கரும்பு வருவாயில் பங்கு வழங்கப்படவில்லை – விவசாயிகள் வஞ்சிக்கப்படுவதாக கூட்டமைப்பு குற்றச்சாட்டு

கரும்பு வருவாயில் பங்கு வழங்கப்படவில்லை – விவசாயிகள் வஞ்சிக்கப்படுவதாக கூட்டமைப்பு குற்றச்சாட்டு
ஈரோடு:
கரும்பு விவசாயிகளின் உழைப்பில் இருந்து அரசுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் பெரும் வருவாய் கிடைத்து வரும் நிலையில், அந்த வருவாயில் விவசாயிகள் பங்கு பெறாமல் வஞ்சிக்கப்படுகின்றனர் என்ற கடும் குற்றச்சாட்டை தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் செயலர் நல்லசாமி தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வருக்கு அனுப்பிய கடிதத்தில், சர்க்கரை ஆலைகளுக்காக விவசாயிகள் வழங்கும் கரும்பிலிருந்து பெறப்படும் சர்க்கரையின் அடிப்படையில் மட்டுமே விவசாயிகளுக்கு தொகை வழங்கப்படுகிறது. ஆனால், கரும்பிலிருந்து பெறப்படும் மற்ற முக்கிய உபப்பொருட்களான மொலாசஸ், சக்கை, பிரஸ்மட் ஆகியவை அரசுக்கும் தனியார் ஆலைகளுக்கும் கணிசமான வருவாயை வழங்குகின்றன. இந்த உபப்பொருட்களுக்கான வருவாயிலும் விவசாயிகளுக்கு பங்குதொகை வழங்கப்பட வேண்டும் என பர்காவா கமிஷன் பரிந்துரைத்திருந்தாலும், அது இதுவரை அமலாக்கப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அதிலும் முக்கியமாக, டாஸ்மாக் மூலம் தமிழக அரசுக்கு வருடத்திற்கு சுமார் 50,000 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது. இதற்கும் மேலும் ஒரு முறைபாதி வருவாய் பின்கதவு வழியிலும் கிடைக்கிறது. இந்த மொத்த வருவாயின் அடிப்படை மூலப்பொருள் கரும்பிலிருந்து பெறப்படும் மொலாசஸ்தான். ஆனால், இந்த வருவாயின் ஒரு பகுதியும் அந்த உற்பத்திக்குத் தூண் அமைக்கும் விவசாயிகளுக்கு வழங்கப்படாமல் இருப்பது தண்டனைக்குரிய நியாயமற்ற நடவடிக்கையாகும் என அவர் வலியுறுத்தினார்.
நலத்திட்ட உதவிகள் அரசின் வருவாய் மூலம் வழங்கப்படுவதாலேயே நடைமுறைக்கு வருகிறது. ஆனால், இந்த வருவாயை உருவாக்கும் கரும்பு விவசாயிகள் முழுமையாக புறக்கணிக்கப்படுவது அதிர்ச்சியளிக்கிறது. எனவே, அரசும், சர்க்கரை ஆலைகளும், கரும்பு விவசாயிகளுக்கு உரிய பங்குதொகையை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நல்லசாமி வலியுறுத்தியுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu