சரிகமப சீசன் 3 இறுதிப்போட்டி பாடகர் புருஷோத்தமன் வின்னராக தேர்வு ரூ. 10 லட்சம் பரிசு வழங்கல்

சரிகமப சீசன் 3 இறுதிப்போட்டி   பாடகர் புருஷோத்தமன் வின்னராக தேர்வு    ரூ. 10 லட்சம் பரிசு வழங்கல்
X

தனியார்  டிவியின் சரிகமப நிகழ்ச்சியின்  இறுதிப்போட்டியில் கலந்துகொண்ட போட்டியாளர்கள் (கோப்பு படம்)

Saregamapa Season -சரிகமப சீசன் 3 வின்னராக மக்களின் அமோக ஆதரவைப் பெற்ற பாடகர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

Saregamapa Season -ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த சரிகமப சீசன் 3 நிகழ்ச்சியின் இறுதிப் போட்டி நடந்தது. இரு சுற்றுகளாக நடந்த இந்த போட்டியில் சரிகமப தொடரின் வெற்றியாளர் நிகழ்ச்சியின் இறுதியில் அறிவிக்கப்பட்டார். பார்வையாளர்கள் அளித்த வாக்குகள் மற்றும் நடுவர்கள் அளித்த மதிப்பெண் அடிப்படையில் வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு நள்ளிரவு 12 மணிஅளவில் அறிவிக்கப்பட்டனர்.

சரிகமப சீசன் 3 டைட்டில் வின்னராக புருஷோத்தமன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு அடுத்தபடியாக முதல் ரன்னர் அப்பாக ராகவர்ஷினியும் இரண்டாவது ரன்னரப்பாக லக்ஷனாவும் தேர்வாகி இருக்கின்றனர்.

பாடகர்கள் ஸ்ரீநிவாஸ், கார்த்திக், விஜய் பிரகாஷ், ரம்யா நம்பீசன் ஆகியோர் நடுவராக இருக்கும் இந்த நிகழ்ச்சியில் பல்வேறு இளம் பாடகர்கள் போட்டியாளர்களாக கலந்து கொண்டு போட்டி போட்டனர். பல்வேறு சுற்றுகளிலும் தங்களது தனித் திறமையைக் காட்டி ஒவ்வொருவராக அடுத்தடுத்த சுற்றுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.


கானா, கிராமத்து பாடல், வெஸ்டர்ன் என பல்வேறு சுற்றுகளில் தங்களது குரல் வளத்தை காண்பித்து நடுவர்களிடம் பாராட்டைப் பெற்றனர் போட்டியாளர்கள். அவர்களது பாடல்கள் சமூக வலைத்தளங்களிலும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றன.

ஒவ்வொரு சுற்றின் இறுதியிலும் ஒரு போட்டியாளர் எலிமினேட் செய்யப்பட்டும் வந்தனர். 23 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த போட்டியில், ஒவ்வொருவராக எலிமினேட் செய்யப்பட்டு கடைசியில் 6 போட்டியாளர்களிலிருந்து வெற்றியாளர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இறுதிப் போட்டிக்கு அக்ஷயா, ஜீவன், புருஷோத்தமன், லக்ஷனா, ராகவர்ஷினி, நாகர்ஜூன் ஆகியோர் இறுதிப் போட்டியில் டைட்டிலுக்காக மோதினர்.


நேற்று மாலை 6 மணி முதல் நேரடியாக இறுதிப்போட்டியானது ஒளிபரப்பானது. இந்த நிகழ்ச்சியில் ஜிவி பிரகாஷ், ஷ்ரேயா கோஷல், சந்தானம், உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சிக்கு விளம்பரங்களை தொடர்ந்து அளித்து வந்த ஸ்பான்ஸர் நிறுவன உரிமையாளர்களும் சிறப்பு விருந்தினர்களாக நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பித்தனர்.

பொதுமக்களின் வாக்குகள், நடுவர்களின் மதிப்பெண்கள் அடிப்படையில் முதலிடத்தைப் பிடித்துள்ளார் புருஷோத்தமன். இவருக்கு ரூ. 10 லட்சம் பரிசாக வழங்கப்பட்டது. நிகழ்ச்சி தொடங்கியதிலிருந்து புருஷோத்தமனின் குரலில் வசீகரத்தைக் கண்டவர்கள் அவரது குரலுக்கு ரசிகர்களாகிப் போனார்கள். பார்வையற்ற மாற்றுத் திறனாளியான புருஷோத்தமன் மற்ற போட்டியாளர்களுடன் போட்டி போட்டது மட்டுமின்றி அவர்களை ஓவர்டேக் செய்யும் அளவுக்கு கடுமையான போட்டி அளித்தார்.

