பா.ஜ.க. கூட்டணியில் தே.மு.தி.க.: பிரேமலதா விஜயகாந்த் சூசக தகவல்

பா.ஜ.க. கூட்டணியில் தே.மு.தி.க.: பிரேமலதா விஜயகாந்த் சூசக தகவல்

பிரேமலதா விஜயகாந்த்.

பா.ஜ.க. கூட்டணியில் தே.மு.தி.க. இடம்பெறலாம் என்ற தகவல் பிரேமலதா விஜயகாந்த் மூலம் வெளிப்பட்டு உள்ளது.

நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் பாரதிய ஜனதா கூட்டணியில் இடம் பெறும் வகையில் காய்கள் நகர்த்தப்பட்டு வருகிறது.

தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தன்னிடம் வைத்த முக்கிய கோரிக்கை ஒன்றை நிறைவேற்றித் தருவதாக உறுதி கொடுத்திருக்கிறார் பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை.

அண்ணாமலையை கடந்த வாரம் தாம் தொடர்பு கொண்டு பேசியதையும், தாம் வைத்த கோரிக்கையை மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வு பெற்றுத் தருவதாக அவர் கூறியதையும் செய்தியாளர்கள் சந்திப்பின்போது பிரேமலதா விஜயகாந்தே மிகத் தெளிவாக கூறியுள்ளார்.

எண்ணூர் கிரீக் பகுதியில் ஏற்பட்டுள்ள எண்ணெய் கசிவால் மீனவர்கள் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன. மக்கள், கால்நடைகள், விலங்குகள், உயிர்ச்சூழல் என அனைத்தும் கடுமையாக பாதிப்பைச் சந்தித்துள்ளன. மீனவர்களின் மீன்பிடி உபகரணங்கள் பாழானதாலும், முகத்துவாரப்பகுதியில் எண்ணெய் கழிவு மிதப்பதாலும், மீனவர்களால் கடலுக்கு செல்ல முடியவில்லை. இந்நிலையில், எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை இன்று நேரில் சென்று பார்வையிட்ட பிரேமலதா விஜயகாந்த், மீனவர்களுக்கு தலா ரூ.25,000 நிவாரணம் வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

அதைத் தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பின் போது பேசிய அவர், கடந்த வாரம் அண்ணாமலையையும், மத்திய இணை அமைச்சர் எல்.முருகனையும் எண்ணூர் எண்ணெய் கசிவு விவகாரம் தொடர்பாக தொடர்பு கொண்டு பேசியதாகவும் அப்போது சி.பி.சி.எல். நிறுவனம் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க உரிய கேபினட் அமைச்சர் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்ததாகவும் கூறியுள்ளார். நிச்சயம் நடவடிக்கை எடுப்பதாக அண்ணாமலையும், மத்திய இணை அமைச்சர் எல்.முருகனும் தனக்கு உறுதி கொடுத்திருப்பதாகவும் தெரிவித்தார்.

இதன் மூலம் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. கூட்டணியில் தே.மு.தி.க. அங்கம் வகிக்க மிக அதிக வாய்ப்புகள் இருப்பது தெரிய வருகிறது. மத்திய இணை அமைச்சரிடம் கோரிக்கை வைப்பதில் கூட லாஜிக் உள்ளது, ஆனால் தன்னை போல ஒரு கட்சியின் மாநிலத் தலைவராக உள்ள ஒருவரிடம் கோரிக்கை வைத்தேன் என பிரேமலதா கூறியதிலிருந்து அவர் எந்த திசையை நோக்கி பயணிக்க ஆரம்பித்துள்ளார் என்பது வெளிப்பட்டு இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.

Tags

Next Story