ராஜபாளையம் அருகே திமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறந்து வைத்த அமைச்சர்

ராஜபாளையம் அருகே திமுக சார்பில் நீர்மோர் பந்தலை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் திறந்து வைத்தார்.

Update: 2024-05-12 08:33 GMT

ராஜபாளையம் அருகே திமுக சார்பில் நீர் மோர் பந்தலை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் திறந்து வைத்தார்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் திமுக சார்பில், அமைக்கப்பட்ட நீர் மோர் பந்தலை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இந்த பந்தல் பலகையில், எம்.எல்.ஏ. படம் அச்சிடப் படாததால், அவரது ஆதரவாளர்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டது.

தற்போது தமிழகம் முழுவதும் கோடை வெயில் வறுத்தெடுத்து வருகிறது. வெயிலில்  தவித்து வரும் மக்களின் சிரமத்தை போக்குவதற்காக தமிழக முதல்வர் ஸ்டாலின் தமிழகம் முழுவதும் கோடை பந்தல் மற்றும் நீர்மோர் பந்தல் அமைக்கும்படி தனது கட்சியினருக்கு உத்தரவிட்டார்.இந்த  உத்தரவின் பேரில், விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் மற்றும்சுற்று வட்டார பகுதிகளில் திமுக சார்பில் ஆங்காங்கே கோடைகால நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக சத்திரப்பட்டி சாலையில் உள்ள திரையரங்கம் அருகே, விருதுநகர் தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில், கோடை கால நீர்மோர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பந்தலை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் திறந்து வைத்து, பொது மக்களுக்கு குடிநீர், பழங்கள், மோர், குளிர்பானம் உள்ளிட்டவைகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், திமுக எம்.எல்.ஏ. தங்கபாண்டியன்,  தனுஷ் குமார் எம்பி, தற்போதைய எம்பி வேட்பாளர் ராணி ஶ்ரீ குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பொது மக்கள் போட்டி போட்டுக் கொண்டு குடிநீர் மற்றும் பழங்களை வாங்கிச் சென்றனர்.

நீர்மோர் பந்தல் திறப்பு குறித்து பந்தலில் வைக்கப்பட்ட பிளக்ஸ் பலகையில் எம்.எல்.ஏ .தங்கப் பாண்டியன் படம் அச்சிடப் படாததால், அவரது ஆதரவாளர்கள் அதிருப்தி தெரிவித்தனர்.

Tags:    

Similar News