ஒவ்வொரு சுற்றின்போதும் நடுவர்களிடம் மிகப் பெரிய பாராட்டையும் பெறுவார் புருஷோத்தமன். சரிகமப சாதனைப் பட்டியலின் சரித்திர நாயகனாக நிற்கிறார் புருஷோத்தமன். இவரைப் போல ஒரு போட்டியாளர் இந்த நிகழ்ச்சிக்கு வந்தது நாங்கள் செய்த பாக்கியம் என ஸ்ரீநிவாஸே மேடையில் பாராட்டினார்.

இவர் பாடிய சொல்லடி அபிராமி பாடலுக்கு ஒட்டுமொத்த அரங்கமும் எழுந்து நின்று கைத்தட்டல்களை பரிசாக கொடுத்தது. அதற்கு அப்படியே நேர்மாறான தண்ணீர் தொட்டி தேடி வந்த கண்ணுக்குட்டி நான் பாடலை தனது இனிமையான குரலில் பாடி அசத்தியிருந்தார்.

என் மன வானில் சிறகை விரிக்கும் வண்ணப்பறவைகளே எனும் பாடலைப் பாடி அனைவரையும் சிலிர்க்க வைத்தார். இப்படி ஒவ்வொரு சுற்றிலும் இவரது பாடலுக்கு கைத்தட்டல்களும் பாராட்டுகளும் குவிந்து வந்தன.

அதைத் தொடர்ந்து முதல் ரன்னராக ராகவர்ஷினி 5 லட்சம் ரூபாய் பரிசாக பெற்றார். அடுத்த இடத்தில் லக்ஷனாவுக்கு 3 லட்சம் ரூபாய் பரிசு கிடைத்தது. அனைவரது மனதையும் கவர்ந்த நாகர்ஜூனுக்கு மக்கள் நாயகன் எனும் விருது வழங்கப்பட்டு ரூ.1 லட்சம் பரிசாக வழங்கி பெருமைபடுத்தப்பட்டது.


மக்களின் நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்ட நாகார்ஜீனுக்கு மக்கள் அமோக வாக்கினை தொடர்ந்து அளித்து வந்ததால் அவரால் இறுதிப்போட்டியில் வெற்றி பெற முடிந்தது. சொல்லப்போனால் இந்த நிகழ்ச்சியானது சாமான்யனையும் சாதனையாளர்களாக்கும் நிகழ்ச்சியாக உருவெடுத்து வந்தது. அந்த வகையில் கடைசியில் இறுதிப்போட்டியிலும் சாமானியர்கள்தான் சாதனையாளர்களாக தேர்ந்தெடுத்தது பார்வையாளர்களுக்கு மனநிறைவைத் தந்துள்ளது. சரிகமப சீனியர் சீசன் ௩ முடிவடைந்தாலும் இதன் தொடரானது சீசன் குறுகிய காலத்தில் துவங்கும் என கருதப்படுகிறது. மேலும் வரும் ஜூலை ௧ ந்தேதி முதல் இந்த தொடரின் ஸ்பான்ஸர்களின் உதவியோடு சரிகமப லிட்டில் சாம்ப்ஸ் நிகழ்ச்சியானது துவங்க உள்ளது. இதற்கான குட்டீஸ்கள் ஏற்கனவே தேர்வாகி விட்டனர். இதற்கான விளம்பரமும் டிவியில் அவ்வப்போது ஒளிபரப்பாகி வருகிறது. தேர்வு செய்யப்பட்ட குட்டீஸ்கள் பாடலைப் பாட இந்நிகழ்ச்சிக்கான லோகோவை நடிகர் சந்தானம் மற்றும் பாடகி ஷ்ரேயே கோஷல் ஆகியோர் திறந்து வைத்து அறிமுகப்படுத்தினர். டிவியில் பல்வேறு தொடர்கள் வெளிவந்தாலும் இதுபோன்ற திறமையாளர்களின் நிகழ்ச்சியையும் பார்வையாளர்கள் புறக்கணிக்காமல் பார்த்துவருவது இசை வயது வித்தியாசமின்றி அனைவரையும் கவரும் அருமருந்து என்பதைத்தான் நிரூபணம் செய்துள்ளது என்பதே நிதர்சனமான உண்மை.....




அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
ராசிபுரம் அருகே இரு சமூகத்தினர் மோதல்- போலீசார் குவிப்பு..!