திருவண்ணாமலை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை

7 வயது சிறுவனின் தொண்டையில் சிக்கிய கோலிக்குண்டை திருவண்ணாமலை அரசு மருத்துவமனை டாக்டர்கள் அறுவை சிகிச்சையின்றி அகற்றினார்கள்.

Update: 2021-10-16 07:31 GMT

சிறுவன் தொண்டையிலிருந்து கோலிகுண்டை அகற்றிய மருத்துவர் குழு

திருவண்ணாமலை வேட்டவலத்தை சேர்ந்த 7 வயது சிறுவனின் தொண்டையில் சிக்கிய கோலிக்குண்டை திருவண்ணாமலை அரசு மருத்துவமனை டாக்டர்கள் அறுவை சிகிச்சையின்றி அகற்றினார்கள்.

வேட்டவலம் பெரியார்தெருவை சேர்ந்த கார் டிரைவர் சிலம்பரசன். இவருடைய மகன் அஸ்வின் (வயது 7), அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறான். கடந்த 14-ந் தேதி கோலிக்குண்டு விளையாட்டை விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது அவன் வாயில் கோலிக்குண்டை போட்டிருந்ததாக தெரிகிறது. இந்த நிைலயில் எதிர்பாராத விதமாக கோலிக்குண்டை விழுங்கியதால் அவனுடைய தொண்டையில் சிக்கி உணவுக்குழாயின் மேல்பகுதியில் நின்றது.

அதனால் அஸ்வினால் எச்சில் கூட விழுங்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனை பார்த்து அலறிதுடித்த பெற்றோர் அவனை உடனடியாக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அஸ்வினை பரிசோதித்த டாக்டர்கள் உடனடியாக கோலிக்குண்டை அறுவை சிகிச்சை இன்றி அகற்ற முடிவு செய்தனர். அதைத்தொடர்ந்து முதற்கட்டமாக மாணவனுக்கு மயக்க மருந்து கொடுக்கப்பட்டது.

அதையடுத்து காது, மூக்கு, தொண்டை துறைத்தலைவர் இளஞ்செழியன், மயக்கவியல் துறைத்தலைவர்கள் பாலமுருகன், ஸ்ரீதரன் ஆகியோர் மேற்பார்வையில் டாக்டர்கள் செந்தில்ராஜா, சிந்துமதி, ராஜசெல்வம் மற்றும் செவிலியர்கள் அடங்கிய குழுவினர் அஸ்வினின் தொண்டையில் சிக்கிய கோலிக்குண்டை, மேஜில் போர்சஸ் என்ற கருவியில் சில மாற்றம் செய்து அறுவை சிகிச்சையின்றி வெற்றிகரமாக அகற்றினர்.

இதேபோல் செங்கம் அருகே உள்ள மேல்புழுதியூரை சேர்ந்த முபாரக்பாஷா மகன் முத்தார்கான் (5). வீட்டில் இருந்த கைக்கெடிகாரத்தில் உள்ள சிறிய அளவிலான பேட்டரியை எடுத்து விளையாடினான். அப்போது அதனை விளையாட்டாக காதின் உள்ளே போட்டு விட்டான். சிறிதுநேரத்தில் காது வலி எடுக்கவே திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். முத்தார்கான் காதில் இருந்த பேட்டரியை அதே மருத்துவக்குழுவினர் சிறிதுநேர போராட்டத்துக்கு பின்னர் அகற்றினர். தற்போது அஸ்வின், முத்தார்கான் நலமுடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News