திருவண்ணாமலையில் நகைக்காக கடத்தப்பட்ட சிறுமி 5 மணி நேரத்தில் மீட்பு

திருவண்ணாமலையில் நகைக்காக கடத்தப்பட்ட 1ஆம் வகுப்பு மாணவியை 5 மணி நேரத்தில் காவல் துறையினர் மீட்டனர்.

Update: 2022-08-12 11:03 GMT

திருவண்ணாமலை மாரியம்மன் கோவில் தெருவைச்சேர்ந்தவர் ரிஸ்வானா (வயது30). இவரது கணவர் பெயர் சாகுல் அமீத். வெளிநாட்டில் வேலை செய்துவருகிறார்.

இவர்களது 6 வயது மகள் ஒன்றாம் வகுப்பு படித்துவருகிறார். வழக்கம்போல், காலை அவரது தாய் ரிஸ்வானா 8.40 மணியளவில் மாணவியை பள்ளியில் விட்டுச்சென்றுள்ளார்.

மாணவியின் காதில் தங்க கம்மல் இருந்துள்ளது. இதை கவனித்த மர்ம நபர் 9 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்து மாணவியிடம் நைசாக பேசி திருவண்ணாமலை ரெயில் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளார்.

மாணவிக்கு தின்பண்டங்கள் மற்றும் வாட்டர் பாட்டிலை வாங்கி கொடுத்துவிட்டு, மாணவி காதில் அணிந்திருந்த கம்மலை கழட்டிக்கொண்டு மாணவியை திருவண்ணாமலையில் இருந்து திருப்பதி செல்லும் மன்னார்குடி விரைவு ரயிலில் ஏற்றிவிட்டுள்ளார்.

இந்நிலையில், மாணவியின் தாய் ரிஸ்வானா மதிய உணவு கொடுக்கும்பொழுது பள்ளியில் மாணவி காணாமல் போனது குறித்து தகவல் அறிந்து, உடனடியாக திருவண்ணாமலை நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து திருவண்ணாமலை காவல் துறையினர் தேடுதல் பணியைத்தொடங்கினர்.

இதனிடையே காட்பாடி ரயில்வே ஜங்ஷனில் நின்ற மன்னார்குடி ரயிலில் இருந்து மாணவி கீழே இறங்கி உள்ளார். யாரும் இல்லாமல் ரயில்வே நிலையத்தில் இருந்த மாணவியை கண்ட ரயில்வே காவல் துறையினர் உடனடியாக மீட்டு மாணவியிடம் விசாரித்ததில் மாணவி திருவண்ணாமலை சேர்ந்தவர் எனவும்; திருவண்ணாமலை ரயில் நிலையத்திலிருந்து வந்ததாகவும்; தனது தாய், தந்தை பள்ளி விவரங்கள் குறித்து தெரிவித்துள்ளார்.

உடனடியாக திருவண்ணாமலை ரயில்வே காவல் நிலையம் மூலமாக திருவண்ணாமலை நகர காவல் நிலையத்திற்கு ரயில்வே போலீசார் தொடர்புகொண்டு உள்ளனர்.

இந்நிலையில் திருவண்ணாமலை நகர காவல் நிலையத்தைச்சேர்ந்த உதவி ஆய்வாளர் வேணுகோபால், உடனடியாக காட்பாடி ரயில்வே காவல்துறை காவல் நிலையத்திற்குச்சென்று மாணவியை மீட்டு, அவரது பெற்றோருடன் பத்திரமாக அனுப்பி வைத்தார்.

காணாமல் போன ஒன்றாம் வகுப்பு மாணவியை 5 மணி நேரத்தில் மீட்ட காவல்துறைக்கு பெற்றோர் மற்றும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

மேலும் பள்ளி மற்றும் ரயில்வே நிலையத்தில் உள்ள 10க்கும் மேற்பட்ட சி.சி.டி.வி. கேமரா பதிவை வைத்து மாணவியைக் கடத்திய குற்றவாளி குறித்தும், பள்ளியில் விட்டுச் சென்ற மாணவி எவ்வாறு கடத்தப்பட்டார் என்பது குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்

Tags:    

Similar News