கீழ்நமண்டியில் இரண்டாம் கட்ட அகழாய்வுப் பணிகள்
கீழ்நமண்டியில் இரண்டாம் கட்ட அகழாய்வுப் பணிகளை காணொளியில் தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
கீழாடி, வந்தவாசி கீழ்நமண்டி 2-ம் கட்ட அகழாய்வு பணிகளை, முதல்- அமைச்சர் ஸ்டாலின் தலைமைச் செயலகத்திலிருந்து காணொளியில் தொடங்கி வைத்தார். அதேசமயத்தில் கீழ்நமண்டியில்நடைபெற்ற நி க ழ்ச் சி யி ல் திருவண்ணாமலை ஆட்சியர் பாஸ்கரபாண்டியன் பங்கேற்றார்.
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் இருந்து சுமாா் 18 கி.மீ. தொலைவில் கீழ்நமண்டி கிராமம் உள்ளது.
இந்தக் கிராமத்தில் ஆய்வு மேற்கொண்ட வரலாற்று ஆய்வுக் குழுவினா், சுமாா் 55 ஏக்கா் பரப்பளவில் சுமாா் 2,500 ஆண்டுகளுக்கு முந்தைய இரும்பு கால புதைவிடம் மற்றும் வாழ்விடம் இருப்பதையும், இதில், 50-க்கும் மேற்பட்ட இரும்பு கால கல்வட்டங்கள் இருப்பதையும் கண்டறிந்தனா்.
இதைத்தொடா்ந்து, தமிழக தொல்லியல் துறை சாா்பில் கீழ்நமண்டி பகுதியில் முதல் கட்ட அகழாய்வு செய்யும் பணிகள் கடந்த 2023-ஆம் ஆண்டு ஏப். 6-ஆம் தேதி முதல் செப். 30-ஆம் தேதி வரை நடைபெற்றது.
இந்த முதல் கட்ட அகழாய்வின்போது புதைவிடம் மற்றும் வாழ்விட பகுதிகளில் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது. புதைவிட பகுதியில் 12 அகழாய்வு குழிகளும், வாழ்விட பகுதியில் 10 அகழாய்வு குழிகளும் தோண்டப்பட்டன. புதைவிட பகுதியின் அகழாய்வில் மொத்தம் 21 ஈமப்பேழைகள் கண்டறியப்பட்டன.
அவற்றில் 6 ஈமப்பேழைகள் மட்டுமே முழுமையான நிலையில் உள்ளன. மற்றவை உடைந்த நிலையில் காணப்படுகின்றன. ஈமப்பேழைகளானது பொதுவாக 6 முதல் 12 கால்களுடன் நீள்வட்ட வடிவத்தைகொண்டுள்ளது. இவைகளால் வனையப்பட்ட சிவப்பு நிற மட்பாண்டம் வகையை சார்ந்துள்ளது. புதைவிட பகுதியில் 30- க்கும் மேற்பட்ட கீறல் குறியீட்டு பானை ஓடுகள் மற்றும் இரும்பு பொருள்கள், எலும்பு, தந்தத்திலான மணிகள், பட்டை தீட்டப்பட்ட கற்கோடாரி உள்ளிட்ட 47 தொல்பொருள்களும் கண்டெடுக்கப்பட்டன.
இந்த நிலையில், இரண்டாம் கட்ட அகழாய்வுப் பணிகள் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இந்தப் பணிகளை சென்னையில் இருந்தவாறு முதல்வா் ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்தாா்.
இதையொட்டி, கீழ்நமண்டி அகழாய்வு மையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் பாஸ்கர பாண்டியன், செய்யாறு சாா் -ஆட்சியா் பல்லவி வா்மா, ஆரணி மக்களவை உறுப்பினா் தரணிவேந்தன், வந்தவாசி எம்எல்ஏ அம்பேத்குமாா், கீழ்நமண்டி அகழாய்வு மைய இயக்குநா் விக்டா் ஞானராஜ், மைய பொறுப்பாளா் சுரேஷ், தெள்ளாா் ஒன்றியக் குழுத் தலைவா் கமலாட்சி இளங்கோவன், கீழ்நமண்டி ஊராட்சி மன்றத் தலைவா் சங்கா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
இதைத் தொடா்ந்து நடைபெற்ற இரண்டாம் கட்ட அகழாய்வுப் பணிகளை ஆட்சியா் பாஸ்கர பாண்டியன் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
மேலும், முதல் கட்ட அகழாய்வின்போது கண்டெடுக்கப்பட்ட தொல்பொருள்கள் பொதுமக்களின் பாா்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.