ஹைப்பர் டென்ஷனா? இனி நோ டென்சன்...!அதான் அம்லாங் இருக்கே!

ஹைப்பர் டென்ஷனா? இனி நோ டென்சன்...!அதான் அம்லாங் இருக்கே!
உயர் ரத்த அழுத்தத்தின் தீர்வு அம்லாங்: பயன்கள், முன்னெச்சரிக்கைகள் மற்றும் பக்கவிளைவுகள்

உயர் ரத்த அழுத்தம் அல்லது 'ஹைப்பர் டென்ஷன்' என்பது இன்றைய அவசர உலகில் அனைவரையும் அச்சுறுத்தும் ஓர் அமைதியான கொலைகாரன் என்று கூறலாம். இதை கட்டுப்படுத்த அறிமுகப்படுத்தப்பட்ட அம்லாங் மாத்திரையின் பயன்கள், பக்க விளைவுகள் மற்றும் அதன் பயன்பாட்டில் கவனிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து இங்கு விரிவாக காண்போம்.

அம்லாங் என்றால் என்ன?

அம்லாங் (Amlong) என்பது அம்லோடிபைன் (Amlodipine) என்ற வேதிப்பொருளைக் கொண்டு தயாரிக்கப்படும் மருந்து. இது உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதற்கும், மார்பு வலி (ஆஞ்சினா) போன்ற இதய நோய்களில் இருந்து பாதுகாப்பதற்கும் பயன்படுகிறது. இது 'கால்சியம் சேனல் பிளாக்கர்' (Calcium Channel Blocker) எனப்படும் மருந்து வகையைச் சார்ந்தது.

அம்லாங் மாத்திரை எவ்வாறு செயல்படுகிறது?

அம்லாங் மாத்திரை ரத்த நாளங்களின் சுவர்களில் உள்ள தசைகளைத் தளர்த்தி, இதயத்தின் சுமையை குறைப்பதன் மூலம் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது. இது இதயத்திற்குச் செல்லும் ஆக்ஸிஜனின் அளவை அதிகரித்து, ஆஞ்சினா போன்ற மார்பு வலியைக் குறைக்க உதவுகிறது.

அம்லாங் மாத்திரையின் பயன்கள்

உயர் ரத்த அழுத்தம் (Hypertension): அம்லாங் உயர் ரத்த அழுத்தத்தை திறம்பட கட்டுப்படுத்தும் முக்கிய மருந்துகளுள் ஒன்று. இது ரத்த அழுத்தத்தை குறைப்பதன் மூலம், பக்கவாதம், மாரடைப்பு மற்றும் சிறுநீரக பிரச்சனைகள் போன்ற அபாயங்களில் இருந்து பாதுகாக்கிறது.

ஆஞ்சினா (Angina): மார்பு பகுதியில் ஏற்படும் வலி, நெஞ்சு எரிச்சல் மற்றும் அசௌகரியம் ஆகியவற்றை குறைக்க அம்லாங் பயன்படுத்தப்படுகிறது.

கரோனரி ஆர்ட்டரி நோய் (Coronary Artery Disease - CAD): இதயத்திற்கு ரத்தத்தை எடுத்துச் செல்லும் ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படும் இந்த நோயைக் கட்டுப்படுத்த அம்லாங் உதவுகிறது.

பக்க விளைவுகள்

அடிக்கடி ஏற்படும் பக்க விளைவுகள்: கால் வீக்கம், மயக்கம், தலைவலி, சோர்வு, குமட்டல் மற்றும் வயிற்று வலி.

அரிதான ஆனால் கடுமையான பக்க விளைவுகள்: மிக வேகமாக அல்லது மிக மெதுவான இதயத்துடிப்பு, மஞ்சள் காமாலை மற்றும் கடுமையான ஒவ்வாமை எதிர்வினைகள்.

முன்னெச்சரிக்கைகள்

மருத்துவரின் ஆலோசனை: அம்லாங் மாத்திரையை உங்கள் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எடுத்துக்கொள்ள கூடாது.

மருத்துவ வரலாறு: கல்லீரல் நோய், குறைந்த ரத்த அழுத்தம் அல்லது இதய செயலிழப்பு போன்ற பிரச்சனைகள் இருந்தால், மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.

கர்ப்பம் மற்றும் தாய்ப்பால்: கர்ப்பமாக இருக்கும் அல்லது தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள், அம்லாங் எடுத்துக்கொள்வதற்கு முன்பு மருத்துவரை அணுக வேண்டும்.

மருந்து மற்றும் உணவு: கிரேப்ஃபுரூட் மற்றும் கிரேப்ஃபுரூட் சாறுடன் அம்லாங் எடுத்துக்கொள்ளக் கூடாது. சில மருந்துகளுடன் சேர்த்து எடுத்துக்கொள்ளும்போது, அம்லாங் பக்கவிளைவுகளை ஏற்படுத்தும். எனவே, நீங்கள் எடுத்துக்கொள்ளும் மற்ற மருந்துகள் பற்றி மருத்துவரிடம் தெரிவிக்கவும்.

முக்கிய குறிப்பு: இந்த கட்டுரை பொதுவான தகவல்களை மட்டுமே வழங்குகிறது. அம்லாங் மாத்திரை குறித்த ஏதேனும் கேள்விகள் அல்லது சந்தேகங்கள் இருந்தால், தயவுசெய்து உங்கள் மருத்துவரை அணுகவும்.

Tags

Next Story