விருதுநகர் ஆட்சியர் அலுவலகத்தில் பட்டாசு தொழிலாளி குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பட்டாசு தொழிலாளி ஒருவர் குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்றார்.

Update: 2021-09-13 13:30 GMT

தீக்குளிக்க முயன்ற கருப்பசாமியை போலீசார் மீட்டு அழைத்துச் சென்றனர்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வடபட்டி புதூரைச் சேர்ந்தவர் கருப்பசாமி. இவருக்கு திருமணமாகி 2 மகள்கள் உள்ளனர். அவர்கள் இருவரும் மனவளர்ச்சி குன்றியவர்கள்.

சிவகாசி அருகே சாமி நத்தத்தில் உள்ள கிருஷ்ணகுமார் பட்டாசு ஆலையில் போர்மேன் ஆக கருப்பசாமி பணியாற்றி வந்துள்ளார். நான்கு ஆண்டுகளாக இவருக்கு ஊதியம் கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதுபற்றி பட்டாசு ஆலை உரிமையாளரிடம் கேட்டபோது ஊதியத்தை அவர் கொடுக்க மறுத்துள்ளார்.

இதுதொடர்பாக மல்லி காவல் நிலையத்தில் கருப்பசாமி புகார் அளித்துள்ளார். அப்போது மாதம் ரூபாய் 4000 வீதம் ஊதியம் வழங்குவதாகவும் ஆலை உரிமையாளர் உறுதியளித்துள்ளார். ஆனால் கூறியபடி ஊதியத்தை கொடுக்காமல் இழுத்தடிப்பு செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் மனவேதனை அடைந்த கருப்புசாமி தனது மனைவி மற்றும் மகளுடன் நேற்று விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தார். அப்போது திடீரென உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்றார்.

இதைக்கண்ட போலீசார் ஓடிச்சென்று கருப்பசாமியை தடுத்து நிறுத்தினர். மேலும் சூலக்கரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று கருப்பசாமி மற்றும் அவரது குடும்பத்தினரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News