கார்த்திகை மகாதீபம்: கிரிவலப்பாதையில் அன்னதானம் வழங்க 226 குழுக்களுக்கு அனுமதி

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் தீபத்தன்று அன்னதானம் வழங்க 226 குழுக்களுக்கு அனுமதி சான்றிதழை கலெக்டர் வழங்கினார்.

Update: 2022-11-29 01:27 GMT

அன்னதான அனுமதிச்சான்று உணவு பாதுகாப்பு துறை மூலம் மாவட்ட ஆட்சியர் முருகேஷ் சம்பந்தப்பட்ட நபர்களிடம் வழங்கி பேசினார்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மகாதீபம் வருகிற 6-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது. மகாதீபத்தன்று கிரிவலம் செல்ல லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

கிரிவலம் செல்ல வருகை தரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க மாவட்ட நிர்வாகத்தின் மூலம் 27 பொது இடங்கள் மற்றும் 157 தனியார் இடங்கள் தேர்வு செய்யப்பட்டு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த இடங்களில் உணவு பாதுகாப்புத்துறையில் அனுமதி பெற்றவர்கள் மட்டுமே அன்னதானம் வழங்க அனுமதி அளிக்கப்படும் என மாவட்ட நிர்வாகத்தின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக கடந்த 22-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை விண்ணப்ப படிவம் பெறப்பட்டது.

அந்த மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு கார்த்திகை தீபத்தன்று திருவண்ணாமலை நகரில் 112 குழுக்களுக்கும் கிரிவலப் பாதையில் 114 குழுவிற்கும் மொத்தம் 226 குழுக்களுக்கும் அன்னதானம் வழங்க மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அனுமதி அளிக்கப்பட்டது அதற்கான சான்று உணவு பாதுகாப்பு துறை மூலம் மாவட்ட ஆட்சியர் முருகேஷ் சம்பந்தப்பட்ட நபர்களிடம் வழங்கினார்.

அப்போது கலெக்டர் முருகேஷ் பேசியதாவது:அன்னதான வழங்குவோர் பக்தர்களுக்கு தரமான உணவு வழங்க வேண்டும்.இலையில் மட்டுமே அன்னதானம் வழங்க வேண்டும். தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் தட்டுகளில் அன்னதானம் வழங்கக்கூடாது.குடிநீர் வசதி ஏற்படுத்த வேண்டும். பிளாஸ்டிக் பாக்கெட்டில் தண்ணீர் வழங்கக்கூடாது.

உணவு கழிவு பொருட்களை போடுவதற்கு ஏதுவாக குப்பை தொட்டிகளை ஏற்பாடு செய்து அன்னதானம் அளிப்பவர்களை உணவு கழிவுகளை சேகரித்து அகற்ற வேண்டும். அன்னதானம் வழங்கும் இடத்தை சுத்தம் செய்து விட்டு செல்ல வேண்டும். வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாதவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.இக்கூட்டத்தில் உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் ராமகிருஷ்ணன், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் எழில் ராஜா, சிவபாலன், சுப்பிரமணி ஆகியோர்  கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News