கோவையில் பா.ஜ.க. முழு அடைப்பு நடத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை ஐகோர்ட்டு. கோப்பு படம்.
கோவை கோட்டை மேட்டில் உள்ள சங்கமேஸ்வரர் கோவில் முன்பு கடந்த 23-ந்தேதி ஒரு கார் திடீர் என்று வெடித்து தீப்பிடித்து எரிந்தது. இதில் காரில் வந்த அதே பகுதியை சேர்ந்த ஜமேஷா முபின் (வயது 29) என்பவர் உடல் கருகி உயிரிழந்தார். இவர் என்ஜினியரிங் பட்டதாரி. பழைய புத்தகங்கள் விற்கும் கடை வைத்து இருந்தார்.கார் வெடித்த இடத்தில் இருந்து சமையல் எரிவாயு சிலிண்டர், ஆணிகள், பால்ரஸ் குண்டுகளும் கைப்பற்றப்பட்டன.பலியான ஜமேஷா முபின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் வெடிப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த சம்பவம் குறித்து தனிபடை போலீசார் விசாரணை நடத்தி 6பேரை இதுவரை கைது செய்துள்ளனர். தற்போது இந்த வழக்கை மத்திய அரசின் தேசிய புலனாய்வு குழு விசாரணை நடத்தி வருகிறது.இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக தமிழக அரசின் மீது பா.ஜ.க.மாநில தலைவர் அண்ணாமலை பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறிவருகிறார்.தமிழக அரசை கண்டித்து 31ந்தேதி கோவை மாவட்டத்தில் முழு அமைப்பு போராட்டம் நடத்தப்படும் என்றும் பா.ஜ.க. அறிவித்துள்ளது. இந்த முழு அடைப்பு போராட்டத்திற்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில் இந்த முழு அடைப்பு போராட்டத்துக்கு தடை விதிக்கக் கோரி கோவை தொழிலதிபர் வெங்கடேஷ் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவில், "சிலிண்டர் வெடித்த விபத்து தொடர்பாக ஏற்கெனவே 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கு ஏற்கனவே தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இந்த நிலையில், சிலிண்டர் வெடிப்பு விவகாரத்தில் மாநில அரசு மீது குற்றம்சாட்டி முழு அடைப்பு நடத்துவது தேவையற்றது. எனவே திங்கட்கிழமை பா.ஜ.க. நடத்தும் இந்த முழு அடைப்பு போராட்டத்துக்கு கோர்ட் தடை விதிக்க வேண்டும்" என்று கூறியிருந்தார்.
ஐகோர்ட் நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய், பரத சக்கரவர்த்தி அமர்வின் முன்பு இந்த வழக்கு நேற்ற விசாரணைக்கு வந்தது. இந்த முழு அடைப்பு போராட்டத்திற்கு போலீசாரிடம் எந்த விதமான அனுமதியும் வாங்கியதாக தெரியவில்லை என்று மனுதாரர் தரப்பில் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது.
இதே போல் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை சார்பில் கோர்ட்டில் தெரிவிக்கும் போது, " கோவையில் நடத்தப்படும் முழு அடைப்புக்கு கட்சியின் மாநில தலைமை அழைப்பு எதுவும் விடுக்கவில்லை. கட்சியின் மாவட்ட நிர்வாகத்தினரால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. முழு அடைப்பு நடத்துவதா? அல்லது வேறு என்ன வகையான போராட்டம்? என்பது குறித்து இன்னும் முடிவு எதுவும் எடுக்கவில்லை. முழு அடைப்பு நடத்தும் மாவட்ட நிர்வாகிகளின் அழைப்பை நாங்கள் அங்கீகரிக்கவில்லை" என்றும் கூறினர். இதை நீதிபதிகள் பதிவு செய்து கொண்டனர். பின்னர் நீதிபதிகள் கூறும்போது, "அக்டோபர் 31-ம் தேதி முழு அடைப்பு நடத்தினால் போலீசார் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம்" என்றனர். அதோடு எந்த விதமான இடைக்கால உத்தரவும் பிறப்பிக்காமல் நவம்பர் 1-ம் தேதிக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu