திருவண்ணாமலை மாடவீதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடக்கம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலை சுற்றியுள்ள மாட வீதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி இன்று தொடங்கியது.

Update: 2022-05-20 07:02 GMT

ஆக்கிரமிப்புகள் பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றப்பட்டது. 

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலை சுற்றியுள்ள மாட வீதியில் திருப்பதிக்கு இணையான சிமெண்டு சாலை அமைக்கப்படும் என்று நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலின் போது முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்குறுதி அளித்தார்.

இந்த வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக சமீபத்தில் அண்ணாமலையார் கோவில் மாடவீதியில் சிமெண்டு சாலை அமைப்பதற்கான பணியை அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைத்தார். மாட வீதியில் முதற்கட்டமாக பே கோபுரம் பகுதி மற்றும் பெரிய தெருவில் சிமெண்டு சாலை அமைக்கப்பட உள்ளது.

இதற்காக சாலை ஆக்கிரமிப்புகள் ஏதேனும் உள்ளதா என்று கணக்கிடும் பணி நிறைவடைந்தது. இந்த நிலையில் பே கோபுரம் பகுதியில் சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி இன்று தொடங்கியது. இந்த பணியில் திருவண்ணாமலை நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் முரளி மேற்பார்வையில் உதவி கோட்ட பொறியாளர் கே.ரகுராமன் தலைமையில் உதவி பொறியாளர் ஆ.கலைமணி மற்றும் அதிகாரிகள் ஈடுபட்டனர். அப்போது சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்து சிமெண்டு சிலாப்புகள், தகர சீட்டுகள், விளம்பர கம்பங்கள் போன்றவை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றப்பட்டது. ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நிறைவடைந்த பின்னர் கால்வாய் அமைக்கப்பட்டு, சிமெண்டு சாலை அமைக்கும் பணி நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News