தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி ஆலய வைகாசி விசாக திருவிழா
தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி ஆலய வைகாசி விசாக தேரோட்ட திருவிழா மிக சிறப்பாக நடைபெற்றது.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் வைகாசி விசாக தேரோட்ட திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. வரும் 19ம் தேதி திருக்கல்யாணமும், 21ம் தேதி தேரோட்டமும் நடைபெற உள்ளது.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே தேவதானத்தில் பாண்டி நாட்டு பஞ்சபூத ஸ்தலங்களில் ஆகாய தலமாக விளங்கும் தவம் பெற்ற நாயகி உடனுறை நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி திருக்கோயில் உள்ளது. இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான இக் கோயிலில் வைகாசி விசாக தேரோட்ட திருவிழா ஆண்டு தோறும் சிறப்பாக நடைபெறும்.
இந்த ஆண்டு வைகாசி விசாக திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. மேள தாளங்கள் முழங்க கொடி மரத்திற்கு, பால், தயிர், மஞ்சள், இளநீர், சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப் பட்டு சிறப்பு வழிபாடுகள் நடத்தப் பட்டன.
இதனையடுத்து சுவாமி மற்றும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப் பட்டு திருவிழா தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் அப் பகுதியை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
திருவிழாவின் ஒவ்வொரு நாளும் சுவாமி மற்றும் அம்மன் உற்சவர் சிலைகள், ரிஷப வாகனம், அன்ன வாகனம், புஷ்ப பல்லக்கு உள்ளிட்ட வாகனங்களில் வீதி உலா நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் வரும் 19ம் தேதி ஞாயிற்றுக்கிழமையும், தேரோட்டம் வரும் 21ம் தேதி செவ்வாய்க்கிழமையும் நடைபெற உள்ளது.