பள்ளத்தில் விழுந்து செய்தியாளர் மரணம் குறித்து அமைச்சர் பேட்டியால் குழப்பம்

முத்துகிருஷ்ணன்.
தென்காசி மாவட்டம் புளியங்குடியை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன். வயது24. சென்னை ஈக்காட்டுத்தாங்கல் பகுதியில் உள்ள ஒரு தனியார் தொலைக்காட்சியில் செய்தியாளராக இவர் வேலை பார்த்தார். 22ந்தேதி இரவு அவர் வேலை முடிந்து காசி தியேட்டர் அருகே நடந்து சென்றார். அப்போது அங்குள்ள பிள்ளையார் கோயில் முன்பு மழை நீர் வடிகால் பணிக்காக தோண்டப்பட்டு இருந்த பெரிய பள்ளத்தில் விழுந்தார்.இதில் அந்த குழியில் இருந்த இரும்பு கம்பிகள் குத்தி முத்துகிருஷ்ணன் பலத்த காயம் அடைந்தார்.அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பலன்அளிக்காமல் 23ந்தேதி அவர் மரணம் அடைந்தார். இதைத்தொடர்ந்து முத்துகிருஷ்ணனின் குடும்பத்துக்கு 5 லட்சம் ரூபாய் நிவாரண தொகையை முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
இந்த நிலையில் தொலைக்காட்சி செய்தியாளர் முத்துகிருஷ்ணன் மரணம் தொடர்பாக அமைச்சர் வேலு அளித்த பதில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.சென்னையில் பொதுப் பணித்துறை அமைச்சர் வேலு நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
செய்தியாளர் முத்துகிருஷ்ணன் இறந்தது வருத்தப்படத்தக்கது. மனதளவில் நானும் வருத்தப்படுகிறேன். இது பற்றி நான் ஏட்டிக்குப் போட்டியாக சொல்லவில்லை. மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறை மூலமாக இரண்டு பணிகள் நடந்து வருகின்றன. முத்துகிருஷ்ணன் எந்த இடத்தில் பள்ளத்தில் விழுந்தார் என்பது பற்றி விசாரணை நடந்து வருகிறது.ஆனால் அவர் எங்கே விழுந்தார் என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை.அவர் பள்ளத்தில் விழுந்ததாக கூறப்பட்ட பகுதியில் நான் ஆய்வு செய்தேன்.அந்த இடங்களில் எல்லாம் பள்ளத்தில் சிலாப்புகள் கொண்டு மூடப்பட்டு இருக்கின்றன.
நெடுஞ்சாலைத்துறையினர் முறைப்படி தக்க பாதுகாப்புடன் பணிகளை செய்து வருகிறோம்.அதனால் தடுப்புகள் அமைக்கப்படவில்லை என சொல்வது தவறு. இதுபோன்ற பணிகளின்போது,பாதுகாப்பு குறித்து முதல்வர் அளித்துள்ள உத்தரவு படி மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத் துறை பணிகளின்போது தடுப்புகள் அமைக்காமல் நாங்கள் பணிகள் செய்வது இல்லை.இரவு நேரத்தில் இந்தச் சம்பவம் நடந்திருப்பதால், எங்கு நடந்தது?, எப்படி நடந்தது? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. இது தொடர்பாக கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்ய போலீசாரிடம் தெரிவித்துள்ளோம். அவருடைய மரணத்தை நான் நியாயப்படுத்த விரும்பவில்லை.அவரது இறப்பு என்பது அனைவருக்கும் வருத்தத்திற்குரியது.
விபத்து நடந்ததாக கூறப்படும் பகுதியில் இரவு 2.30 மணி வரை பணிகள் நடந்துள்ளன. அதற்கான பணி குறிப்புகள் உள்ளன.அங்கு பணிகள் இரவு 2.30 மணிக்கு முடித்து சிலாப்புகள் போடப்பட்டிருந்ததால், அங்கு பள்ளம் இருப்பதற்கு வாய்ப்பே இல்லை. 5 தினங்களுக்கு முன்னால் தோண்டப்பட்ட பள்ளத்தின் படத்தை விபத்து நடந்த இடம் என்று வாட்ஸ்அப்பில் பகிர்ந்து வருகின்றனர். இது தவறான தகவல்.இந்த அரசு மீது வீண் பழி சுமத்த இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.
இவ்வாறு அமைச்சர் வேலு கூறினார். செய்தியாளர் முத்துகிருஷ்ணன் மரணம் தொடர்பாக அவர் அளித்துள்ள பதில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu