பஸ்சில் தவறவிட்ட 15 பவுன் நகையை பயணியிடம் ஒப்படைத்த நேர்மையான டிரைவர்

Tiruvannamalai News Today-திருவண்ணாமலையில் இருந்து சென்னைக்கு சென்ற பயணி தவறவிட்ட 15 பவுன் நகையை சம்பந்தப்பட்டவரிடம் பஸ் டிரைவர் ஒப்படைத்தார்.

Update: 2022-08-08 01:39 GMT

நேர்மையான அரசு பஸ் டிரைவர் சிவகுமாரிடம் தான் தவறவிட்ட பொருட்களை பெற்றுக் கொண்ட பயணி

Tiruvannamalai News Today- திருவண்ணாமலை தாலுகா அத்திப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் சிவக்குமார். இவர் திருவண்ணாமலை மண்டல போக்குவரத்து கழகத்திற்கு உட்பட்ட தேனிமலை பணிமனையில் அரசு பஸ் டிரைவராக பணியாற்றி வருகிறார்.

இவர் நேற்று திருவண்ணாமலையில் இருந்து சென்னை செல்லும் நடத்துனர் இல்லா பஸ்சை திருவண்ணாமலை பஸ் நிலையத்தில் இருந்து சென்னைக்கு காலை 8.15 மணியளவில் ஓட்டி சென்றார். மதியம் சுமார் 12.15 மணிக்கு சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்திற்கு அந்த பஸ் சென்றது. பயணிகள் அனைவரும் இறங்கியவுடன் பஸ்சை உரிய இடத்தில் நிறுத்தி விட்டு டிரைவர் சிவக்குமார் இறங்கி சென்றார். 15 நிமிடம் கழித்து மீண்டும் பஸ்சில் ஏறிய அவர் தனது சீட்டின் பின்புறம் பெண் பயணி ஒருவரின் கைப்பை இருப்பதை கண்டார். யாரோ பயணி தவறி விட்டுவிட்டு சென்றுவிட்டார் என்று எண்ணியவாறு அதை எடுத்த அவர் அதில் முகவரி ஏதேனும் இருக்கிறதா என பார்த்துள்ளார்.

அதில் விலை உயர்ந்த செல்போனும், நகை பெட்டியும் இருந்துள்ளதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் உள்ள நேர காப்பாளருக்கு அவர் தகவல் தெரிவித்தார்.

இந்த நிலையில் 12.45 மணிக்கு பதற்றத்துடன் அழுதவாறு பெண் ஒருவர் கோயம்பேடு பஸ் நிலையத்தில் திருவண்ணாமலை பஸ்கள் நிற்கும் இடத்தில் இருந்த ஒவ்வொரு பஸ்சாக பார்த்துக் கொண்டே வந்தார்.

இதை கவனித்த சிவக்குமார் அந்த பெண் தனது பஸ்சில் வந்தவர் என்பதை அறிந்து அவரை அழைத்து விசாரித்தபோது பஸ்சில் பையை தவறவிட்டு விட்டேன் என்று கூறியுள்ளார். அதில் 15 பவுன் நகையும், பணமும், செல்போனும் உள்ளது என அழுது கொண்டே கூறினார். அந்த பெண்ணை ஆசுவாசப்படுத்திய சிவக்குமார் பஸ் நிலைய நேரக்காப்பாளர் முருகன் முன்னிலையில் அந்த பையை பெண் பயணியிடம் ஒப்படைத்தார்.

அதை திறந்து பார்த்த அவர் அதில் பணம், நகை, செல்போன் அனைத்தும் பத்திரமாக உள்ளது என கூறி கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார். மேலும் திருவண்ணாமலையை சேர்ந்த அரசு பஸ் டிரைவர் சிவக்குமாரின் நேர்மையை திருவண்ணாமலை மண்டல போக்குவரத்து கழகத்தினர் பாராட்டினர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News