இன்ஜினியர், அரசு பஸ் கண்டக்டர் வீடுகளில் மர்ம நபர்கள் கைவரிசை

திருவண்ணாமலையில் இன்ஜினியர், அரசு பஸ் கண்டக்டர் வீடுகளில் 22 பவுன் நகைகள், ரூ.4 லட்சம் ரொக்கத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

Update: 2022-05-28 10:54 GMT

பைல் படம்.

திருவண்ணாமலை தாலுகா சாரோன் கரியார் செட்டி தெரு பகுதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவர் மும்பையில் மரைன் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார்.

இவரது மனைவி சவுமியா. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். ராதாகிருஷ்ணன் விடுமுறைக்கு திருவண்ணாமலைக்கு வந்து விட்டு கடந்த வாரம் மீண்டும் மும்பை திரும்பினார்.

சவுமியா நேற்று கொளக்குடியில் உள்ள அவரது தாய் வீட்டிற்கு மகனுடன் சென்றார். இந்த நிலையில் அதிகாலையில் அவரது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளதாக அக்கம்பக்கத்தினர் சவுமியாவிற்கு தகவல் தெரிவித்து உள்ளனர்.

இதையடுத்து அவர் உடனடியாக அங்கிருந்து வீட்டிற்கு வந்து பார்த்தார். பின்னர் அவர் வீட்டிற்குள் சென்று பார்த்த போது அங்கிருந்த பொருட்கள் கலைந்து காணப்பட்டுள்ளது.

மேலும் பீரோ திறக்கப்பட்டு அதில் இருந்த பொருட்கள் கீழே சிதறி கிடந்து உள்ளது. மேலும் வீட்டில் வைத்திருந்த 12 பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் ரொக்கம் மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதேபோல் அதே பகுதியில் அரசு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக பணியாற்றி வரும் ஜெய்சங்கர் என்பவரின் வீட்டிலும் கொள்ளை சம்பவம் நடைபெற்று உள்ளது.

இவரது மனைவி மற்றும் குழந்தைகள் சங்கராபுரம் அருகில் அவரது மாமியார் வீட்டிற்கு சென்று உள்ளனர். ஜெய்சங்கர் இரவு வெளியே சென்று விட்டு அதிகாலையில் வீட்டிற்கு வந்து பார்த்த போது மர்ம நபர்கள் அவரது வீட்டிற்கு முன்பக்க கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்று வீட்டில் பையில் வைத்திருந்த 10 பவுன் நகை மற்றும் ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் ரொக்கத்தை கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது தெரியவந்தது.

இது குறித்து ஜெய்சங்கர் மற்றும் சவுமியா ஆகியோர் தனித் தனியாக திருவண்ணாமலை கிழக்கு போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

மேலும் கைரேகை நிபுணர்களை வரவழைத்து கைரேகைகளை பதிவு செய்யப்பட்டது. மொத்தம் இந்த 2 வீடுகளில் இருந்து 22 பவுன் நகை மற்றும் ரூ.4 லட்சம் ரொக்கம் மர்ம கும்பலால் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News