பாராளுமன்றத்தில் பாதுகாப்பு குறைபாடு என கூறி அமளி: 15 எம்.பி.க்கள் சஸ்பெண்ட்

பாராளுமன்றத்தில் பாதுகாப்பு குறைபாடு என கூறி அமளி: 15 எம்.பி.க்கள் சஸ்பெண்ட்

பாதுகாப்பு குறைபாடு என கூறி நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர்.

பாராளுமன்றத்தில் பாதுகாப்பு குறைபாடு என கூறி அமளியில் ஈடுபட்ட 15 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று வழக்கம் போல் அவை நடவடிக்கைகள் தொடங்கி நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது லோக்சபாவின் பார்வையாளர் மாடத்தில் இருந்த 2 பேர் அத்துமீறி உள்ளே நுழைந்தனர். அவர்கள் தங்களது கைகளில் கொண்டு வந்த புகை பொருட்களை லோக்சபாவில் வீசினர். லோக்சபாவுக்குள் இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்களை எம்.பி.க்களே மடக்கிப் பிடித்தனர்.

இதேபோல நாடாளுமன்றத்துக்கு வெளியே நின்று புகை பொருட்களை வீசிய மேலும் 2 பேரும் மடக்கிப் பிடிக்கப்பட்டனர். இந்த சம்பவங்களில் மொத்தம் 5 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் ஒருவர் தலைமறைவாக உள்ளார். மகாராஷ்டிரா, ஹரியானாவை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டனர். கர்நாடக மாநில பா.ஜ.க. எம்.பி ஒருவரிடம் இருந்து பெற்ற பார்வையாளர் நுழைவுச் சீட்டு மூலமே இந்த 2 பேரும் நாடாளுமன்றத்துக்குள் நுழைந்ததும் தெரியவந்தது.

இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. நாடாளுமன்ற பாதுகாப்பு அதிகாரிகள் 7 பேர் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் இன்று நாடாளுமன்றத்தின் இரு சபைகளும் வழக்கம் போல கூடியது. நாடாளுமன்றத்துக்குள் எம்.பி.க்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். அவை கூடியதும் உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இரு அவைகளிலும் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். உள்துறை அமைச்சர் விளக்கம் அளிக்கக் கோரி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர். தொடர்ந்து அவை நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக எதிர்க்கட்சி எம்.பிக்கள் 15 பேர் சஸ்பென்ட் செய்யப்பட்டனர். 15 எம்.பிக்களில் 9 பேர் காங்கிரஸ் கட்சியையும், திமுகவில் இருந்து இரண்டு பேர், சிபிஎம் கட்சியில் இருந்து 2 எம்.பி. சிபி.ஐ கட்சியில் இருந்து ஒரு எம்.பியும் அடங்குவர்.

இந்த நிலையில், லோக்சபாவில் என்ன நடந்தது என்பது பற்றி தி.மு.க. மக்களவை குழு தலைவர் டி.ஆர்.பலு விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நாடாளுமன்றத்தில் 100-க்கும் மேற்பட்ட பாதுகாவலர்கள் காலி பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. புதிய நாடாளுமன்றத்தில் புதிய பாதுகாவலர்களை நியமிக்கவில்லை. எம்.பி.க்களின் பாதுகாப்பில் சமரசம் செய்து கொள்வது ஏற்புடையது அல்ல. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உரிய விளக்கம் அளிக்க வேண்டும். நாடாளுமன்றத்தில் குளறுபடி இல்லை என்பதை எப்படி ஏற்க முடியும்? நாடாளுமன்ற பாதுகாப்பு குளறுபடி தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை காற்றில் பறக்க விட்டுள்ளனர். நாடாளுமன்றத்தில் பாதுகாப்புக்கு போதிய அளவில் பாதுகாவலர்கள் இல்லை.

லோக்சபாவில் நடந்தது ஒரு குற்றவியல் நடவடிக்கை. நாங்கள் அனைவருமே இந்த கிரிமினல் நடவடிக்கைகளை பார்த்தோம். இதில் நிர்வாக காரணம் என்ன இருக்கிறது. நிர்வாகத்துறையில் தவறு இருந்தால் நிர்வாகத்துறையில் விசாரணை நடத்தலாம். விசாரணை.. என்றால் என்ன மாதிரியான விசாரணை மேற்கொள்ளப்படும். எங்களை பேசுவதற்கு அனுமதிக்கவில்லை. பாதுகாப்பு குறைபாடு இல்லை என்று எப்படி சொல்ல முடியும்.

ஷூவில் கேஸ் குப்பியை எடுத்துக் கொண்டு எப்படி வரமுடியும். பாதுகாப்பு குறைபாடு இல்லை என்றால் அவர்களை பிடித்து இருக்கலாமே.ராஜ்நாத்சிங் சொல்வது தவறு. பாதுகாப்பே இல்லாமல் நாங்கள் இருக்கிறோம். இன்னும் சொல்லப்போனால் 10 அடி உயரத்தில் உள்ளது. விசிட்டர் கேலரி கையை தூக்கினால் தொடும் அளவுக்கு உள்ளது. அங்கே இருந்து குதிக்கிறார்கள்.. இதை எல்லாமே அனைவரும் பார்த்து இருப்பீர்கள்.

இவ்வாறு டி ஆர் பாலு கூறினார்.

Tags

Next Story