மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் சிறப்பு மருத்துவ முகாம்கள்

Free Medical Camp- மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் ஒருங்கிணைந்த நலத்திட்ட உதவிகளுடன் கூடிய சிறப்பு மருத்துவ முகாம்கள் வரும் 10ம் தேதி நடைபெற உள்ளது.

Update: 2022-08-08 01:45 GMT

பைல் படம்.

Free Medical Camp- மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் ஒருங்கிணைந்த நலத்திட்ட உதவிகளுடன் கூடிய சிறப்பு மருத்துவ முகாம்கள் திருவண்ணாமலையில் வருகிற 10-ந் தேதி தொடங்குகிறது.

இதுகுறித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலமாக மாற்றுத்திறனாளிகளின் முழுமையான மறுவாழ்வினை கருத்தில் கொண்டு அரசு பலவகையான நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதனைத்தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் செயல்படுத்தப்படும் நலத்திட்டங்கள் மட்டுமின்றி பல்வேறு அரசு துறைகள் மற்றும் இதர நிறுவனங்களின் பங்களிப்புடன் மாற்றுத்திறனாளிகளுக்கு அனைத்து மறுவாழ்வு உதவிகள் பெறுவதற்கு ஒருங்கிணைந்த நலத்திட்ட உதவிகளுடன் கூடிய சிறப்பு மருத்துவ முகாம்கள் திருவண்ணாமலை மாவட்டத்தில் நடத்தப்பட உள்ளது. இந்த முகாம்கள் வருகிற 10-ந் தேதி (புதன்கிழமை) முதல் தொடங்கி செப்டம்பர் மாதம் 22-ந் தேதி வரை நடக்கிறது.

அதன்படி வருகிற 10-ந் தேதி திருவண்ணாமலை நகராட்சி டவுன் ஹால் நடுநிலைப்பள்ளியில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாம்கள் மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் குறிப்பிட்ட நாட்களில் வட்டாரம் வாரியாக நடைபெற உள்ளது. இதில் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்குதல், மத்தியஅரசின் தனித்துவம் வாய்ந்த யூ.டி.ஐ.டி. அடையாள அட்டை ஆன்லைன் பதிவு, வருவாய்த்துறை மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மாதாந்திர உதவித்தொகை, மானியத்துடன் கூடிய வங்கிகடன், ஆவின் பார்லர், தொழில்திறன் மேம்பாட்டு பயிற்சி, சிறப்பு பள்ளிகள், இல்லங்கள், இளம் சிறார்களுக்கான கல்வி மற்றும் பயிற்சி சேர்க்கை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் நலத்திட்டஉதவிகள், உதவி உபகரணங்கள், முதல்வரின் விரிவான மருத்துவகாப்பீட்டு திட்டம் போன்றவை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

மாற்றுத் திறனாளிகள் அசல் மற்றும் நகல் மருத்துவ சான்றுடன் கூடிய மாற்றுத்திறனாளி அடையாள அட்டை, ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், புகைப்படம் 4 ஆகியவற்றை கொண்டு வர வேண்டும். சிறப்பு முகாம்கள் காரணமாக வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக வளாகத்தில் நடைபெறும் முகாம் தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது. மீண்டும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெறும் முகாம் தேதி பின்னர் அறிவிக்கப்படும். இந்த தகவலை கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News