நான் கிராமத்து படம்தான் பண்ணுவேன் - 'காரி' பட விழாவில் நடிகர் சசிகுமார்

நான் கிராமத்து படம்தான் பண்ணுவேன் - காரி பட விழாவில் நடிகர் சசிகுமார்
X

காரி பட போஸ்டர்.

'காரி' திரைப்படத்தின் புரமோஷன் விழாவில் நடிகர் சசிகுமார் இயக்குநர் ஹேமந்த் மற்றும் படக்குழுவினர் கலந்துகொண்டு பேசினர்.

தமிழ்த்திரையுலகில் முக்கியப் பிரபலமாக விளங்கும் இயக்குநரும் நடிகருமான சசிகுமார், நாயகனாக நடித்துள்ள 'காரி' திரைப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப் படம் 'காரி'. இத் திரைப் படத்தில் சசிகுமார் நாயகனாக நடிக்க, அவருக்கு இணையாக மலையாள நடிகை பார்வதி அருண் இந்தத் திரைப் படத்தின் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமாகிறார். அறிமுக இயக்குநரான ஹேமந்த் இந்தத் திரைப் படத்தை இயக்கியுள்ளார். படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.

பாலிவுட் நடிகரான ஜே.டி.சக்கரவர்த்தி இத் திரைப் படத்தில் வில்லனாக நடிக்க, மேலும் முக்கிய வேடங்களில் ஆடுகளம் நரேன், நாகிநீடு, ரெடின் கிங்ஸ்லி, அம்மு அபிராமி, பிரேம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். வருகின்ற நவம்பர் 25-ம் தேதி 'காரி' திரைப்படம் வெள்ளித் திரையில் வெளியாக உள்ளது.

இந்த நிலையில், இந்தத் திரைப் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி அண்மையில் சென்னையில் நடைபெற்றது. விழாவில் கோலிவுட் பிரபலங்களும் முக்கியப் பிரமுகர்களும் பங்கேற்றனர். இவ்விழாவில் பேசிய நடிகர் சசிகுமார், ''இது எனக்கான கதை. என் மண்ணின் கதை. ஒரே மாதிரியான கதையில் நடிக்கிறீர்களே… அதுவும் கிராமத்துக் கதைகளிலேயே நடிக்கிறீர்களே.. என்றெல்லாம் கேட்கிறார்கள்.

நான் கிராமத்து படம்தான் பண்ணுவேன். அவர்களுக்கு நான் பண்ணாமல் வேறு யார் பண்ணுவார்கள்? என்னுடைய தயாரிப்பில் 'ஜல்லிக்கட்டு' படம் பண்ண முயற்சித்தேன். அது முடியவில்லை. இப்போது தயாரிப்பாளர் லஷ்மண்குமார் தயாரிப்பில் என்னுடைய ஆசை நிறைவேறி உள்ளது.

இந்தத் திரைப்படத்தில் அம்மு அபிராமி மிக அருமையான குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். என்னைக் கேட்டால், அவர் இதுபோன்று நிறைய கேரக்டர் ரோல்களில் நடிக்க வேண்டும். ஏனென்றால், இப்போது தமிழ் சினிமாவில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடிப்பதற்குத்தான் நடிகைகள் ரொம்பக் குறைவாக இருக்கிறார்கள். இதில் வில்லனாக நடித்துள்ள ஜே.டி . சக்கரவர்த்தி, நான் ரிஸ்க் எடுத்து நடித்த காட்சிகளைப் பார்த்துவிட்டு, என்னை அழைத்து பாதுகாப்பு ரொம்ப முக்கியம் என அறிவுரை கூறினார்.

நான் இந்தத் திரைப்படத்தின் மூலம் ஒன்பதாவது முறையாக புதிய இயக்குநரை அறிமுகப்படுத்துகிறேன். ஹேமந்த் நிச்சயமாக மிகப்பெரிய இயக்குநராக வருவார். இந்தப் படத்தின் வெற்றிக்குப் பிறகு, தயாரிப்பாளர் லஷ்மண்குமார் இயக்குநர் ஹேமந்த்துக்கு பரிசாக கார் கொடுக்காமல், கார்த்தியை வைத்து படம் இயக்கும் வாய்ப்பைக் கொடுக்க வேண்டும்.'' என்றார்.

இயக்குநர் ஹேமந்த் பேசும்போது, "இந்தத் திரைப் படத்தின் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமாரை மேன் ஆப் தி ஆக்‌ஷன் என்று கூறினால், ஹீரோ சசிகுமாரை மேன் ஆஃப் ட்ரூ வேர்ட்ஸ் என்று சொல்வேன். படத்தின் கதையை கேட்ட சசிகுமார் நீங்க கதை சொன்ன மாதிரியே படமும் எடுத்துட்டா வெற்றிதான் என்று உற்சாகப்படுத்தினார்.

லோக்கல் என்ற வார்த்தையை மோசமான வார்த்தையாக நினைக்கவேண்டாம் லோக்கல் என்றால் நேட்டிவிட்டியை குறிக்கும்.. எவ்வளவு நேட்டிவிட்டியாக இருக்கிறோமோ அந்த அளவிற்கு மதிப்பு இருக்கும். ஆனால், இப்போது அந்த நேட்டிவிட்டியை தகர்க்கும் விதமாகத்தான் பல விஷயங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதில் ஒன்றுதான் ஜல்லிக்கட்டு போன்ற தமிழர்களின் பாரம்பரிய கலாசாரத்தை பிரதிபலிக்கும் விளையாட்டுக்கு தடை விதிக்க முயற்சிப்பது.

ஜல்லிக்கட்டுக்கு மட்டும் ஏன் எதிர்ப்பு என்றால், இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் மட்டும்தான் இளைஞர்கள் இன்னும் கலாசாரம் தொடர்பான விளையாட்டுகளில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களை திசை திருப்புவதற்காகத்தான் ஜல்லிக்கட்டு தடை போன்ற விஷயங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இந்தத் திரைப் படத்தில் மனிதர்களின் நம்பிக்கை, உறவு சிக்கல்கள் ஆகியவற்றை கூறியுள்ளோம். மொத்தத்தில் இந்தத் திரைப் படம் எமோஷனல் ஆக்‌ஷன் ட்ராமாவாக இருக்கும்" என்றார்.

'காரி' திரைப் படத்தை எல்லோரும் திரையரங்குகளில் பார்த்து ரசிக்க வேண்டும் என்பதுதான் படக்குழுவினர் அனைவரின் ஒட்டுமொத்த குரலாக விழாவில் ஒலித்தது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!