எம்ஜிஆரிடமே சண்டை போட்ட நடிகர் செந்தாமரைக்கு தில்லு ஜாஸ்தி தான்..!
கருணாநிதிக்கு ஆதரவாக எம்ஜிஆரிடமே சண்டை போட்ட நடிகர் செந்தாமரை (கோப்பு படங்கள்)
தமிழ்த்திரை உலகில் மிரட்டும் வில்லன்கள் வரிசையில் 1980ம் ஆண்டுகளில் மறக்க முடியாதவர் நடிகர் செந்தாமரை. இவரது வசன உச்சரிப்பு ஒன்று போதும். அழுகிற குழந்தை கூட பாலைக் குடித்து விடும். அவ்வளவு டெரர்ராக இருக்கும். சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த மூன்று முகம் படத்தில் தான் இந்த டயலாக் வரும். அந்த படத்தில் ரஜினிக்கே டஃப் கொடுத்து நடித்து அசத்தியிருப்பார். தங்கப்பதக்கம் படத்தில் முறுக்கிய மீசை, முரட்டுத்தோற்றம் என நடிகர் திலகத்துக்கே டஃப் கொடுத்தார்.
இவர் ஆரம்பகாலத்தில் எப்படி வளர்ந்தார்? சினிமாவிற்குள் நுழையும் முன் என்ன செய்தார் என்று பார்ப்போம்.
காஞ்சிபுரம் அருகில் உள்ள தியாகமுகச்சேரியில் பிறந்தார். அதன்பிறகு அவரது குடும்பம் காஞ்சிபுரத்திற்கு வந்து விட்டது. அங்கு தான் அந்த அதிசயம் நடந்தது. அவரது வீட்டுக்கு எதிரில் தான் அண்ணா வீடு. 10ம் வகுப்பு வரை படித்து இருந்தார். நடிப்பில் திறமையைக் காட்டி வந்தார். அதைக் கண்ட அறிஞர் அண்ணா அவரை கலைஞர் கருணாநிதியிடம் அனுப்பி வைக்க, அவரோ எம்ஜிஆருக்கு சிபாரிசு கடிதம் எழுதி அனுப்பி வைத்தார்.
அந்த வகையில் எம்ஜிஆரும் செந்தாமரையைத் தனது நாடக மன்றத்தில் இணைத்துக் கொண்டார். அப்போது சுமைதாங்கி, அட்வகேட் அமரன், இன்பக்கனவு என்ற 3 நாடகங்களில் நடித்தார். ஒருமுறை கலைஞரைப் பற்றிய விவாதம் எழுந்ததாம். அப்போது எம்ஜிஆருடன் செந்தாமரைக்கு மனஸ்தாபம் ஏற்பட்டதாம். அதனால் அந்த மன்றத்தில் இருந்தே செந்தாமரை வெளியேறி விட்டாராம். இதுபற்றி அறிந்த கலைஞரும் செந்தாமரையை அழைத்து என்ன நடந்தது என்று கேட்க, நான் யாரையும் குறை சொல்ல மாட்டேன்.
இது செல்ல சண்டை. சின்ன சண்டை அவ்வளவு தான் என்றாராம். இது கலைஞருக்கு கோபத்தை வரவழைத்து விட்டதாம். அந்த நேரத்தில் வேலை எதுவும் இல்லாமல் கஷ்டத்தில் இருந்ததைக் கேள்விப்பட்ட கலைஞர் அவரை சிவாஜி நாடக மன்றத்தில் இணைய உதவினாராம். அப்போது கலைஞர், செந்தாமரை இடையே பாசம் வளர ஆரம்பித்தது. திமுக ஊழியர், கட்சிப்பணி என பிஸிமேன் ஆனார் செந்தாமரை.
அப்போதும் கலைஞர் கிண்டலாக, யோவ் அன்னைக்கு என்ன தான் நடந்தது? சொல்ல மாட்டேல்ல...ன்னு கேட்டுள்ளார். விடுங்கண்ணே... அது பழங்கதை என்று அப்போதும் சொல்ல மறுத்து விட்டாராம் செந்தாமரை. அது மட்டுமல்ல. கடைசிவரை எம்ஜிஆரிடம் கலைஞருக்காக எதற்கு சண்டை போட்டார் என்பதை யாரிடமும் சொல்லவே இல்லையாம். அவரது மனைவியிடம் கூட சொல்லவில்லை என்பது தான் பெரிய விஷயம்.
கலைஞர் கருணாநிதி ஆட்சியில் இருந்த போது அடையாறு அரசு திரைப்படக்கல்லூரியில் நடிப்புப் பிரிவைத் தொடங்கினார். அதற்கு செந்தாமரையை அழைத்து இதற்கு நீ தான் தலைவர் என்றாராம். வேண்டாம் அண்ணே... நான் அதற்கு தகுதியானவன் இல்லை என்று மறுத்து விட்டாராம் செந்தாமரை.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu