சரியான நேரத்தில் வாய்ஸ் கொடுத்த நடிகர் விஜய்: இது மக்கள் மைண்ட் வாய்ஸ்

சரியான நேரத்தில் வாய்ஸ் கொடுத்த நடிகர் விஜய்: இது மக்கள் மைண்ட் வாய்ஸ்
X

விழாவில் பேசிய நடிகர் விஜய்.

நடிகர் விஜய் சரியான நேரத்தில் வாய்ஸ் கொடுத்து உள்ளார் என்பது தமிழகம் முழுவதும் மக்களின் மைண்ட் வாய்ஸ் ஆக உள்ளது.

‘ஓட்டுக்கு காசு வாங்காதீங்க’ என நடிகர் விஜய் சரியான நேரத்தில் வாய்ஸ் கொடுத்து உள்ளார் என்று தமிழக மக்கள் தங்கள் மனதில் நினைத்துக் கொண்டிருப்பதாக கருதப்படுகிறது.

தமிழக அரசியலில் தற்போது ‘ஹாட் டாபிக்’ ஆக பேசப்பட்டு வருவது அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரம். செந்தில் பாலாஜி கடந்த 2015 ஆம் ஆண்டு அ.தி.மு.க. அமைச்சரவையில் போக்குவரத்து துறை அமைச்சர் ஆக இருந்தபோது போக்கு வரத்து துறையில் பணி நியமனம் செய்வதாக கூறி சுமார் ஒரு கோடி அளவிற்கு மோசடி செய்தது தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரை கைது செய்துள்ளனர். மொத்தத்தில் இது ஊழல், முறைகேடு தொடர்பான ஒரு வழக்கு.

ஒருவர் அமைச்சராக பதவி ஏற்கும் போது பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்ளும்போது ஊழல் லஞ்சம் இவற்றிற்கு அப்பாற்பட்டு இருப்பேன் என உறுதிமொழி எடுப்பதால் அவர்கள் அரசு ஊழியர் கணக்கில் வந்து விடுகிறார்கள். அந்த வகையில் செந்தில் பாலாஜி தற்போது கைது செய்யப்பட்டு உடல் நல குறைவு ஏற்பட்டதாக கூறியதால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அமலாக்க துறையின் இந்த நடவடிக்கை தொடக்கம் தான் முடிவு எங்கே போய் நிற்கும் என யாருக்கும் தெரியாது. அந்த அளவிற்கு இது ஒரு மிக மோசமான ஊழல் வழக்காக கருதப்படுகிறது. செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக தி.மு.க. தலைமையிலான கூட்டணி கட்சிகள் அனைத்தும் ஓரணியில் அணிவகுத்து மத்திய அரசுக்கு எதிராக தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். இந்த விவகாரம் அரசியல் கட்சியினரிடம் மட்டுமல்ல. பொதுமக்கள் மத்தியிலும் எதிரொலிக்கிறது. காரணம் கைது செய்யப்பட்டுள்ள செந்தில் பாலாஜி கலால் துறையின் அமைச்சராகவும் இருப்பதால் கடந்த இரண்டு ஆண்டு காலமாகவே கலால் துறையில் நடந்து வரும் முறைகேடுகள், மது பாட்டில்கள் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக வசூலிப்பது என ஏகப்பட்ட புகார்கள் கூறப்பட்டு வருகிறது. இப்படி அதிகபட்சமாக வசூலிக்கும் பணம் எங்கே செல்கிறது என்பது ஒரு பெரிய கேள்வி குறி.

ஆக தமிழகத்தில் தற்போது ஊழல்... ஊழல் என்ற ஒரு பேச்சு பரவலாக பேசப்பட்டு வருகிறது. சமூக வலைத்தளங்களில் அன்றாடம் பேசப்பட்டு வரும் விமர்சனங்களே இதற்கு ஆதாரம்.


