திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் மன்மத தகனம் விழா

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் அய்யங்குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி, மன்மத தகனம் நடைபெற்றது

Update: 2022-05-15 01:15 GMT

அய்யங்குளத்தில் தீர்த்தவாரி

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்திரை வசந்த உற்சவ விழாவை முன்னிட்டு மன்மத தகனம் நிகழ்ச்சி நேற்று இரவு  நடைபெற்றது.

அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் 10 நாட்கள் சித்திரை வசந்த உற்சவம் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டிற்கான சித்திரை வசந்த உற்சவம் கடந்த 5-ந் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. விழாவையொட்டி தினமும் காலையில் உற்சவ மூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெறுகிறது. மேலும் இரவு சுமார் 7 மணியளவில் கோவில் 3-ம் பிரகாரத்தில் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதன் பின்னர் பாவை பெண் சுவாமி அம்பாள் மீது பூ கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.

வசந்த உற்சவம் நிறைவு விழாவான நேற்று பகல் 12.30 மணி அளவில் அய்யங்குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரரும், பராசக்தி அம்மனும் சிறப்பு அலங்காரத்தில் தனித்தனி வாகனத்தில் எழுந்தருளி கோவிலை சுற்றியுள்ள மாட வீதியை வலம் வந்தனர். பின்னர் அய்யங்குளத்திற்கு மங்கள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக வந்தனர். அய்யங்குளத்தில் உள்ள மண்டபத்தில் சாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது. அதைத் தொடர்ந்து அய்யங்குளத்தில் சூல ரூபத்திற்கு தீர்த்தவாரி நடந்தது. இதில் பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அய்யங்குளத்திற்கு எதிரில் உள்ள அருணகிரிநாதர் கோவிலில் சாமிக்கும், பராசக்தி அம்மனுக்கும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தொடர்ந்து கோபால விநாயகர் கோவிலில் சாமிக்கு மண்டகப்படியும், இரவு 10 மணி அளவில் கோவில் கொடிமரம் அருகில் மன்மத தகனமும் நடைபெற்றது. 

மன்மத தகனம்:

பங்குனி உத்திரத்தில் சிவன் பார்வதிக்கு திருமணம் நடைபெறும். அவர்கள் ஒன்று சேர பிரம்மாவால் படைக்கப்பட்ட தட்சிணாமூர்த்தியும் நான்கு முனிவர்களும் சேர்ந்து சுப ஓரைகள் குறித்து தருகின்றனர். அந்த நேரத்தில் சிவன் ஆழ்ந்த தியானத்தில் இருந்து விட அவரை எழுப்ப படாத பாடுபட்டனர். மேளதாளங்கள் வாணவேடிக்கைகள் சிவபெருமானின் தியானத்தை கலைக்க முடியவில்லை. இதை எடுத்து மன்மதனை வரவழைத்து மன்மத பானம் விட செய்தனர். இதனால் கோபம் கொண்ட சிவபெருமான் மன்மதனை அழிக்கப் புறப்பட்டார். இதற்காக தான் பத்து நாள் உற்சவம் நடக்கிறது. ஐந்தாவது நாள் மற்றும் ஏழாவது நாள் விழாவில் இருட்டில் மன்மதனை தேடும் நிகழ்வு நடைபெற்றது. நேற்று விழாவின் நிறைவாக மன்மதனை சுட்டுப் பொசுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தீர்த்தவாரி முடிந்த பிறகு நேற்று இரவு அண்ணாமலையார் உண்ணாமலை அம்மனுக்கு 16 வகையான தீபாராதனை காட்டப்பட்டது. மகா தீபாராதனை முடிந்ததும் மூன்றாம் பிரகாரத்தை வலம் வந்த பிறகு உண்ணாமலையம்மன் யதாஸ்தானம் சென்றடைய தன் மீது அம்பு எய்த மன்மதனை தனது நெற்றிக் கண்ணால் அழிக்க அண்ணாமலையார் புறப்பட்டார்.  இதற்காக கோயிலின் மூன்றாவது பிராகாரத்தில் தங்கக் கொடிமரம் முன்பு கையில் வில்லோடு 20 அடி உயரம் கொண்ட பிரம்மாண்டமான மன்மத பொம்மை உருவாக்கப்பட்டிருந்தது. எதிரில் நிறுத்தப்பட்டிருந்த அண்ணாமலையாரின் முன்பு இருந்து பாய்ந்து வந்த தீ மன்மதன் மீது பற்றி எரிந்தது அப்போது வானவேடிக்கை நிகழ்ச்சியும் நடைபெற்றது. மன்மதன் எரிக்கப்பட்ட சாம்பலை காம வினைகள் கண் திருஷ்டி போக வீட்டில் வைத்துக் கொள்வதற்காக பக்தர்கள் எடுத்துச் சென்றனர். சிவாலயங்களில் அண்ணாமலையார் கோயில் மட்டுமே இந்த மன்மத தகனம் நடைபெறுவது சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் அசோக்குமார் தலைமையிலான அலுவலர்கள் செய்தனர். 

Tags:    

Similar News