ஓஹோனு வசூலிக்கும் மஞ்சுமல்பாய்ஸ்... இப்ப எத்தன கோடி தெரியுமா?
உலக அளவில் மஞ்சுமல்பாய்ஸ் படம் ஆஹா ஓஹோவென்று வசூல் மழை பொழிந்து கொண்டிருக்கிறது. 25, 50, 100 என கோடிக்கணக்கில் வசூலில் மிகப் பெரிய சூறாவளியை உருவாக்கியுள்ள இந்த படம் தற்போது ஒரு மிகப் பெரிய சாதனையை படைத்துள்ளது.
தமிழகத்தில் தமிழ் சினிமாவே இரண்டு நாட்களில் மண்ணைக் கவ்விக் கொண்டிருந்த பிப்ரவரி மாதத்தில் தமிழ் டப்பிங் கூட இல்லாமல் மலையாளத்திலேயே வெளியாகி மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது மஞ்சுமல்பாய்ஸ். தமிழ் சினிமாவே கேரளாவுக்கு சென்றால் 15 - 20 கோடிகள் என்ற அளவுக்குதான் திரையரங்கு உரிமை விற்பனையாகும் என்று இருக்கிறது. ஆனால் ஒரு மலையாளப்படம் அதுவும் டப்பிங் இல்லாமல் 50 கோடியை வசூலித்து இன்னும் சில திரையரங்குகளில் வசூல் மழை பொழிந்து கொண்டிருக்கிறது. உலக அளவில் இந்த படம் பெற்றுள்ள வசூல் எவ்வளவு தெரியுமா?
100 இல்ல 150 இல்ல 200 கோடி. இந்த வாரத்தில் நிச்சயமாக இந்த சாதனையை படைத்துவிடும் என்கின்றன திரையரங்கு வட்டாரங்கள். தமிழ்நாட்டில் ஒரு மலையாள திரைப்படம் ஹவுஸ்ஃபுல்லாக இத்தனை நாட்கள் ஓடி மிகப் பெரிய வசூலைப் பெற்றிருப்பது இதுதான் முதல்முறை என்று சொல்லிவிடமுடியாது. ஆனால் இதற்கு முன் வெளியான படங்கள் கேரளத்தில் பெரும் வெற்றி பெற்று அதன்பிறகு தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகும்.
அந்த வகையில், ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்கத்தில் வெளியான 2018 திரைப்படம் மொழிகள் கடந்து உலகம் முழுக்க மிகப் பெரிய வெற்றியை பெற்றது. உலக அளவில் 175 கோடி வசூலை பெற்று முதல் மலையாளப் படமாக நிமிர்ந்து நின்றது இந்த படம். தற்போது மஞ்சுமல் பாய்ஸ் அந்த சாதனையை முறியடித்துள்ளது. இந்த வரிசையில் முதன்முதலில் புலிமுருகன் திரைப்படம்தான் 139 கோடி ரூபாய் வசூலைப் பெற்று உலகின் அதிக வசூல் செய்த மலையாளத் திரைப்படமாக இருந்தது. அடுத்த இடத்தில் 175 கோடி ரூபாய் வசூலைப் பெற்ற 2018 படம் இருந்தது. இந்நிலையில் மஞ்சுமல்பாய்ஸ் அத்தனை படங்களையும் தூக்கி சாப்பிட்டுள்ளது. புலிமுருகன் படத்தின் சாதனையை 17 நாட்களிலும் 2018 படத்தின் சாதனையை 21 நாட்களிலும் முந்தியது இந்த படம்.
கடந்த பிப்ரவரி மாதம் 22ம் தேதி வெளியான மஞ்சுமல்பாய்ஸ் திரைப்படம் 21 நாட்களில் 176 கோடி ரூபாய் வசூலைப் பெற்றுள்ளது. இன்றைய தின முடிவில் தோராயமாக 180 கோடி ரூபாய் வசூல் பெற்றிருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
180 கோடி ரூபாய்க்கும் அதிகமான வசூலைப் பெற்றுள்ள மஞ்சுமல்பாய்ஸ் திரைப்படம் ஆல் டைம் பிளாக்பஸ்டர் என வர்ணிக்கப்பட்டு வருகிறது. தமிழ் அல்லாத வேறுமொழி திரைப்படம் டப்பிங் செய்யப்படாமல் வெளியாகி குறைந்த நாட்களில் 50 கோடியைக் கடந்த முதல் திரைப்படமாக மஞ்சுமல்பாய்ஸ் இருக்கிறது. இப்படி பல பெருமைகளைத் தாங்கி இன்றும் திரையரங்குகளில் சில திரைகளில் ஓடி வருகின்றது இந்த திரைப்படம்.
சௌபின் ஷாஹிர், ஸ்ரீநாத் பாசி, பாலு வர்கீஸ், கணபதி, ஜீன் பால் லால் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான இந்த திரைப்படத்தில் அத்தனைபேரின் கதாபாத்திரங்களும் பேசப்பட்டு வருகின்றன. முக்கியமாக சௌபின் ஷாஹிர், ஸ்ரீநாத் பாசி கதாபாத்திரங்கள் தமிழக மக்களின் மனதில் நெருங்கிய பாத்திரங்களாக மாறிவிட்டன. குழந்தைகள் கூட சுபாஷே என்று கத்தும் அளவுக்கு அவர்கள் நெருக்கமாகிவிட்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu