அருணாச்சலேஸ்வரர் கோவிலில் நவராத்திரி 6 ம் நாள் விழா!

திருவண்ணாமலையில் அம்மன் கோவில்களில் நவராத்திரி ஆறாம் நாள் விழா சிறப்பாக நடைபெற்றது.

Update: 2024-10-09 00:54 GMT

ஆண்டாள் அலங்காரத்தில் பராசக்தி அம்மன்

சிவனுக்கு ஒரு ராத்திரி, அம்பிகைக்கு நவராத்திரி என்பார்கள்.

நவராத்திரி ஒன்பது நாளும் அம்பிகையைக் கொண்டாடவேண்டும். பெண் குழந்தைகளையும் சுமங்கலிகளையும் அம்பாளாகவே பாவித்து வீட்டுக்கு அழைத்து மங்கலப் பொருட்கள் வழங்குவது சுபகாரியங்களை தடையின்றி நடத்தி வைக்க வல்லது.

இந்த ஒன்பது நாளும் கொலு வைப்பதும் புண்ணிய. கொலுவை தரிசிப்பதும் புண்ணியம். ஆகவே கொலு வைப்பவர்கள் வீடுகளுக்குச் சென்று பிரார்த்தனை செய்வது இல்லத்தில் நல்ல நல்ல சத்விஷயங்களை நடத்தி அருளும் என்பது ஐதீகம்.

அதன்படி திருவண்ணாமலையில் உலகப்புகழ் பெற்ற அண்ணாமலையார் திருக்கோயில், துர்க்கை அம்மன் திருக்கோயில், காமாட்சி அம்மன் திருக்கோயில், ஸ்ரீ சேஷாத்ரி ஆசிரமம், ஸ்ரீ ரமணாஸ்ரமம், உள்ளிட்ட கோயில்களில் கடந்த 3 ம் தேதி முதல் துவங்கி நவராத்திரி விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.

நவராத்திரி விழாவின் 6 ஆம் நாளான நேற்று இரவு உலகப் பிரசித்தி பெற்ற அண்ணாமலையார் திருக்கோயிலில் பராசக்தி அம்மன் ஆண்டாள் அலங்கார ரூபத்தில் ஆஸ்தான மண்டபத்தில் இருந்து வான வேடிக்கைகள் முழங்க புறப்பட்டு, திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து சிறப்பு பூஜைகள் , தீப ஆராதனை நடைபெற்றது. அப்போது, ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர்.

மகான் ஸ்ரீ சேஷாத்திரி ஆசிரமம்

நவராத்திரி விழாவின் 6 ஆம் நாளான நேற்று இரவு ஸ்ரீ சந்தான லட்சுமி அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார்.

காலை சிறப்பு ஹோமம், ஸ்ரீ துர்க்கை அம்மன், ஸ்ரீ மானசா தேவி திருமேனிகளுக்கு அபிஷேக அலங்காரம் சிறப்பு பூஜைகள் நடைபெற்ற பின்பு பக்தர்களுக்கு சிறப்பு அன்னதான பிரசாதங்கள் வழங்கப்பட்டது. சேஷ கான இசைமணி அப்பு குழுவினரின் சிறப்பு நாதஸ்வர இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது.

மேலும் திருவண்ணாமலை சின்ன கடை தெருவில் உள்ள துர்க்கை அம்மன் திருக்கோவில், காமாட்சி அம்மன் திருக்கோவில், கல்யாண கிணறு மாரியம்மன் திருக்கோவில், மாட வீதியில் அமைந்துள்ள திரௌபதி அம்மன் திருக்கோவில், அங்காளம்மன் திருக்கோவில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் கன்னிகா பரமேஸ்வரி திருக்கோவில், அய்யங்குளம் அருணகிரிநாதர் திருக்கோவில் , நேரடி தெரு காவல் நிலையத்தில் உள்ள உண்ணாமுலையம்மன் திருக்கோவில், அக்ரஹாரம் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் உள்ளிட்ட இடங்களில் நவராத்திரி விழாவின் 6 ஆம் விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

Similar News