இந்த நேரத்தில் தான் இளைய தளபதி என போற்றப்படும் நடிகர் விஜய் தான் நடத்திய மாணவர்களுக்கு பரிசு வழங்கும் விழாவில் நேற்று முத்தான வார்த்தைகள் சிலவற்றை உதிர்த்திருக்கிறார். ஓட்டுக்கு காசு வாங்காதீங்க... எதிர்கால வாக்காள செல்வங்களாகிய மாணவர்களாகிய நீங்கள் உங்கள் அம்மா அப்பாவிடம் போய் ஓட்டுக்கு பணம் வாங்க வேண்டாம் என கூறுங்கள் இந்த கருத்தை பாடத்திட்டத்திலும் சேர்க்க வேண்டும் எனக் கூறியிருக்கிறார்,

நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கப் போவதற்கான அச்சாரமாக இந்த வார்த்தைகள் அரசியல் நோக்கர்களால் கணிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை சினிமாவும் அரசியலும் பின்னிப்பிணைந்து இருப்பதை யாராலும் பிரித்து பார்க்க முடியாது. திரைத்துறையில் இருந்து தான் அண்ணா, எம்.ஜி.ஆர். ஜெயலலிதா ஏன் கருணாநிதி கூட அரசியலுக்கு வந்து முதலமைச்சர் பதவியை அலங்கரித்தார்கள்.


அந்த வகையில் நடிகர் விஜய் இளைஞராக இருந்தாலும் அவரும் அரசியலுக்கு வரலாம். அதில் யாருக்கும் எந்த மாறுபட்ட கருத்தும் கிடையாது. ஆனால் அரசியல் நோக்கத்தில் அவர் பேசிய முதல் பேச்சு வெறுப்பு அரசியலுக்கு அப்பாற்பட்டு ஆக்கபூர்வமான சிந்தனைகளை தூண்டும் வகையில் இன்னும் சொல்லப்போனால் கல்வியை வளர்க்கும் வகையில் பேசி இருப்பது தமிழகத்தின் பட்டி தொட்டி முதல் பட்டணம் வரையிலான அனைத்து தரப்பு மக்களையும் அவர் மீதான ஒரு நல்ல எண்ணத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

காரணம் அவர் அனைவராலும் அறியப்பட்ட ஒரு பிரபலமான நடிகர். எங்கும் ஊழல் ஊழல் ஊழல் என பேச்சு வரும் இந்த நேரத்தில் அந்த ஊழலுக்கு ஊற்றுக்கண்ணாக இருப்பது வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் முறை அதை அந்த ஊழலின் நூற்றுக்கண்ணை அப்புறப்படுத்தும் வகையில் விஜய் பேசியிருப்பதாகவே இது கருதப்படுகிறது.


ஏனென்றால் இன்று வரை எந்த அரசியல் கட்சி தலைவரோ, நடிகரோ ஓட்டுக்கு பணம் வாங்காதீர்கள் எனக் கூறியது இல்லை. மக்கள் பணத்திற்கு அடிமையாகி விட்டார்கள். அதனை அரசியல் கட்சித் தலைவர்கள் பயன்படுத்திக்கொண்டு ஆயிரம் ரூபாயை கொடுத்துவிட்டு கோடிக்கணக்கில் சம்பாதித்து விடுகிறார்கள். அதன் விளைவு அமலாக்கத்துறை வரை செந்தில் பாலாஜி ரூபத்தில் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு விடுகிறது.

ஆதலால் நடிகர் விஜய் கால சூழலுக்கு ஏற்ப சரியான நேரத்தில் வாய்ஸ் கொடுத்திருக்கிறார் என்பதே தமிழக மக்களின் மைண்ட் வாய்ஸ் ஆக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மைண்ட் வாய்ஸ் இருப்பது சரிதான். ஆனால் ஓட்டுக்கு பணம் வாங்க மாட்டோம் என மக்கள் எப்போது உறுதி எடுத்து அதனை செயல்படுத்த முன்வருவார்களோ அப்போது தான் ஊழலை ஒழிக்க முடியும் என்பது மட்டும் உறுதி.

Tags

Next Story