அரசு கலைக்கல்லூரியில் கலந்தாய்வு நடைபெறாததால் மாணவர்கள் சாலை மறியல்

திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரியில் கலந்தாய்வு நடைபெறாததால் மாணவர்கள், பெற்றோர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2022-09-18 02:12 GMT

திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரியில் கலந்தாய்வு நடைபெறாததால் மாணவர்கள் மற்றும் பெற்றோர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

திருவண்ணாமலை கலைஞர் கருணாநிதி அரசு கலைக் கல்லூரியில் பி.ஏ. ஆங்கிலம் மற்றும் தமிழ் பட்டப்படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கான 3-ம் கட்ட கலந்தாய்வு 17-ந் தேதி நடைபெறும் என கல்லூரி நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த கலந்தாய்வுக்காக திருவண்ணாமலை மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தங்களின் பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் நேற்று காலை கலைஞர் கருணாநிதி அரசு கலைக் கல்லூரிக்கு வந்து காத்திருந்தனர். காலை 10 மணி வரை கல்லூரி திறக்கப்படாமல் அலுவலர்கள் யாரும் வராமல் இருந்து உள்ளனர். மேலும் கல்லூரியில் கலந்தாய்வும் நடைபெறவில்லை.

மதியத்திற்கு மேல் வருவார்கள் என்று எதிர்பார்த்து காத்திருந்த பொதுமக்கள் நேற்று மாலை  எந்தவித முன்னறிவிப்புமின்றி கலந்தாய்வு நிறுத்தப்பட்டு உள்ளதால் மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர் திருவண்ணாமலை- செங்கம் சாலையில் கல்லூரி முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த திருவண்ணாமலை டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பின்னர் அவர்களை சமாதானம் செய்து சாலையில் இருந்து கல்லூரி வளாகத்திற்கு அழைத்து வந்து பேசினர். அப்போது மாணவர்களும், அவர்களின் பெற்றோர்களும் எந்தவித அறிவிப்பும் இல்லாமல் எப்படி கலந்தாய்வை நிறுத்தலாம், இதுகுறித்து கல்லூரியின் அறிவிப்பு பலகையிலாவது நோட்டீஸ் ஒட்டி இருக்கலாமே, மாற்று கலந்தாய்வு மீண்டும் எப்போது நடைபெறும் என்றனர்.

அப்போது இன்ஸ்பெக்டர் கல்லூரி நிர்வாகத்திடம் பேசி முறையாக கலந்தாய்வு குறித்து அறிவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறினார். இதையடுத்து மாணவர்கள் மற்றும் அவர்களின்  பெற்றோர்கள் எதிர்காலம் குறித்து கேள்விக்குறியோடு கல்லூரி நிர்வாகத்திடம் இருந்து தகவல் வருமா என எதிர்பார்த்து சென்றனர். இச்சம்பவம் குறித்து கல்லூரி பணியாளர்களிடம் கேட்டபோது விரைவில் மாணவர்களுக்கு கலந்தாய்வு குறித்து தெரிவிக்கப்படும் என தெரிவித்தனர்

Tags:    

Similar News