Chandramukhi மாளிகையும் அங்கு நடந்த கொலைகளும்! நூற்றாண்டு மர்மம்..!
சந்திரமுகி படத்தில் நடைபெற்றது போல இரண்டு கொலைகள், பூட்டப்பட்டு கிடந்த மர்ம அறை, கொலை செய்தது யார் என்ற மர்மம்...! நடந்தது கேரளத்தில்! வாருங்கள் முழு கதையையும் தெரிந்து கொள்வோம்.
ஏமாற்றிய சந்திரமுகி 2
ரஜினிகாந்த் நடிப்பில் 2005ஆம் ஆண்டு வெளியான சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகமான "சந்திரமுகி 2" நேற்று (செப்டம்பர் 28) வெளியானது. முதல் பாகத்தைப் போலவே இரண்டாம் பாகத்திலும் ரசிகர்களின் எதிர்பார்ப்புகள் மிக அதிகமாக இருந்தன. படம் எப்போது வெளியாகும் திரையரங்கம் எப்போது ஃபுல்லாகும் என படக்குழு காத்திருந்தது. ஆனால், படம் வெளியான பிறகு ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.
சந்திரமுகியின் அசுர வெற்றி
தமிழ் சினிமாவில் சில திரைப்படங்கள் வெளியாகி பெரும் வரவேற்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தும். அந்த வகையில் பல ஆண்டுகளுக்கு பிறகு மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்திய படம் ரஜினிகாந்த், ஜோதிகா, வடிவேலு, பிரபு நடிப்பில் வெளியான சந்திரமுகி படம். இந்த படம் வெளியாகி கிட்டத்தட்ட 1 ஆண்டு முழுக்க திரையரங்குகளில் ஓடியது. படத்துக்கு மிகப் பெரிய பிளஸ் பாய்ண்டாக ரஜினி, வடிவேலு காமெடியும், ஜோதிகாவின் மிரட்டலான நடிப்பும் பேசப்பட்டது.
மணிச்சித்திரத் தாழு
சந்திரமுகி படத்தின் மூல கதை மலையாளத்தில் பல ஆண்டுகள் ஓடி வெற்றி பெற்ற மணிச்சித்திர தாழு படத்தினுடையதுதான். இந்த படத்தில் சுரேஷ்கோபி, மோகன்லால், ஷோபனா ஆகியோர் நடித்திருப்பர். இந்த படம் மலையாளத்தில் வெளிவந்த மிக பயங்கரமான பேய்ப் படங்களில் ஒன்றாக வரலாற்றில் பதிவாகியுள்ளது. இந்த படத்தை அப்படியே கன்னட மொழியில் ரீமேக் செய்தார் பி வாசு. அங்கும் படம் பட்டி தொட்டியெல்லாம் ஓடி வெற்றி பெற்றதால், ரீமேக் படங்களாலே சூப்பர் ஸ்டார் ஆன ரஜினிகாந்த் அந்த படத்தை தன்னை வைத்து ரீமேக் செய்ய சொல்லி கேட்டுக் கொண்டார்.
பி வாசு திரைக்கதை
ரஜினிகாந்த் மிகப் பெரிய நடிகர் அவரை வைத்து படம் எடுத்தால் மிகப்பெரிய பட்ஜெட்டிலேயே எடுத்துவிடலாம் என கணக்கு போட்டு படத்தில் பல நட்சத்திரங்களையும் இழுத்து போட்டு மணிச்சித்திரத் தாழு படத்தின் கதையை அப்படியே தமிழில் எழுதி அதற்கு ஏற்றவாறு வசனங்களிலும் சில மாற்றங்கள் செய்து படமாக்கினார். ரஜினிகாந்த் தன் பங்குக்கு சில ஐடியாக்கள் கொடுக்க அது பிசினஸுக்கு மிகப் பெரிய பலமாக அமைந்தது.
மலையாள பங்களா மர்மம்
மணிச்சித்திரத்தாழு படத்தின் கதையை எழுதியவர் மது முட்டோம் என்பவர். முட்டோம் எனும் இடத்தில் அமைந்துள்ள அலுமூட்டில் மேடா எனும் மாளிகையில் நடைபெற்ற இரட்டைக் கொலைகளும் அதற்கு பின் நடைபெற்ற புரளிகளும்தான் மணிச்சித்திரத் தாழு படமாக வந்தது.
மிகப் பெரிய பணக்காரர்களாக சன்னார் இன குடும்பத்தில் அவர்களுக்கு பெண்ணுரிமை வாரிசு வழிதான் நடைமுறை. அதாவது மகளுக்கு சொத்து எழுதி வைப்பார்களாம். மகள் இல்லையென்றால் ராஜாமாதாவாக இருந்து அடுத்து இளவரசியைத் தேர்ந்தெடுத்து சொத்து உரிமை கொடுப்பது வழக்கமாம். அப்படி இருக்கையில் வாரிசாக இருந்து குடும்ப தலைவராக உயர்ந்த கொச்சுகுஞ்சு சன்னார் தனது மகனுக்கு சொத்து எழுதி கொடுத்துவிட்டாராம். இதனால் ஆத்திரமடைந்த மகள் வழி பேரன் ஒரு அறையில் வைத்து தாத்தாவை கொலை செய்திருக்கிறார்.
இவரைக் கொலை செய்யும்போது பார்த்த இன்னொரு பெண்ணையும் கொன்றுவிட்டு தப்பிவிட்டாராம். அந்த கொலை நடந்த அறை வெகுநாட்களாக பூட்டப்பட்டு கிடந்ததாம். அங்கு கொச்சுகுஞ்சு பேயாக வருவார் எனவும் புரளிகள் உண்டு. இதனை சினிமா கதையாக மாற்றினார் மது முட்டோம்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu