விவசாயிகளுக்கு உதவிடும் வகையில் வேளாண்மை துறையின் செயல்பாடுகள்: உற்பத்தி ஆணையர்

விவசாயிகளுக்கு உதவிடும் வகையில் வேளாண்மை துறையின் செயல்பாடுகள் இருக்க வேண்டும் என்று வேளாண்மை உற்பத்தி ஆணையரும், அரசு செயலருமான சமயமூர்த்தி கூறினார்.

Update: 2022-07-24 00:45 GMT

வேளாண்மை மற்றும் வேளாண்மை சார்ந்த துறைகளின் ஆய்வு கூட்டத்தில் வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் வேளாண்மை - உழவர் நலத்துறை மற்றும் வேளாண்மை துறை சார்ந்த துறைகள் மூலம் செயல்படுத்தப்படும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் மற்றும் இதர திட்டங்கள் குறித்த ஆய்வு கூட்டம் திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்  நடைபெற்றது. கலெக்டர் முருகேஷ் முன்னிலை வகித்தார். வேளாண்மை உற்பத்தி ஆணையரும், அரசு செயலாளருமான சமயமூர்த்தி தலைமை தாங்கினார். கூட்டத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் செயல்படுத்தப்படும் அனைத்துத திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

மேலும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தில் தரிசு நிலத்தினை சாகுபடிக்கு கொண்டு வருவது குறித்தும், தரிசு நிலத் தொகுப்புகள் விடுபாடின்றி கண்டறியவும், திட்டத்தின் மூலம் வழங்கப்படும் நலத்திட்டங்கள் மற்றும் பொருட்கள் சரியான முறையில் பயன்படுத்தப்படுகின்றதா எனவும், இத்திட்டத்தில் 2021-22-ம் ஆண்டு 122 கிராம பஞ்சாயத்துக்களில் தென்னை மரக்கன்றுகள் சரியான முறையில் வினியோகம் செய்யப்படுகிறதா, அதுமட்டுமின்றி வரப்பு பயிராக உளுந்துவிதை வினியோகம், கை மற்றும் விசை தெளிப்பான், ஜிப்சம், ஜிங்க் சல்பேட் ஆகியவைகள் வினியோகம் செய்யப்பட்டு வருவது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

தொடர்ந்து 2022-23-ம் ஆண்டு, 223 கிராம பஞ்சாயத்துக்களில் பயிர் உற்பத்தியை பெருக்கி விவசாயிகளின் வாழ்வாதரத்தினை மேம்படுத்தவும் மற்றும் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று வேளாண்மை உற்பத்தி ஆணையர் வலியுறுத்தினார். தோட்டக்கலைதுறை மூலம் புதிய தொழில் நுட்பங்கள், பழக்கன்றுகள் மற்றும் அதிக மகசூல் தரும் வீரிய ரகங்கள் குறித்து விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திடவும், வேளாண்மை பொறியியல்துறை மூலம் தேர்வு செய்யப்பட்ட தொகுப்புகளில் ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கவும், நிலத்தடி நீர் மேம்படுத்த பண்ணைக்குட்டைகள் அமைக்கவும், மின்-வணிகம் குறித்தும் துறைவாரியான அலுவலர்களிடம் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், வேளாண்மைத்துறை மூலம் வழங்கப்படும் அனைத்து திட்டங்களும் சிறப்பான முறையில் செயல்படுத்த வேண்டும். விவசாய மக்களின் கோரிக்கைகள், அவர்களின் அத்தியாவசிய தேவைகளை உடனடியாக கேட்டறிந்து அவர்களுக்கு உதவிடும் வகையில் வேளாண்மை துறையின் செயல்பாடுகள் இருக்க வேண்டும் என்றார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, வேளாண்மை இணை இயக்குனர் பாலா, வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண்மை பொறியியல்துறை, வேளாண்மைவணிகம் மற்றும் விற்பனைத் துறை, விதைச்சான்று துறைகளை சார்ந்த அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News