புதிய பொலிவுடன் மீண்டும் ஏவிஎம் ஸ்டூடியோ… தொடரும் வரலாறு..!

புதிய பொலிவுடன் மீண்டும் ஏவிஎம் ஸ்டூடியோ… தொடரும் வரலாறு..!
X

ஏவிஎம் ஸ்டுடியோ 

சென்னையில் உள்ள பாரம்பரியமான ஏவிஎம் ஸ்டூடியோ, புதிய பொலிவுடன் தயாராகியுள்ளது. மீண்டும் இங்கே படப்பிடிப்பு நடைபெறுமாம்.

தமிழ்த் திரைப்பட வரலாற்றில் பழம்பெரும் நடிகர்களின் வெற்றிக்கு வித்திட்டதில் ஏவிஎம் ஸ்டுடியோவின் பங்கு அளப்பரியது. தென்னிந்தியாவில் திரைப்படம் என்றாலே சென்னை வடபழனியில் உள்ள ஏவிஎம் நிறுவனத்தின் உலக உருண்டைதான் எல்லோருக்கும் நினைவுக்கு வரும். 1940களில் இருந்து ஓடிடி யுகம் வரை ஏவிஎம் நிறுவனம் தற்போதும் அதன் தனித்துவத்தை தக்கவைத்துக் கொண்டே இருக்கிறது என்பதுதான் ஏவிஎம் நிறுவனத்தின் தனிச்சிறப்பு.

இந்திய திரைப்பட வரலாற்றில் தவிர்க்க முடியாத ஸ்டுடியோவான தமிழகத்தின் தலைநகர் சென்னையில் அமைந்துள்ள ஏவிஎம் ஸ்டூடியோ அண்மையில் புதுப்பிக்கப்பட்டு மீண்டும் திரைப்பட நிகழ்வுகள் திரைப்பட விழாக்கள் நடைபெற உள்ளன என்கிற தித்திப்புத் தகவல் வெளியாகியுள்ளது.

நூற்றாண்டைக் கடந்த இந்திய திரைப்பட உலகில் அதன் வளர்ச்சிக்கு தென்னிந்திந்தியாவில் பங்களிப்பு செய்த ஸ்டூடியோவில் தமிழகத்தைச் சேர்ந்த ஏவிஎம் ஸ்டூடியோ மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். தமிழ்த் திரைப்படம் மற்றும் தமிழக அரசியல் வரலாற்றில் ஏவிஎம் ஸ்டூடியோ தவிர்க்க முடியாத ஒன்றாகும். பழம்பெரும் நடிகர்களான எம்ஜிஆர், சிவாஜி தொடங்கி இந்தக் காலத்தின் முன்னணி நாயகர்கள் வரை ஏவிஎம் நிறுவனத்தில் நடிக்காத நடிகர்களே இல்லை என்கிற அளவுக்கு பெரும்பாலான நடிகர்கள் இந்நிறுவனத்தின் தயாரிப்பில் நடித்துள்ளனர்.

தொடக்கத்தில், ஏவிஎம். 1934 ஆம் ஆண்டு கல்கத்தா சென்று 80 ஆயிரம் ரூபாய் செலவில் "அல்லி அர்ஜூனா" என்ற திரைப்படத்தை தயாரித்தார். முதல் திரைப்படமே தோல்வியை தழுவியது. அதனைத் தொடர்ந்து "ரத்னாவளி", "நந்தகுமார்" ஆகிய திரைப்படங்களை தயாரித்தார். அத்திரைப்படங்களும் நஷ்டத்தையே பரிசாகத் தந்தது.

இவ்வாறு அவர் தயாரித்த படங்கள் மூன்றும் தோல்வியை தந்த பிறகு, சொந்தமாக ஒரு ஸ்டூடியோவை தொடங்கினால் தான் நாம் லாபம் பார்க்க முடியும் என முடிவு எடுத்தார் ஏவிஎம். இதனைத் தொடர்ந்துதான் 1940 ஆம் ஆண்டு அவருக்கு நெருக்கமான சிலருடன் இணைந்து பிரகதி என்ற ஸ்டூடியோவைத் தொடங்கினார்.

இந்தப் புதிய ஸ்டூடியோவின் முதல் திரைப்படம் "பூகைலாஸ்" என்ற தெலுங்கு திரைப்படம். இத்திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனைத் தொடர்ந்து "வசந்த சேனா", "அரிச்சந்திரா", "சபாபதி", "என் மனைவி" போன்ற திரைப்படங்களை ஏவிஎம் தயாரித்தார். இத்திரைப்படங்கள் அனைத்தும் அமோக வெற்றி பெற்றது.

இந்தவேளையில்தான் இரண்டாம் உலகப்போர் மூண்டது. ஆதலால் "பிரகதி" ஸ்டூடியோவில் பல மாதங்களாக எந்த வேலையும் நடைபெறவில்லை. இதன் பிறகுதான் அவரது திரைப்பட வாழ்க்கையில் ஒரு வேடிக்கையான சம்பவம் நடந்தது.

