தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகளால் அரசியலாக்கப்பட்ட வெள்ள நிவாரண பணிகள்

தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகளால் அரசியலாக்கப்பட்ட வெள்ள நிவாரண பணிகள்
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, முதல்வர் ஸ்டாலின்.
தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகளால் வெள்ள நிவாரண பணிகள் கூட அரசியலாக்கப்பட்டு உள்ளது.

வெள்ள பாதிப்பு பணிகள் கூட தமிழகத்தில் அரசியல் ஆக்கப்பட்டு உள்ளது. முதல்வரும், எதிர்க்கட்சி தலைவரும் மாறி மாறி குற்றம் சாட்டி வருகிறார்கள்.

சென்னை பெரம்பூர் தனியார் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம் நடந்தது. இந்த விழாவில் கலந்துகொண்ட தமிழக முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:-

சென்னையில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.6000 நிவாரணம் வழங்கப்படும் என்று கூறினேன். 2 வாரத்தில் வழங்கப்பட்டு இருக்கிறது. இப்போது வரும்போது நான் அதிகாரிகளிடம் கேட்கும் போது 98 சதவீத நிவாரண நிதி விநியோகிக்கப்பட்டது என்று கூறினார்கள்.

மீண்டும் சிலர் கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.. எங்களுக்கு வரவில்லை. கிடைக்கவில்லை என்று 5 லட்சம் பேர் கோரிக்கை வைத்திருக்கிறார்கள். அவர்களது கோரிக்கையும் விரைவில் பரிசீலிக்கப்பட்டு விரைந்து நிவாரண தொகையை உறுதியாக வழங்குவோம். மத்திய அரசிடம் இருந்து நிதி வரலாம் என்று காத்திருக்கலாம். ஆனால் ஒன்றிய அரசு தரவில்லை என்று காரணம் சொல்லாமல் உடனடியாக கொடுத்தோம்.

இதற்கிடையே தான் தென் மாவட்டங்களிலும் மழை, வெள்ளம் வந்துவிட்டது. அவர்களுக்கு ரூ.6000 நிவாரணம் அறிவித்து இருக்கிறோம். விரைவில் கொடுப்போம். நேற்று தென்மாவட்டத்திற்கு நான் சென்றேன். அப்போது பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்தேன். அவர்கள் அரசு விரைவாக செயல்பட்டு எங்களை காப்பாற்றினார்கள் என்றனர். மக்கள் மகிழ்ச்சியாக.. பல்வேறு சோதனைகளுக்கு மத்தியில், இன்னல்களுக்கு மத்தியில் என்னை பார்த்து மகிழ்ச்சியோடு வரவேற்றதை பார்த்து நான் புல்லரித்து போனேன். ஆனால் இன்னைக்கு அர்த்தம் இல்லாமல் சிலர் குறை கூறுகிறார்கள்.

அரசுக்கு உதவியாக.. எந்த கட்சியாக இருந்தாலும் அரசுக்கு துணை நிற்க வேண்டும். அரசு கூட இருந்து மக்கள் பணி ஆற்றியிருக்க வேண்டும். அப்படி யாரும் வந்தார்களா என்றால் இல்லை. கொரோனா காலத்தில் ஆட்சியில் இருந்தபோது கூட அவர்கள் செய்யவில்லை. அப்போது எதிர்க்கட்சியாக இருந்த தி.மு.க .தான் ஒன்றிணைவோம் வா என்ற திட்டத்தை ஆரம்பித்து மக்களுக்கு துணை நின்றது. இதை யாரும் மறந்திருக்க மாட்டார்கள்.

ந்த மாதிரி நேரத்திலேயும் மலிவான அரசியல் செய்ய முன்னாடி வந்து விடுகிறார் எடப்பாடி பழனிசாமி. கொஞ்ச நாளுக்கு முன்பு சிறுபான்மை மக்களுக்கு பாதுகாவலனாக இருப்பது அ.தி.மு.க. தான் என்று பேசினார். சிறுபான்மை மக்கள் மீது திடீரென ஏன் பாசம் பொங்குது. முத்தலாக், குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவு அளித்தது ஏன் என்று தெரியும் பழனிசாமிக்கு.

அப்போது கூட்டணி தர்மம் என்று கூறினார். இப்போது பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என்று கபட நாடகம் ஆடுகிறார் எடப்பாடி பழனிசாமி. பா.ஜ.க.வை எதிர்த்து ஒரு வார்த்தையாவது பேசியிருக்கிறாரா? இவர் நாடகத்தை பார்த்து மக்கள் நிச்சயமாக ஏமாற மாட்டார்கள். இந்தியா கூட்டணி தான் அடுத்து ஆண்டு நடைபெறும் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். இதற்கு மக்கள் ஆதரவு தர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தமிழகத்தில் முதல்வரும், எதிர்க்கட்சி தலைவரும் எந்த ஒரு பிரச்சினையிலும் மாறி மாறி குற்றம் சாட்டி வருவது வாடிக்கையாக இருந்து வருகிறது. அந்த வகையில் தான் தற்போது வெள்ள நிவாரண பணிகளும் அரசியலாக்கப்பட்டு உள்ளது.

Tags

Next Story