பூஜை பொருட்கள் வாங்க திரண்டவர்களால் திருவண்ணாமலையில் போக்குவரத்து நெரிசல்

திருவண்ணாமலை கடைவீதியில் மக்கள் கூட்டம் அலைமோதியதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது

Update: 2022-10-04 01:06 GMT

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்வதற்கு நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள். 

ஆயுத பூஜை பண்டிகை இன்று (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தன்று அனைத்து வீடுகள், தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், கடைகளில் பொரி, பழங்கள், சர்க்கரை, இனிப்புகள் வைத்து பூஜை செய்வார்கள். மேலும் வாழை மரக்கன்றுகள் கட்டியும், பூமாலை அணிவித்தும், திருஷ்டி பூசணிக்காய் உடைத்தும் வழிபடுவார்கள்.

அரசு நிறுவனங்கள் கல்வி நிறுவனங்களில் தொடர் விடுமுறை காரணமாக நேற்று அலுவலகங்களில் ஆயுத பூஜை நடைபெற்றது.திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தினமும் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

மேலும் ஞாயிற்றுக்கிழமை மற்றும் விடுமுறை நாட்களில் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.

பூஜைக்குத் தேவையான பூ, பழம், காய்கறி உள்ளிட்ட பொருட்களை வாங்க தேரடி தெருவில் பொதுமக்கள் அதிகளவில் வந்தனர்.

பொதுமக்கள் அதிகம் திரண்டதால் தேரடி வீதி ,மாட வீதிகளில் வாகன போக்குவரத்து அதிக அளவில் இருந்தது. திருவண்ணாமலை முக்கிய ரோடுகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.தொடர் விடுமுறை காரணமாக அருணாச்சலேஸ்வரர் கோயிலுக்கு வரும் பக்தர்களின் கூட்டம் மிக அதிக அளவில் இருந்தது.

பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு ஒரு மணி நேரத்திற்கு மேல் காத்திருந்தனர்.கோவிலுக்கு வரும் பக்தர்களின் வாகனங்களும் மாட வீதிகளில் நிறுத்தப்பட்டிருந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளதால் கோயிலை ஒட்டியுள்ள வடஒத்தவாடை வீதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த பகுதியில் வாகனங்கள் குறுக்கும், நெடுக்குமாக வாகனங்கள் நிறுத்தப்படுவதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்குள்ளாகி உள்ளனர்.வாகனங்களை நிறுத்துவதற்கு போதிய பார்க்கிங் வசதியும் இல்லை.

அதேபோல் கிரிவலம் செல்வோரின் எண்ணிக்கையும் மிக அதிக அளவில் இருந்தது.கோவிலுக்கு வரும் பக்தர்களின் வாகனங்கள் நிறுத்துவதற்கு கோயில் சார்பாக எந்த விதமான ஏற்பாடுகளும் செய்யவில்லை என பக்தர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

இன்னும் வரும் காலங்களில் கார்த்திகை தீபம் வர இருப்பதால் பக்தர்களின் கூட்டம் மிக அதிகமாக இருக்கும்.  எனவே கோவில் நிர்வாகம் , நகராட்சி நிர்வாகம் , போக்குவரத்து காவல்துறையினருடனும் கலந்து ஆலோசித்து மாவட்ட நிர்வாகம் இதற்கு தீர்வு காண வேண்டும் என பக்தர்கள் தெரிவித்தனர்.

வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த பகுதியில் ஏற்படும் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த போலீசாரை பணியில் ஈடுபடுத்த வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில் பூ, பழம் மற்றும் காய்கறிகளின் விலை பலமடங்கு உயர்ந்தது. ஒரு கிலோ மல்லிகை பூ அதிகபட்சமாக ரூ.1500 வரைக்கும் விற்பனை செய்யப்பட்டது.

இதேபோல், ஜாதிமல்லி பூ ரூ.500, செவ்வந்தி பூ ரூ.300, அரளிப்பூ ரூ.300, பட்டு பூ ரூ.90, சம்பங்கி ரூ.400, செண்டு மல்லிகை பூ ரூ.100, ஒரு தாமரை பூ ரூ. 40, என, விற்பனை செய்யப்பட்டது.

இதேபோல் பழம் மற்றும் காய்கறிகளின் விலையும் அதிகமாக இருந்தது. ஒரு கிலோ ஆப்பிள் ரூ.280, ஆரஞ்சு ரூ.220, மாதுளை ரூ.300,அண்ணாசி பழம் ரூ.90, வாழைப்பழம் ரூ.50 முதல் ரூ.100ஆகிய விலைகளில் விற்பனை செய்யப்பட்டது. 

இதேபோல் பூஜைக்கு தேவையான வாழைக்கன்றுகள், ஒரு ஜோடி வாழைக்கன்று ரூ.90 முதல் ரூ.100 வரைக்கும் விற்பனை செய்யப்பட்டது. ஆயுத பூஜைக்கு மிக முக்கிய பொருளான பூசணிக்காய் ரூபாய் 100 முதல் 200 வரை விற்பனை செய்யப்படுகிறது.

Tags:    

Similar News