போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்

வழிப்பறி சம்பவங்கள் நடப்பதால் இரவிலும், பகலிலும் பொதுமக்கள் இருசக்கர வாகனங்களில் அல்லது நடந்து செல்வதற்கு அச்சப்படுகிறார்கள்.

Update: 2022-02-11 10:00 GMT

போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம் தச்சம்பட்டு போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியாக பாவப்பட்டு, கண்ணமடைகாடு, காட்டாம்பூண்டி உள்ளிட்ட பகுதிகள் உள்ளன.

திருவண்ணாமலை-மணலூர்பேட்டை சாலையில் மேற்கண்ட கிராமங்கள் வழியாக இரவில் நடந்தும், வாகனங்களிலும் தனியாகச் செல்பவர்களை கொள்ளையர்கள் வழிமறித்து, அவர்களிடம் இருக்கும் நகை, பணம் மற்றும் பொருட்களை பறித்துச் செல்லும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு மேற்கண்ட வழியாகச் சென்ற ஊராட்சி மன்ற தலைவரை மர்மநபர்கள் தாக்கி அவரிடம் இருந்து பணம், செல்போனை பறித்துச் சென்றுள்ளனர். இதுகுறித்து ஊராட்சி மன்ற தலைவர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

அதேபோல் தொடர்ந்து வழிப்பறி சம்பவங்கள் நடப்பதால் இரவிலும், பகலிலும் பொதுமக்கள் இருசக்கர வாகனங்களில் அல்லது நடந்து செல்வதற்கு அச்சப்படுகிறார்கள். இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு பலமுறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கைகளும் எடுக்கவில்லை, எனக் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் 500-க்கும் மேற்பட்டோர் நேற்று காலை 10 மணியளவில் தச்சம்பட்டு போலீஸ் நிலையத்துக்கு வந்து முற்றுகையிட்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். 

அப்போது இரவில் திருவண்ணாமலை-மணலூர்பேட்டை சாலை நெடுகிலும் மின்விளக்குகள் இன்றி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் சாலையில் செல்பவர்களிடம் வழிப்பறியில் ஈடுபடும் கொள்ளையர்கள் அச்சுறுத்தி வருகின்றனர்.

எனவே சாலையில் மின்விளக்குகளை அமைக்க வேண்டும், போலீஸ் சோதனைச் சாவடி அமைக்க வேண்டும். இரவில் போலீசார் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட வேண்டும், வழிப்பறியில் ஈடுபடுபவர்களை கைது செய்து, அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், எனக் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து போலீசார், சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Tags:    

Similar News