ஆருத்ரா நிறுவன மோசடி தொடர்பாக நடிகர் ஆர்.கே. சுரேஷிடம் 7 மணி நேரம் விசாரணை

ஆருத்ரா நிறுவன மோசடி தொடர்பாக நடிகர் ஆர்.கே. சுரேஷிடம் 7 மணி நேரம் விசாரணை

நடிகர் ஆர்.கே. சுரேஷ்.

ஆருத்ரா நிறுவன மோசடி தொடர்பாக நடிகர் ஆர்.கே. சுரேஷிடம் போலீசார் 7 மணி நேரம் விசாரணை நடத்தி உள்ளனர்.

ஆருத்ரா கோல்டு நிறுவன மோசடி தொடர்பாக இன்று சுமார் 7 மணி நேரம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரின் நடிகர் ஆர்கே சுரேஷிடம் விசாரணை நடத்தினர்.

சென்னை அமைந்தகரையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த ஆருத்ரா கோல்டு நிறுவனம் முதலீட்டாளர்களுக்கு 25 முதல் 30 சதவீதம் வரை வட்டி தருவதாகக் கூறி கவர்ச்சிகரமாக விளம்பரம் செய்தது. இதனை உண்மை என நம்பி சுமார் ஒரு லட்சம் முதலீட்டாளர்கள் அந்த நிறுவனத்தில் முதலீடு செய்தனர். ஆனால் அந்த நிறுவனம் ரூ.2,438 கோடி மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக முதலீட்டாளர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் பொருளாதார குற்ற தடுப்பு பிரிவு போலீசார் 21 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

சினிமா நடிகர், தயாரிப்பாளர் மற்றும் பா.ஜ.க. ஓ.பி.சி. பிரிவு துணைத் தலைவராக உள்ள ஆர்.கே. சுரேஷுக்கு ஆருத்ரா மோசடியில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, உரிய ஆவணங்களுடன் நேரில் ஆஜராகும்படி ஆர்.கே.சுரேஷுக்கு சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பினர். ஆனால் அவர் ஆஜராகவில்லை. ஆர்.கே.சுரேஷ் துபாய் நாட்டுக்கு தப்பிச் சென்றதாக தகவல் வெளியானது.

இதையடுத்து நடிகர் ஆர்.கே.சுரேஷ் உட்பட நான்கு பேர் மீது லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. துபாயில் இருந்து ஆர்.கே.சுரேஷை இந்தியாவிற்கு வரவழைக்க போலீசார் தொடர் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தனர். இதையடுத்து இரண்டு நாட்களுக்கு முன் துபாயில் இருந்து சென்னை வந்த நடிகர் ஆர்.கே.சுரேஷிடம் விமான நிலையத்தில் வைத்து குடியுரிமை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் ஆருத்ரா கோல்ட் நிதி நிறுவன மோசடி வழக்கில் தலைமைறைவாக இருந்த ஆர்.கே.சுரேஷ் இன்று சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வேல்முருகன் விசாரணை நடத்தினார். ஆர்.கே.சுரேஷிடம் ஆருத்ரா கோல்டு நிறுவன மோசடி தொடர்பாக போலீசார், 7 மணிநேரம் விசாரணை நடத்தினர்.

விசாரணைக்கு பின்னர் வெளியில் செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.கே.சுரேஷ், "ஆருத்ரா நிறுவன மோசடி வழக்குக்கும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. விசாரணைக்கு ஏன் ஆஜராக முடியவில்லை என்பதற்கான விளக்கத்தை அளித்துள்ளேன். புத்தாண்டுக்காக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் துபாய் சென்றிருந்தேன். அங்கே மனைவிக்கு பிரசவமானது. குழந்தை பிறந்து 15 நாட்கள் ஐ.சி.யுவில் இருந்தது. அதனால், மாதாமாதம் மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டி இருந்தது. குழந்தையின் உடல்நலனை கருத்தில் கொண்டு அங்கே இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. அதை விசாரணையில் தெரிவித்துள்ளேன். லுக் அவுட் நோட்டீஸ் ரத்து செய்யப்படுவதற்காக காத்திருந்தேன். இப்போது நேரில் வந்து எனது தரப்பு விளக்கத்தை கொடுத்திருக்கிறேன். விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவேன். நாளையும் ஆஜராக உள்ளேன்." எனத் தெரிவித்துள்ளார்

ஆருத்ரா நிறுவன மோசடி தொடர்பாக அதன் நிர்வாக இயக்குனர் ராஜசேகர் ஏற்கனவே துபாயில் சர்வதேச போலீசாரால் கைது செய்யப்பட்டு அந்நாட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவரை இந்தியாவிற்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் தான் தற்போது நீண்டகாலமாக தலைமறைவாக இருந்த நடிகர் ஆர்.கே. சுரேசும் விசாரணைக்கு ஆஜராகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story