விருதுநகரில் இளஞ்சிவப்பு கலரில் மகளிர் வாக்குச்சாவடி மையம்

பெண்களுக்கு வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்த பிங்க் கலரில் வாக்குச் சாவடி அமைத்து விழிப்புணர்வு.

Update: 2021-04-01 05:13 GMT

விருதுநகரில் இளஞ்சிவப்பு நிற அனைத்து மகளிர் வாக்குச்சாவடி மையத்தை(Pink Polling Station)மாவட்ட தேர்தல் அலுவலர் கண்ணன் திறந்து வைத்தார்.

விருதுநகர் ஊராட்சி ஒன்றியம், ஆமத்தூரில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலம் 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி பெண்கள் மட்டும் பங்கேற்கும் இளஞ்சிவப்பு நிற மாதிரி வாக்குச்சாவடி மையத்தினை(Pink Polling Station), மாவட்ட தேர்தல்  அலுவலரும் கலெக்டருமான கண்ணன் திறந்து வைத்து பார்வையிட்டார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற  உள்ளதையொட்டி தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நாள்தோறும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், விருதுநகர் ஊராட்சி ஒன்றியம் ஆமத்தூரில் அனைத்து பெண்கள் மட்டும் பங்கேற்கும் இளஞ்சிவப்பு நிற மாதிரி வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டு தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

அதனடிப்படையில் மகளிர்களை கவரும் வகையில், இளஞ்சிவப்பு நிற வண்ணங்களால் அலங்கரிக்கப்பட்டு, பிரத்யேக வசதிகளுடன் உதவி மையம், முதியோர் ஓய்விடம், குழந்தைகள் விளையாடும் இடம், சாய்தளம் போன்றவை அமைக்கப்பட்டிருந்தன. வாக்குச்சாவடி நிலைய அலுவலர் அனைவரும் இளஞ்சிவப்பு நிற வண்ண உடைகளை அணிந்து வந்திருந்தனர். வாக்காளர்கள் வாக்களிக்க தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.  வாக்காளர்கள் வாக்குச் செலுத்தும் நடைமுறை, வாக்காளர்களை கொண்டு செயல்முறை விளக்கம் போன்றவை இளஞ்சிவப்பு நிற மாதிரி வாக்குச்சாவடி மையத்தில் செயல் விளக்கம்  காண்பிக்கப்பட்டது.

இந்த இளஞ்சிவப்பு நிற வாக்குச்சாவடி மையத்தில் வாக்குச்சாவடி முழுவதும் வண்ண நிற பலூன்கள், மற்றும் இளஞ்சிவப்பு நிற வண்ணங்களால் அலங்கரிக்கப்பட்டு, சுமார் 30-க்கும் மேற்பட்ட பெண்கள் இளஞ்சிவப்பு நிற உடைகளை அணிந்து இருந்தது  அங்குள்ள அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.

 சட்டமன்ற தேர்தலில் இந்த பகுதியில் உள்ள பெண்கள் அனைவரும் இந்த இளஞ்சிவப்பு நிற அனைத்து மகளிர் வாக்குச்சாவடி மையத்தில் தவறாமல் வாக்களித்து ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலர் கண்ணன் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் மங்களராமசுப்ரமணியன், திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) ஜெயக்குமார், உதவி இயக்குநர்(ஊராட்சிகள்) கணேசன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News