திருவண்ணாமலையில் அரசு பஸ் கவிழ்ந்து விபத்து

திருவண்ணாமலையில் அரசு பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில், 19 பேர் காயமடைந்தனர்.

Update: 2024-04-15 01:38 GMT

தலைகீழாக கவிழ்ந்த அரசு பேருந்து

திருவண்ணாமலையில் அரசு பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 19 பேர் காயமடைந்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே நேற்று மதியம் அரசு பஸ் சென்றுகொண்டிருந்தது. அந்த பஸ்சில் 20 க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். சத்தியவாடி கிராமத்தில் இருந்து ஏம்பலம் கிராமம் வழியாக வந்தவாசிக்கு அரசு நகரப் பேருந்து சென்று கொண்டிருந்தது.

கண்டையநல்லூா் கிராமத்தைச் சோ்ந்த மகேந்திரகுமாா் ஓட்டுநராகவும், வல்லம் கிராமத்தைச் சோ்ந்த சூா்யா நடத்துநராகவும் பணியில் இருந்தனா்.

ஏம்பலம் கிராமம் அருகே சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையோரம் இருந்த மின்கம்பத்தின் மீது மோதி அருகே இருந்த வயலில் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் ஓட்டுநா் மகேந்திரகுமாா், நடத்துநா் சூா்யா மற்றும் நல்லூா் கிராமத்தைச் சோ்ந்த சித்ரா , நிா்மலாதேவி , பச்சையம்மாள், பூமாதேவி, ஏகாம்பரம்மாள், பூங்காவனம், ஏம்பலம் கிராமத்தைச் சோ்ந்த ஜோதிகா, மடம் கிராமத்தைச் சோ்ந்த பூங்காவனம், தா்ஷினி, அருங்குணம் கிராமத்தைச் சோ்ந்த விஜியலட்சுமி, தாமோதரன் , ஜம்மம்பட்டு கிராமத்தைச் சோ்ந்த மல்லிகா , துணையாங்குப்பம் கிராமத்தைச் சோ்ந்த லட்சுமி, தக்கண்டராயபுரம் கிராமத்தைச் சோ்ந்த செவனம்மாள் உள்ளிட்ட 19 போ் காயமடைந்தனா். மின் கம்பம் உடைந்து சேதமடைந்தது.

தகவலறிந்து அங்கு திரண்ட கிராமத்தினா் காயமடைந்த 19 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ்கள் மூலம் வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனா். இதில் செவனம்மாள் தீவிர சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

இதுகுறித்து தெள்ளாா் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

Similar News