"பிரகதி" ஸ்டூடியோவின் மூலம் "ஸ்ரீவள்ளி" என்ற திரைப்படத்தை தயாரித்தார் ஏவிஎம். இத்திரைப்படத்தை ஏவி.மெய்யப்பனே இயக்கினார். இத்திரைப்படம் வேற லெவலில் ஹிட் ஆனது. அதாவது இரண்டு லட்சம் பட்ஜெட்டை கொண்டு தயாரிக்கப்பட்ட "ஸ்ரீவள்ளி" திரைப்படம் பத்து மடங்குக்கும் மேல் லாபத்தை பெற்றுத் தந்திருக்கிறது.

"ஸ்ரீவள்ளி" திரைப்படத்தை தொடர்ந்து ஏவிஎம் காஷ்மீருக்கு ஓய்வுக்காக செல்ல "பிரகதி" ஸ்டூடியோவின் பார்ட்னர்கள் திடீரென ஸ்டூடியோவை விற்றுவிட்டார்கள். இது ஏவிஎம்க்கு பெரும் அதிர்ச்சியாகவும் ஏமாற்றமாகவும் இருந்தது.

இதனைத் தொடர்ந்து ஏவி மெய்யப்ப செட்டியார், இனிமேல் யாருடனும் கூட்டு சேராமல் தனக்கே சொந்தமான ஒரு ஸ்டூடியோவை உருவாக்க வேண்டும் என முடிவெடுத்தார். உடனே தனது சொந்த ஊரான காரைக்குடிக்குச் சென்று தேவக்கோட்டை ஜமீந்தாருக்கு சொந்தமான நாடக கொட்டகையை 3000 ரூபாய் வாடகைக்கு கேட்டு வாங்கினார். அந்த நாடக கொட்டகைக்கு தான் "ஏவிஎம்" ஸ்டூடியோஸ் என்ற பெயரை முதன் முதலில் வைக்கிறார் ஏவிஎம். வரலாறு தொடங்கியது. வேதாள உலகம்", "ராம்ராஜ்யம்" என இரண்டு வெற்றி படங்களை கொடுத்தார் ஏவிஎம். ஏவிஎம் -ன் தொடர் வெற்றியை பார்த்த தேவகோட்டை ஜமீன் கொட்டகையின் வாடகையை பத்தாயிரம் ரூபாயாக ஏற்றினார்.

இதனைத் தொடர்ந்துதான் ஏவிஎம் தனது ஸ்டூடியோவை சென்னைக்கு மாற்ற முடிவெடுத்தார். இவ்வாறான பெருமைக்குரிய ஏவிஎம் ஸ்டூடியோ, கால ஓட்டத்தில் இதன் ஒரு பகுதி அடுக்குமாடி குடியிருப்புகளாக மாறிவிட்டன. மிச்சமுள்ள இடங்களில் திரையரங்கம், டப்பிங் திரையரங்கம் மற்றும் எடிட் ஷூட் போன்றவை செயல்பட்டு வந்தன. சில ஆண்டுகளுக்கு முன்பு திரையரங்கம் மூடப்பட்டது. அதையடுத்து, அந்த இடம் புதுப்பிக்கப்பட்டு வந்தது. அத்தனை வேலைகளும் தற்போது நிறைவடைந்த நிலையில், தற்போது அந்த இடம் திருமணம், படப்பிடிப்பு, படப்பூஜை மற்றும் திரைப்பட நிகழ்ச்சிகளின் நடத்துவதற்கு ஏற்ப புதுப்பொலிவு பெற்றுள்ளது.

சற்றேறக்குறைய 7200 சதுர அடி பரப்பளவில் ரூம், ஹால் போன்றவை தயார் நிலையில் உள்ளன. ஏற்கெனவே, இங்கு படப்பிடிப்புகள் நடந்து வந்தநிலையில், இப்போது திருமணம் போன்ற நிகழ்வுகளும் நடைபெற இருக்கின்றன. தற்போது அதற்கான புக்கிங்குகளும் நடைபெற்று வருகின்றன.

இப்போதைக்கு, தமிழகத்தில் படப்பிடிப்பு மற்றும் திரைப்படம் தொடர்பான விழாக்களுக்கு ஒரு சில இடங்களே உள்ளன. தற்போது ஏவிஎம் ஸ்டூடியோ புதுப்பொலிவு பெற்றுள்ள நிலையில், மீண்டும் ஏவிஎம் ஸ்டூடியோ வளாகம் திரைப்படம் தொடர்பான விழாக்கள், படப்பிடிப்புகள் மற்றும் திரைப்படம் சார்ந்த பணிகளுக்கு தவிர்க்க முடியாத வளாகமாக இடம்பெறும் என்று கோலிவுட் வட்டாரம் குதூகலிக்கிறது என்றால் மிகையில்லை.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil