நலம் தரும் யோகா விழிப்புணர்வு நிகழ்ச்சி
வந்தவாசியில் நலம் தரும் யோகா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
வந்தவாசியில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு நலம் தரும் யோகா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைப்பெற்றது.
வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு நலம் தரும் யோகா விழிப்புணர்வு நிகழ்ச்சி தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்விற்கு கல்வி மைய முதல்வர் சீனிவாசன் தலைமை தாங்கினர். வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடேசன், சப் இன்ஸ்பெக்டர் ரமேஷ், சமூக ஆர்வலர் எழிலரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ரெட் கிராஸ் சங்க உறுப்பினர் சதானந்தன் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக, ஓய்வுபெற்ற மாவட்ட மருத்துவ இணை இயக்குநர் டாக்டர் குமார் பங்கேற்று, சர்வதேச யோகா தினம் பற்றியும், உடல் நலமும் மன நலமும் சரியாக இருந்தால் மட்டுமே வாழ்க்கையில் உன்னத நிலையை அடைய முடியும் எனவும், எனவே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உடற்பயிற்சி மற்றும் யோகாசனங்களை தினசரி செய்திட வேண்டும் என்று கூறினார்.
மேலும் ஊட்டச்சத்து மிக்க உணவு வகைகளை அனைவரும் உண்ண வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மேலும் மாநில, மத்திய அளவில் யோகா பயிற்சி முகாமில் சிறப்பிடம் பெற்ற 9 ஆம் வகுப்பு மாணவன் கோபாலகிருஷ்ணன் பல்வேறு யோகாபயிற்சிகளை நிகழ்த்தி காட்டினார். அவருக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
தொடர்ந்து வந்த பிரேம், பூங்குயில் சிவக்குமார், வந்தை குமரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். வந்தவாசி மனவளக்கலை யோகா அறக்கட்டளை நிர்வாகிகள் சம்பத் அடிப்படை யோக முத்திரைகள் குறித்து விளக்கினார்.
இந்த நிகழ்வில் செஞ்சிலுவை சங்க நிர்வாகிகள் , மருத்துவர்கள் , செவிலியர்கள், யோகா அறக்கட்டளை உறுப்பினர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். இறுதியில் முதுகலை ஆசிரியர் ராஜ்குமார் நன்றி கூறினார்.