - காங்கிரஸ் கூட்டணியான இந்தியாவில் இணைய விருப்பம் காட்டுவதாக கூறப்பட்டது. இந்த நிலையில் எஸ்.டி.பி.ஐ. நடத்தும் மதுரை மாநாட்டில் அக்கட்சியின் தேசிய தலைவரும் பங்கேற்கும் நிலையில் அ.தி.மு.க. கூட்டணிக்கு காய் நகர்த்துவதாக பேச்சு எழுந்து உள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரை தி.மு.க. கூட்டணியில் ஏற்கனவே இந்தியன் யூனியன் முஸ்லிம்லீக், த.மு.மு.க. போன்ற கட்சிகள் வலுவாக இடம்பிடித்துள்ள நிலையில் எஸ்.டி.பி.ஐ. கட்சி அ.தி.மு.க. கூட்டணியில் இணையபோவது தற்போது உறுதி செய்யப்பட்டு இருப்பதாகவே கருதப்படுகிறது.

Tags

Next Story