முறைகேடுகள் நடந்த அரசு விடுதிகளில் துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் : கலெக்டர் எச்சரிக்கை

முறைகேடுகள் நடைபெற்ற ஆதிதிராவிடர் விடுதிகள் குறித்து பட்டியல் தயார் செய்யப்பட்டு வருகிறது-கலெக்டர் முருகேஷ்

Update: 2022-04-30 01:30 GMT

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையில் கீழ் 102 அரசு மாணவர்கள், மாணவிகள் தங்கும் விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த விடுதிகள் முறையாக செயல்படவில்லை என்ற புகார்கள் எழுந்தது.  கடந்த சில தினங்களுக்கு முன்பு கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திலும் இதுகுறித்து விவாதிக்கப்பட்டது.

அதனால் விடுதிகளில் வார்டன்கள் முறையாக தங்குகின்றனரா, மாணவர்கள் விடுதியில் தங்குகின்றனரா, விடுதிகள் பாதுகாப்பான முறையில் உள்ளதா போன்றவை குறித்து கடந்த 25-ந் தேதி கலெக்டர் முருகேஷ் மற்றும் உயர் அதிகாரிகள் அனைவரும் ஒவ்வொரு விடுதியிலும் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு முறை, உணவு பொருட்கள் இருப்பு விவரம், வருகை பதிவேடு, மாணவர்களின் எண்ணிக்கை, கல்வித்தரம், கழிவறை வசதி உள்ளதா, குடிநீர் வசதி உள்ளதா போன்றவை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில் பல விடுதிகளில் மாணவர்கள் இல்லாததும், மாணவர்கள் இருந்தும் வார்டன் இல்லாததும், வளாகம் தூய்மையாக இல்லாமலும் இருந்தது தெரியவந்தது. மேலும் சில விடுதிகளில் வருகை பதிவேடுகள் முறையாக வைக்கப்படாமலும் உள்ளிட்ட முறைகேடுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்து நேற்று கலெக்டர் முருகேஷ் செய்தியாளர்களிடம் கூறும்போது

முறைகேடுகள் நடைபெற்ற விடுதிகள் குறித்து பட்டியல் தயார் செய்யப்பட்டு வருகிறது. முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் குறித்து சம்பந்தப்பட்ட ஆணையாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. அதன் மூலம் துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மாவட்டத்தில் உள்ள விடுதிகளின் வார்டன்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. இதனால் பணியிடை நீக்கம் நடவடிக்கை எடுக்க முடியாத நிலை உள்ளது. பணியிடை நீக்கம் நடவடிக்கை மேற்கொண்டால் வார்டன் பற்றாக்குறை ஏற்படும். இதனால் விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படும்.  இதுகுறித்து சம்பந்தப்பட்ட ஆணையர்களிடம் கலந்து பேசி விரைவில் தீர்வு காணப்படும் என தெரிவித்தார்.

Tags:    

Similar News