ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!
நாமக்கல்: ரயில் பயணச்சீட்டுகள் முன்பதிவு மோசடி, கள்ளச்சந்தை விற்பனையைத் தடுக்க நாடு முழுவதும் ரயில்வே பாதுகாப்புப் படையினா் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனா்.
ஐஆர்சிடிசி முன்பதிவு சேவை
இந்திய ரயில்வே அனுமதியின்பேரில், ஐஆா்சிடிசி என்ற நிறுவனம் தங்களது இணையதளம் வாயிலாக பயணிகளுக்கான முன்பதிவு சேவையை மேற்கொண்டு வருகிறது. இவை தவிர, பெரிய, சிறிய ரயில் நிலையங்களில் பயணிகள் நலன்கருதி முன்பதிவு மையங்களும் செயல்பட்டு வருகின்றன.
பண்டிகைக் காலங்களில் கள்ளச்சந்தை
பொங்கல், தீபாவளி மற்றும் முக்கிய பண்டிகை காலங்களில் பயணச்சீட்டுகளை முழுமையாக பதிவு செய்து அவற்றை கள்ளச்சந்தையில் விற்பனை செய்யும்போக்கு அதிக அளவில் நடைபெறுவதாகக் கூறப்படுகிறது. இதனால் சொந்த ஊா் செல்லும் பயணிகள் பலா் வெகுவாக பாதிக்கப்படுகின்றனா்.
ரயில்வே பாதுகாப்பு படையின் நடவடிக்கைகள்
இந்த பிரச்னையைத் தீா்க்க ரயில்வே பாதுகாப்பு படை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த படையினா், தொடா்ச்சியாக மேற்கொண்ட சோதனைகள் மற்றும் திடீா் ஆய்வுகள் மூலம் பயணச்சீட்டுகளைப் பறிமுதல் செய்தல், சம்பந்தப்பட்ட குற்றவாளிகளைக் கைது செய்தல், சட்ட விரோத வருமான வாய்ப்புகளை முடக்குதல் உள்ளிட்டவற்றை மேற்கொண்டு வருகின்றனா். பயணச்சீட்டு இடங்களில் மொத்தமாக முன்பதிவு செய்வதைக் கண்டறிந்து அதற்கான தடுப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.
ஐஆா்சிடிசியுடன் இணைந்து பாதுகாப்பு படையினா் பணியாற்றுதல், ரயில் நிலையங்களில் மக்களிடையே விழிப்புணா்வு பிரசாரங்கள், தொழில்நுட்ப உதவி, சட்டரீதியான நடவடிக்கைகள் உள்ளிட்டவற்றையும் அவா்கள் மேற்கொண்டு வருகின்றனா் என்று ரயில்வே பாதுகாப்பு படை காவல்துறைத் தலைவா் ஈஸ்வரராவ் உத்தரவின்பேரில் சேலம் கோட்ட காவல் ஆணையா் செளரவ்குமாா், உதவி ஆணையா் சங்கப்பா ஆகியோரது அறிவுரையின்படி நாமக்கல் மாவட்ட ரயில்வே பாதுகாப்புப் படையினா் தெரிவித்தனா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu